Search This Blog

Sep 7, 2011

எப்படி தூங்குவது? தூங்கும் போது கூட யோகம்


தூங்கும் போது கூட யோகம்  பயிலும் சித்தர்கள். 
 
மனித உடலின் அடிப்படை ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியமான ஒன்று. ஒரு நாளின் (86400- வினாடிகள்) மூன்றில் ஒரு பங்கு நேரத்தை (28,800 விநாடிகளை) நாம் தூங்குவதில்தான் செலவழிக்கிறோம். நவீன அறிவியலும் கூட நல்ல, ஆழ்ந்த தூக்கத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது. தூங்குவதன் மூலம் உடலுக்கும் உள்ளத்திற்கும் தேவையான ஓய்வும், அமைதியும் கிடைக்கிறது.

சித்தர் பெருமக்களும் தூக்கம் பற்றி நிறையவே கூறியிருக்கின்றனர். தூக்கம் என்பது மனிதனுக்கு மிக அவசியமானது என்றாலும் கூட சித்தர்களின்-தளத்தில் தூக்கம் என்பது உடல் தளர்வாகவும் உள்ளம் ஒரு முகமாகவும் இருக்கும் ஒரு நிலையையே குறிப்பிடுகின்றனர். இதனை தூங்காமல் தூங்கும் நிலை என்கின்றனர். சித்தர்களில்   பத்திரகிரியார் கூட இதனை பின்வருமாறு குறிப்பிடுகிறார்

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்?
தூங்காமல் தூங்கியிருக்கும் நிலை உயர்வான விழிப்பு நிலை. இந்த நிலையில் பிரபஞ்ச ஆற்றலோடு இணைந்து நிறைந்து இருக்கும் நிலை என்கின்றனர். மேலும் நாம் தூங்கும் போது நம்முடைய மூச்சு விரயமாவதாகவும் சித்தர்களின் பாடல்களில் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அகத்தியரும் கூட தனது பாடல் ஒன்றில் உண்ணும் போதும், உறங்கும் போதும், உறவு கொள்ளும் போதும் மூச்சை விரயமாக்கலாகாது என்கிறார். சித்தர்கள் கூறிடும் இத்தகைய உறக்க நிலை மிக உயர்வான நிலையாகும். முயற்சியும் பயிற்சியும் உள்ள எவரும் இத்தகைய நிலையை அடைய முடியும்.

யோகப் பயிற்சியின் போதே தூக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிற குறிப்பும் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது. அதுவும் பகலில் தூங்கவே கூடாது என்று வலியுறுத்தப் படுகிறது. சரி, இரவில் எப்படி தூங்குவதாம்?, அதற்கும் ஒரு சூட்சும முறையை தேரையர் தனது மருத்துவ காவியம்என்னும் நூலில் பின் வருமாறு விளக்குகிறார்.

பாரப்பா சிவயோகம் பண்ணும்பேர்க்கு
பரிவாக நித்திரைதான் வேண்டாமப்பா
நேரப்பா ராக்கால நித்திரைதான்பண்ண
நிலையாகச் சூட்சமொன்று நிகழ்த்துறேன்கேள்
வாரப்பா வரிசையாய்க் கால்தான்னீட்டி
வகையாக நித்திரைதான் பண்ணவேண்டாம்
ஓரப்பா ஒருபக்க மாகச்சாய்ந்து
உத்தமனே மேற்கையை மேற்கொள்வாயே.

கொள்ளப்பா ஒன்றின்மேல் சாய்ந்துகொண்டு
குறிப்பா நித்திரை செய்துநீங்க
அள்ளப்பா அஷ்டாங்க யோகம்பாரு
அப்பனே சிவயோகம் வாசியோகம்
நள்ளப்பா பிராணாய மவுனயோகம்
நலமான கவுனத்தின் யோகம்பாரு
வள்ளப்பா வாசியது கீழ்நோக்காது
வகையாக மேனோக்கி யேறும்பாரே.
பொதுவில் நாம் எல்லோரும் தூங்குவதைப் போல மட்ட மல்லாந்து கால்களை நீட்டி நிமிர்ந்து உறங்கக் கூடாதாம். ஒரு பக்கமாக சாய்ந்து கையை தலைக்கு கீழாக வைத்து அதன்மேல் தலையை வைத்து உறங்க வேண்டுமாம். அப்படி உறங்குவதால் வாசி கீழ் நோக்கி செல்லாமல் மேல்நோக்கி ஏறுமாம். இதனால் சிவ யோகம், வாசி யோகம், பிரணாயாமம், மவுன யோகம், கெவுன யோகம் அனைத்தும் இலகுவாக சித்திக்குமாம்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்வி இன்னேரத்துக்கு உங்களுக்கு நிச்சயம் வந்திருக்கும். இதன் சாத்திய அசாத்தியங்களை விவாதிப்பதை விட தூக்கம் பற்றி இப்படியான தகவல்கள் நம் முன்னோர்களினால் அருளப் பட்டிருக்கிறது என்பதை பகிர்ந்து கொள்வதே இந்த பதிவின் நோக்கம்.

