வீரசைவத்தின் தாரக மந்திரம்.
துறவறம் பூண்டாலும் உழைத்து வாழவேண்டும்!!!!
வீர சைவ நெறியை பின்பற்று பவர்களை லிங்காயதர் என்று அழைக்கிறார்கள் அதாவது இதற்கு லிங்க உடம்பினர் என்று பொருள் சொல்லலாம் தனது உடலின் ஒரு பகுதியாக சிவலிங்கத்தை இவர்கள் எப்போதும் வைத்திருப்பதினால் அதாவது இவர்களின் மேனி சிவத்திரு மேனியை எப்போதும் தாங்குவதினால் லிங்காயதர் என பெயர் பெற்றனர் எனலாம். வீரசைவர்களுக்கு லிங்காசாரம் என்ற லிங்க ஒழுக்கம், சாதசாரம் என்ற தன்னிலை ஒழுக்கம் சிவாசாரம் என்ற சிவ ஒழுக்கம் விருத்யா சாரம் என்ற பணி ஒழுக்கம், கானாசாரம் என்ற சமுக ஒழுக்கம் ஆகிய ஐந்து வகை ஒழுக்கங்கள் வலியுறுத்தப்படுகிறது.
இது தவிர குரு, லிங்கம், சங்கமம் திருவடி துலக்கல், திருவமுது, திருநீறு, ருத்ராட்சம் மந்திரம் என எட்டுவகையான காப்பு முறைகளும் வீர சைவத்தின் சொல்லப்படுகிறது. வீர சைவத்தில் ஐந்துவித ஒழுக்கம் எட்டுவித பாதுகாப்பு இருப்பதுபோல ஆறுவகைபயிற்சி இருக்கிறது. இந்த ஆறுவகை பயிற்சிகளை சடுதளம் என்ற பரிபாஷையில் வீரசைவ ஞானிகள் அழைக்கிறார்கள். ஒழுக்கம் என்பது திடிரென ஒரு மனிதரிடம் உருவாவதில்லை. தொடர்ச்சியான பயிற்சியே ஒருவனை ஒழுக்கமுடையவனாக மாற்றும். அப்படி மாற்றத்திற்கு அழைத்து செல்வது தான் சடுதளம் என்ற பயிற்சிகளாகும்.
கரடு முரடான பாறை மீது பலகாலம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினால் முரட்டு தன்மை மாறி மென்மையாகி விடுவது போல பக்தியானது ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்லும். இறைவன் மீது செலுத்தும் அன்பாகவும் இது அமையும். அவனை தவிர தனக்கு வேறு எந்த பற்றுதலும் கிடையாது என்ற பயிற்சியின் பெயரே மகேஸ்வரதலமாகும். எண்ணங்களை அடக்கி தனக்குள் பயணத்தை பக்தி பூர்வமாக நடத்தி கொண்டிருக்கும் மனிதன் தனக்கு வெளியே உள்ள அல்லது வெளியில் இருந்து தன்னை தாக்கவல்ல அசுத்தம் எதுவென சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளகிறான். இதனால் தன்னை முழுமையாக ஈஸ்வரனுக்கு அர்ப்பணித்து கொள்வதனால் தன்னை சுற்றியுள்ள பகுதிகளை தான் அறியாமலேயே சுத்தப்படுத்தி கொள்கிறான். இந்த பயிற்சிக்கு பிரசாதித்தல் நிலை என்று பெயர்.
பக்தியில் கணிந்து கடவுளுக்கு தன்னை முழுமையான அர்பணித்து கொள்ளும் பக்தன் அடுத்து அடையும் நிலை தானும் கடவுளும் வேறல்ல இரண்டும் ஒன்றுதான் என்பதாகும். இதற்கு பிராண லிங்கத்தலம் என்று பெயர். இறைவனுடன் கலந்த நிலையில் ஆனந்தத்தில் முழ்கும் பயிற்சிக்கு சரண தலம் என்று பெயர். சிவலிங்கத்தின் பண்புகளை எல்லாம் உள்வாங்கி ஐக்கியத்தலம் என்பதை அடைகிறான் ஐக்கியதலம் பயிற்சியால் முக்தியை நோக்கி கனியும் போது ஆறு பயிற்சி முறைகளும் நிறைவடைந்து சமரச பக்தியை சாதகன் வெல்லுகிறான் என வீரசைவம் வலியுறுத்துகிறது. இந்த பயிற்சி முறைகளை ஊன்றி கவனிக்கும் போது வீர சைவத்தின் தனிதன்மையை நம்மால் உணராமல் இருக்க முடிவதில்லை.
