Search This Blog

Dec 8, 2011

சிவவாக்கியம் (251-255) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (251-255)


சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -251
உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும்
வெண்மையாகி நீரிலே விரைந்து நீரதானதும்
தன்மையான காயமே தரித்து உருவம் ஆனதும்
தொன்மையான ஞானிகாள் தெளிந்துரைக்க வேணுமே.  
 

உண்மையான விந்துவே சுக்கிலமாகி உயிர் உருவாக உபாயமாக இருந்ததையும், அது வெண்மை நிறமாகி செம்மை நிறமான நாதமான சுரோணிதத்தில் விரைந்து கலந்து நீராகி நின்று உடம்பு உருவானதையும் இருவினைக்கு ஒப்ப உடம்பும் உயிரும் தன்மையாகி உருவம் தரித்து உலகில் பிறந்து வாழ்வதையும் அனைத்தயும் அறிந்துணர்ந்த தெளிந்த ஞானம் பெற்ற குருமார்கள் தெளிவாக சீடருக்கு சொல்லித் தர வேண்டும். 
    
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -252 
வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே
அஞ்செழுத்தின் உண்மையை அறிவிலாத மாந்தர்காள்
வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லிரேல்
அஞ்செழுத்தின் உண்மையை அறிந்துகொள்ளலாகுமே.


வஞ்சகத்தை நெஞ்சில் வைத்து இம்மானிடப் பிறவியின் மேல் ஆசைக் கொண்டு அல்லல்பட்டு அலையும் மனிதர்களே! அஞ்செழுத்தால் ஆனா இப்பிறவியையும் இதன் அருமையையும், உண்மையையும் அறியாமல் இருக்கின்றீர்கள். இனி பிறவா நிலையடைய இவ்வஞ்சகப் பிறவியை யோக ஞான சாதகத்தால் வதைத்து ஆசைகளை வேரறுத்து அன்பினால் உள்ளம் உருகி தியானம் செய்ய வல்லவரானால் அந்த அஞ்செழுத்தே உங்களிடம் சிவமாக இருக்கும் உண்மையை அறிந்து கொள்ளலாம். 
 
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -253
காயிலாத சோலையில் கனியுகந்த வண்டுகள்
ஈயிலாத தேனையுண்டு இராப்பகல் உறங்குநீர்
பாயிலாத கப்பலேறி அக்கரை
ப் படு முனே
வாயினால் உரைப்பதாகுமோ மவுன ஞானமே.
  
காயே இல்லாமல் கனிகள் நிரந்த மாஞ்சோலையில், கனிக்குள் புகுந்த வண்டுகள், அதன் சுவையை உண்டு இரவு பகல் எந்நேரமும் அதிலேயே இருந்து அழிந்துவிடுவதைப் போல் உலக இன்பங்களில் வீழ்ந்து உறங்கி உழலும் மாந்தர்களே! உங்களுக்குள் காயிலாத கனிகள் நிறைந்த கற்பகத்தருவை அறிவீர்களா? இராப்பகல் இல்லாத இடத்தை தனக்குள் அறிந்துணர்ந்த ஞானிகள் கனியை வண்டுகள் போல் தங்கள் நினைவாலே ஞான யோகத்தால் சுற்றி சுற்றி தமது சகஸ்ரதளத்தில் ஈயில்லா தேனாக இருக்கும் அமுதத்தை உண்டு பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பர். பாய்மரம் இல்லா கப்பலான உடலில் உள்ள உயிரினை அறிந்து இப்பிறவிக் கடல் கடக்க வாசியினால் சிவபோகம் செய்து அமுதம் உண்டு அப்பாலுக்கப்பலாய் இருக்கும் ஈசனை சேருங்கள். இதுவே மோன ஞான இன்பம். இதனை வாயிநாளோ எழுத்தினாலோ விவரித்து சொல்லவே முடியாது. அதைச் சொல்லவும் கூடாது. அவரவர் மெய்ப்பாட்டால் அடையும் சுகமே மவுன ஞானம்.     

****************************************************
சித்தர் சிவவாக்கியம் - 254
பேய்கள் பேய்கள் என்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள்
பேய்கள் பூசை கொள்ளுமோ பிடாரி பூசை கொள்ளுதோ
ஆதி பூசை கொள்ளுமோ அநாதி பூசை கொள்ளுதோ
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே.
 .
பேய்கள், பிசாசுகள் என்று பொய்களைப் பிதற்றி அதற்கென பூசைகள் போடும் பேய்க் குணம், கொண்டோர்களே! பேய்கள் பூசைகளை ஏற்றுக் கொள்ளுமோ? பிடாரி பூசையை ஏற்றுக்கொள்கின்றதா? ஆதிசக்தி பூசையை ஏற்றுக்கொள்ளுமோ? அநாதியான ஈசன் பூசையை ஏற்றுக்கொள்கின்றதா? உடலெடுத்து உலாவும் பேராசைப் பேய்களான மனிதனே பூசை செய்து அதனால் பணமும் பொருளும் பறித்து ஏமாற்றி வாழ்ந்து சாகிறார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.
 
     
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 255
மூலமண்டலத்திலே முச்சதுரம் ஆதியாய்
நாலுவாசல் எம்பிரான் நடு உதித்த மந்திரம்
கோலி எட்டிதழுமாய் குளிர்ந்தலர்ந்த தீட்டமாய்
மேலும் வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே.
 

நம் உடலில் மூலமண்டலமான உயிரில் மூச்சானது முக்கோண வட்டச் சக்கரத்தில் சதுர்முகமாக ஆதியாக வாலையாய் அமைந்து இயங்குகின்றது. நான்கு வாசல் எனும் வித்து, புழுக்கம், முட்டை, கர்ப்பம் ஆகிய வகைகளிலும் வரும் உயிர்கள் அனைத்திலும் எம்பிரான் ஆனா ஈசன் நடுவில் அமர்ந்து ஒரேழுத்து மந்திரமாய் உள்ளான். அதுவே வளர்ந்து எண்சாண் உடம்பாகவும் இரண்டான உயிராகவும் குளிர்ந்தலர்ந்த தீட்டாகவும் உள்ள காவியில் கலந்து சோதியான சிவமாய் உறைந்து நிற்கின்றது. இதைத் தவிர வேறு இறைவணக் காண்கிலேன். இதுவே அனைத்துமாய் விளைந்து இப்பூமியெங்கும் சிவமயமாய் இருக்கின்றது.     
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
  

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!