சித்தர்களைப் பற்றி பல ஆராய்ச்சி நூல்களை மின்னூலாக பகிர்ந்தளித்த தோழி அவர்களின் “சித்தர்கள் இராச்சியம்” என்னும் வலைப்பூவில் கண்டு படித்து மகிழ்ந்ததை அன்பு நட்புக்களுக்குடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கின்றேன். பொதுவாகவே சித்தர்களின் சிந்தனைப்படி நாம் சுவாசிக்கும் மூச்சின் அளவினை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கின்றோமோ அந்த அளவு நமது ஆயுளும் கூடுகின்றது என்பதனை பல சூழ்நிலைகளில் பல சித்தர்களும் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள் என்பதனை நாம் மனதில் கொள்ள வேண்டி இருக்கின்றது. 
மேலும் பயணிப்போம் நண்பர்களே.... அன்புடன் கே எம் தர்மா....
நன்றி - பதிவு : தோழி மற்றும் வலைபூ.

7 comments:

  1. aam anna, ithu sambanthamaaga naan munnere kelvi pattu irukkiren anna. Nandri anna nalla thagaval koduthamaikku

    ReplyDelete
  2. அன்பு இளவல் கபிலன் அருணாச்சலம் அவர்களுக்கு எனது வந்தனமும் வாழ்த்துக்களும். தாங்களும் இது போல படித்தவைகளை பிறருக்கு பயனுள்ள வகையில் பகிர்ந்து கொள்ளலாமே!!! ஆன்மிகம் பற்றி அதிகமாக அறிந்துள்ள நீங்கள் ஏனோ அமைதியாக இருக்கின்றீர்கள் என்று எனக்குப் புரியவில்லையே!!! உங்களின் கருத்துக்களை கொட்டினால் தேவைப்பட்டவர்கள், தேவைப் படும்போழுது எடுத்துக் கொள்ள முடியுமல்லவா?

    ReplyDelete
  3. அருமையான பதிவு. வாழ்த்துக்கள் அய்யா. வாழ்க வளமுடன்.

    ராஜ்மோகன்

    ReplyDelete
  4. மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் நண்பரே ராஜ் மோகன் அவ்வர்களே!!! மேலும் ஒரு கருத்தும் எனது மனதில் உள்ளது. ஆண்மக்கள் இடதுகையையும, பெண்கள் வளதுகையையும் தலைக்கு கீழே வைத்து ஒருக்கழித்து படுத்து தூங்குதல் நலம் என்பதே அக்கருத்து. இது குறித்து தகவல் ஏதேனும் இருப்பின் பகிர்ந்து கொள்ளலாமே!!!

    ReplyDelete
  5. நபிகள் நாயகம் (ஸல்..) அவர்களும் தங்களின் உறக்கத்தில் வலது பக்கமாக ஒருக்கணித்து கையின் மேல் தலை வைத்தே உறங்கி இருக்கிறார்கள், மேலும் அவ்வாறு உறங்குவது மிகவும் ஏற்றமுடையது எனவும் கூறப்படுகிறது, இடது பக்கம் ஒருக்கணித்து படுக்கும் போது இதயத்திற்கு சுருங்கி விரிய சற்று அசவுரியமாக இருக்குமாம். மல்லாந்து படுப்பதிலும் ஒருக்கணித்து படுப்பதே அதுவும் வலது பக்கம்!

    ஐயாவுக்கு நன்றி, அழகான பதிவு

    -ஜா.முஹையத்தீன் பாட்ஷா

    ReplyDelete
  6. ஒருக்கணித்து படுப்பதே அதுவும் வலது பக்கம் படுப்பதே சிறந்தது!

    ReplyDelete
  7. இல்லறத்தில் ஈடுபட்டோர் ஆண்கள் இடக்கையை தலைக்கு வைத்து படுத்தால் அருகில் உள்ள மனையாளின் மீது வலது கையை ஆதரவாக இடும்போழுது இல்லறத்துனைவிக்கு பாதுகாப்பில் உள்ள மன நிம்மதியும், கர்ப்பப்பை நல்ல ஆரோக்கிய நிலையிலும் இருக்கும். ஆணுக்கு ஹிருதயம் சுருக்கம் அடைவதால் சுவாசம் சிறிது மட்டுப்பட்டு வாழ்நாள் நீடிக்க வழி ஏற்படுகின்றது. மேலும் உயிரணு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படுவது இல்லை. துறவறம் பூண்டோர், குடும்ப வாழ்விலிருந்து விடுபட நினைப்போர் நீங்கள் கூறியவண்ணம் வலதுகையைத் தலைக்கு அணையாக வைத்துப் படுப்பதில் வேறுபட்ட கருத்து எதுவும் இல்லை நண்பரே மொஹிதீன் பாட்சா அவர்களே!!!

    ReplyDelete

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!