

அரவிந்தரின் ஆத்மா சமர்ப்பணம் (இறுதிப் பகுதி)
ஸ்ரீ அரவிந்தரின் ‘ஆத்ம சமர்ப்பணம்’ என்பது, ஆன்மா விடுதலை அடைய வழி செய்யும் ஒரு யோக நெறியாகும். யோகம் சித்தி பெற உதவும் உயர்ந்த சில முறைகளுள் இதுவும் ஒன்று. ‘சமர்ப்பணம்’ என்ற தத்துவத்தின் ஆன்மிக அடிப்படைகளைச் சுருக்கமாகக் இறுதிப் பதிவில் தொடருகின்றது. மேலும் தொடருவோம் இனிய நண்பர்களே!!!
‘சமர்ப்பணம்’ என்ற தத்துவத்தின் ஆன்மிக அடிப்படைகளைச் சுருக்கம்:
1. ‘கடந்தகால நிகழ்ச்சிகள் முடிந்து போனவை. நடந்தது நடந்ததுதான். இனி அது பற்றிச் செய்வதற்கு ஒன்றும் இல்லை’ என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொண்டு இருக்கின்றோம். ‘இறையருளுக்கு அந்த உண்மையும் உட்பட்டது’ என்று நினைக்கப் பழகிக் கொண்டால் நல்லது. நம்பிக்கை அளவற்ற பலனைக் கொடுக்கக் கூடியது. ‘கடந்த நிகழ்ச்சிகளை மாற்ற முடியாது’ என நினைத்தால் நம்பிக்கைக்கு இயற்கையாகவுண்டான பெரும்பலன் குறையும். ‘அருள் கடந்ததையும் மாற்றும்’ என உணர்ந்தால், நம்பிக்கையின் திறம் வரையறையற்றதாக இருக்கும்.
2. மனிதன் காலத்தால் கட்டுண்டவன். அதனால் கடந்தகால நிகழ்ச்சிகள் அவனுக்குக் கட்டுப்படா. அன்னையின் ஒளி காலத்தைக் கடந்தது. அதனால் கடந்தகால நிகழ்ச்சிகளும் அன்னையின் ஒளியைப் பெற்று, இப்பொழுது பலனாக விளைய முடியும். சமர்ப்பணத்தின் மூலம் கடந்தகால நிகழ்ச்சிகளை அன்னையின் ஒளிக்கு உட்படுத்த முடியும்.
3. கடந்தகால நிகழ்ச்சிகளின் சுவடுகள் நம் இன்றையச் செயல்களில் படிந்திருக்கின்றன. அந்தச் சுவடுகளைப் புரிந்து கொண்டுவிட்டால் அந்தப் பழைய செயல்களையும், அவற்றின் பாதிப்புகளான இன்றையப் பலன்களையும் மாற்றலாம்.
4. மனிதனுடைய வாழ்க்கையில் செயல்பட இறைவன் மனிதனுடைய புத்தியைக் கருவியாகப் பயன்படுத்துகின்றான். புத்தியின் செயல் அதன் குணங்களால் நிர்ணயிக்கப்பட்டது. ஆகையால் மனிதனுடைய குண விசேடங்களுக்குப் புத்தியின் செயலைச் சிறப்பாக்கும் ஆற்றல் உண்டு. உயர்ந்த குணங்களின் மூலம் இறைவன் மனித வாழ்க்கையில் சிறப்பாகச் செயல்படுகின்றான்.
5. செயல்களின் கூறுகளும், குணத்தின் தன்மைகளும் பிரித்துப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டு இருக்கின்றன.
6. கடந்தகால நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து அவற்றை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால், கடந்தகால நிகழ்ச்சிகளின் பாதகமான பலன்கள் நீங்கும். ஆனால், அந்நிகழ்ச்சிகளுக்குக் காரணமான குண விசேடங்கள் அழியாமல் அப்படியே இருக்கும்.
7. அந்தக் கடந்தகால மிச்சம் இன்றைய குணச் சிறப்புகளாக நம்மிடம் ஒட்டிக் கொண்டிருக்கும்.
8. இன்றுள்ள இந்தக் குணச் சிறப்புகளிலிருந்து விடுபட முயன்றால், ஜீவன் கடந்தகால நிகழ்ச்சிகளின் இன்றையப் பலனிலிருந்து விடுதலை அடையும்.
9. கடந்தகால நிகழ்ச்சிகளை மீண்டும் மீண்டும் சமர்ப்பணத்திற்காக நினைவு கூர்ந்தால், அவற்றின் வேகம் ஒரு கட்டத்தில் அதிகரிக்கும். அதன்பின் நிகழ்ச்சிகளின் சுவடுகளான குண விசேடங்கள் மனோவேகத்தில் மனக் கண்ணில் தோன்றும்.
10. மரணத்திற்குமுன் ஆத்மா வெளிவந்து இப்பிறவியின் செயல்களைக் கண நேரம் விமர்சனம் செய்து, அடுத்த பிறவிக்குரிய இடத்தைத் தீர்மானிக்க முயல்கின்றது. புனர்ஜன்மம் எடுப்பதற்கு இந்த மதிப்பீடு அடிப்படையாக இருப்பதைப் போல், நாம் அன்னைக்குச் செய்யும் சமர்ப்பணம் ஒரு சிறு அளவிலான புனர்ஜன்மமாகும். எந்தச் செயலைச் சமர்ப்பணம் செய்கின்றோமோ, அந்தச் செயலின் (கர்மத்தின்) பலன்களிலிருந்து விடுதலை அடைந்து, அதைப் பொறுத்த வரையில் புனர்ஜன்மம் எடுத்த பலன் உண்டு.
11. கடந்தகால நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து சமர்ப்பணம் செய்தால், அவற்றால் ஏற்பட்ட பிரச்சினைகள் நிச்சயமாகக் கரையும். ஆனால், நிதானமாகக் கரையும். ஆனால், அந்நிகழ்ச்சிகளுக்கு அஸ்திவாரமான உணர்ச்சிகளை (குணங்களை) நினைவு கூர்ந்து சமர்ப்பணம் செய்தால், பிரச்சினைகள் உடனடியாகவும் முழுமையாகவும் கரைந்து போகும்.
12. ‘ஒரு பிரச்சினையை அழிக்க வேண்டும்’ என்ற தீவிரமான எண்ணத்துடன் முயன்றால், அதற்குச் சமர்ப்பணம் ஒன்றே உரிய கருவி. அவ்வெண்ணம் பூரணமாகச் செயல் படும்பொழுது, மனிதனால் தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவுமே இருக்க முடியாது.

மேலும் பயணிப்போம் இனிய நண்பர்களே!!!
ஸ்ரீ அரவிந்த சுவாமிகளின் ஆத்ம சமர்ப்பனத்தைத் மனதில் கொண்டு, தியானமும் யோக வழிகளை தொடர்ந்து...
ஸ்ரீ அரவிந்த சுவாமிகளின் ஆத்ம சமர்ப்பனத்தைத் மனதில் கொண்டு, தியானமும் யோக வழிகளை தொடர்ந்து...
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!