Search This Blog

Oct 29, 2011

கந்தசஷ்டி கவசம்- 4. சுவாமிமலைக் கவசம் - பாலன் தேவராய சுவாமிகள் .


4. சுவாமிமலைக் கவசம் 
காப்பு: நேரிசை வெண்பா.

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

ஓமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார்
காமுற உதித்த கனமறைப் பொருளே
ஓங்கார மாக உதயத் தெழுந்தே
ஆங்கார மான அரக்கர் குலத்தை
வேரறக் களைந்த வேலவா போற்றி
தேராச் சூரரைத் துண்டதுண் டங்களாய்
வேலா யுதத்தால் வீசி அறுத்த
பாலா போற்றி பழநியின் கோவே
நான்கு மறைகள் நாடியே தேடும்
மான்மரு கோனே வள்ளி மணாளனே

நானெனும் ஆணவம் நண்ணிடா(து) என்னைக்
காணநீ வந்து காப்பதும் கடனே
காளி கூளி கங்காளி ஓங்காரி
சூலி கபாலி துர்க்கை யேமாளி
போற்றும் முதல்வா புனித குமாரா
சித்தர்கள் போற்றும் தேசிகா போற்றி
ஏகாட் சரமாய் எங்கும் தானாகி
வாகாய் நின்ற மறைமுதற் பொருளே
துதியட் சரத்தால் தொல்லுல(கு) எல்லாம்
அதிசய மாக அமைத்தவா போற்றி

திரியட் சரத்தால் சிவனயன் மாலும்
விரிபா ருலகில் மேன்மையுற் றவனே
சதுரட் சரத்தால் சாற்றுதல் யோகம்
மதுர மாய் அளிக்கும் மயில்வா கனனே
பஞ்சாட் சரத்தால் பரமன் உருவத்தால்
தஞ்சமென் றோரைத் தழைத்திடச் செய்தென்
நெஞ்சகத்(து) இருக்கும் நித்தனே சரணம்
அஞ்சலி செய்த அமரரைக் காக்கும்
ஆறு கோணமாய் ஆறெழுத் தாகி
ஆறுசிரமும் அழகிய முகமும்

ஆறிரு செவியும் அகன்ற மார்பும்
ஆறிரு கண்ணும் அற்புத வடிவும்
சரவணை வந்த சடாட்சரப் பொருளே
அரனயன் வாழ்த்தும் அப்பனே கந்தா
கரங்கள்பன் னிரண்டில் கதிரும் ஆயுதத்தால்
தரங்குலைந்(து) ஓடத் தாரகா சுரன்முதல்
வேரறச் சூர்க்குலம் முடித்து மகிழ்ந்தோய்
சீர்திருச் செந்தூர்த் தேவசே னாதிபதி
அஷ்ட குலாசலம் யாவையும் ஆகி
இஷ்டசித்திகள் அருள் ஈசன், புதல்வா

துஷ்டசங் காரா சுப்பிர மணியா
மட்டிலா வடிவே வையாபுரித் துரையே
எண்கோ ணத்துள் இயங்கிய நாரணன்
கண்கொள்ளாக் காட்சி காட்டிய சடாட்சர
சைவம் வைணவம் சமரச மாகத்
தெய்வமாய் விளங்கும் சரவண பவனே
சரியை கிரியை சார்ந்தநல் யோகம்
இரவலர்க்(கு) அருளும் ஈசா போற்றி
ஏதுசெய் திடினும் என்பால் இரங்கிக்
கோதுகள் இல்லாக் குணமெனக் கருளித்

தரிசனம் கண்ட சாதுவோ(டு) உடன்யான்
அர்ச்சனை செய்ய அனுக்ரகம் அருள்வாய்
பில்லிவல் வினையும் பீனிச மேகம்
வல்ல பூதங்கள் மாயமாய்ப் பறக்க
அல்லலைப் போக்கிநின் அன்பரோ(டு) என்னைச்
சல்லாப மாகக் சகலரும் போற்ற
கண்டு களிப்புறக் கருணை அருள்வாய்
அண்டர் நாயகனே அருமறைப் பொருளே
குட்டிச் சாத்தான் குணமிலா மாடன்
தட்டிலா இருளன் சண்டிவே தாளம்

சண்டமா முனியும் தக்கராக் கதரும்
மண்டை வலியொடு வாதமும் குன்மமும்
சூலைகா மாலை சொக்கலும் சயமும்
மூலரோ கங்கள் முடக்குள் வலிப்பு
திட்டு முறைகள் தெய்வச் சாபம்
குட்டல் சோம்பல் கொடிய வாந்தியம்
கட்டிலாக் கண்ணோய் கண்ணேறு முதலா
வெட்டுக் காயம் வெவ்விடம் அனைத்தும்
உன்னுடைய நாமம் ஓதியே நீறிடக்
கன்னலொன் றதனில் களைந்திடக் கருணை

செய்வதுன் கடனே செந்தில் நாயகனே
தெய்வநா யகனே தீரவே சரணம்!
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!!!

பதிவு: ஈழத்து இளைய சகோதரி "தோழி"; அன்பு நண்பர்களுக்கு வேண்டி நன்றியுடன் கே எம் தர்மா....

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!