பக்தி, ஞானம், கிரியை ஆகிய மூன்றுக்கும் வீரசைவம் முதலிடம் கொடுக்கிறது. இந்த மூன்றும் சமமான வேகத்தில் வளர்ந்தால் தான் இறைவனோடு இரண்டற கலக்கும் நிலை வந்தமையும் பக்தி, ஞானம், கிரியை ஆகிய மூன்றையும் பெற வீரசைவம் சொல்லும் நடைமுறைகனை பின்பற்றினாலே போதும். காட்டுக்கு சென்று கடுந்தவம் ஏற்று முக்திக்காக பாடுபடவேண்டியதில்லை.என லிங்காயத்துக்கள் சொல்கின்றர். சகல துறையிலும் ஒழுக்கத்தை மட்டுமே பின்பற்ற வேண்டுமென வற்புறுத்தப்படும் போது அது உண்மையாக கடைபிடிக்கப்படும் போது அங்கு இறைவனின் தனிபெரும் கருணை தானாகவே வந்தமையும்.
பக்தி, ஞானம், கிரியை ஆகிய மூன்றுக்கும் வீரசைவம் முதலிடம் கொடுக்கிறது. இந்த மூன்றும் சமமான வேகத்தில் வளர்ந்தால் தான் இறைவனோடு இரண்டற கலக்கும் நிலை வந்தமையும் பக்தி, ஞானம், கிரியை ஆகிய மூன்றையும் பெற வீரசைவம் சொல்லும் நடைமுறைகனை பின்பற்றினாலே போதும். காட்டுக்கு சென்று கடுந்தவம் ஏற்று முக்திக்காக பாடுபடவேண்டியதில்லை.என லிங்காயத்துக்கள் சொல்கின்றர். சகல துறையிலும் ஒழுக்கத்தை மட்டுமே பின்பற்ற வேண்டுமென வற்புறுத்தப்படும் போது அது உண்மையாக கடைபிடிக்கப்படும் போது அங்கு இறைவனின் தனிபெரும் கருணை தானாகவே வந்தமையும்.
வீரசைவம் என்பது கர்நாடக மாநிலத்தில் பெருவாரியான மக்களால் பின்பற்றப்பட்டாலும் நமது தமிழகத்தில் கும்பகோணம், காஞ்சிபும், மதுரை, திருப்பறக்குன்றம், சேலம், திருச்சி, தஞ்சை, கோவை, சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் பல திருமடங்கள் நிறுவப்பட்டு வீரசைவ நெறி கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இருந்து பரப்பப்பட்டு வருகிறது. புதுச்சேரியை அடுத்துள்ள பொம்மபுரம் திருமடமும், திருக்கோவிலுர் கீழையூரிலுள்ள ஞானியார் திருமடமும் வீரசைவ நெறியை பரப்பும் கேந்திரங்களே ஆகும். துறைமங்கல சிவபிரகாசர், சிதம்பர சுவாமிகள் குமாரதேவர், சாந்தலிங்க அடிகளார் ஆகிய தமிழ் பெரியார்களும் இந்த மரபில் வந்த ஞானிகளாவார்.
வீர சைவ மரபில் ஜங்கமம் என்ற கோட்பாடு மிகவும் புகழ்வாய்ந்ததாகும். இதற்கு நேரிடையான பொருள் அசைவது என்பதாகும். இதனாலேயே இந்த நெறிவழியில் துறவு வாழ்வை மேற்கொள்ளவற்கு ஞானியர் ஜங்கமர் என்ற பட்ட பெயர் மரபு வாழியாக வழங்கப்படுகிறது. மேலும் இவர்களை ஜீவன் முக்தர்கள் என்று அழைப்பது மரபு. உலகிலுள்ள அனைத்து மதங்களிலும் ஆத்மா தெளிவு பெற்ற ஞானிகளை ஜீவன் முக்தர்கள் என அழைப்பது வழக்கம். ஆனால் சாதாரண வீர சைவனை கூட ஜீவன் முக்தன் என்று அழைக்கிறார்கள். இதற்கு சரியான காரணமும் இருக்கிறது.
நமது மதம் கர்மவினை என்றொரு கோட்பாடை உயிர் நாடியாக கொண்டது என நமக்கு தெரியும். கர்ம வினையின் பரிணாம வளர்ச்சி தான் மறுபிறப்பு கொள்கையாகும். ஆனால் .இந்து மதத்தில் ஒரு பிரிவாக இருக்கும் வீரசைவம் உயிர்களுக்கும் மறு பிறப்பு உண்டு என்பதை தர்க்கரீதியில் மறுக்கிறது. கடவுளிடம் நெருங்காத மனிதனே பந்தபாச தளையில் கர்ம வளையத்திற்கு அகப்பட்டு பிறப்பு இறப்பு சக்ரத்தில் மாட்டி தவிக்கிறான் வீர சைவனோ பிறந்த நேரம் முதல் மரண காலம் வரையிலும் முழு முதற் கடவுளின் திருமேனியான சிவலிங்கத்தை தனது உடலில் தாங்கி வாழ்கிறான். சிவலிங்கம் எங்கு உள்ளதோ அந்த இடம் சிவாலயமாகும். அப்படியென்றால் வீரசைவனின் உடலும் சிவாலயமாகும். ஆலயத்தை அசுத்தமும் சித்த மலமும் அணுகவே அணுகாது. சித்த மல மறுத்தவன் சிவனாகவே ஆகி விடுகிறான். அதாவது வீர சைவ நெறியை பின்பற்றும் ஒவ்வொருத்தனும் சிவதன்மை பெற்ற முழு மனிதனே ஆவான். சிவதன்மை என்பது பிறப்பற்ற நிலையாகும். அதனால் வீர சைவனுக்கு மறு பிறப்பு இல்லை. அவன் வாழும் போதும் வாழ்கைக்கு பின்னும் ஜீவன் முத்தனாக இருக்கிறான் என்கிறது.
இதை கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. இது நடைமுறையில் சாத்தியமா? நிச்சயம் சாத்தியப்பட்டு வராது. கழுத்திலேயே லிங்கத்தை கட்டி கொள்வதால் மட்டும் ஒருவன் புனிதனாக ஆகி விட முடியாது. இது எப்படி இருக்கிறது என்றால் தினசரி மூன்று வேளை குளித்தால் பக்தி கனிந்துவிடும் என்று சொல்வது போலிருக்கிறது.
நீரில் நனைவதினாலேயே பக்தியும் முக்தியும் பெற்றுவிடலாம் என்றால் தவளையும் மீனும் தான் அந்த விஷயத்தில் மனிதனை வெற்றி கொள்ளும். ஆகவே கருவறையிலேயே சதாசர்வகாலமும் வாழுகின்ற அர்ச்சகரின் மனதில் காம குரோதங்கள் ஆட்சி செய்தால் அவன் பூஜை புரிந்தான் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக பிறப்பற்ற நிலையை அடைந்து விட முடியுமா ? எனவே இந்த ஒரு விஷயத்தில் மட்டும் வீர சைவ கோட்பாட்டோடு நாம் முரண்பட வேண்டிய நிலையில் உள்ளோம். இருப்பினும் ஜாதிமறுப்பு, உழைப்புக்கு முன்னுரிமை தரும் வீரசைவர்களை எத்தனை பாராட்டினாலும் அது குறையுடையதாகவே இருக்கும்.
குருஜியின் அருளாசியுடன் மேலும் பயணிப்போம் அன்புடன் கே எம் தர்மா...
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!