Search This Blog

Aug 15, 2011

சிவவாக்கியம் (021-025) - சித்தர் சிவ வாக்கியர்.


சித்தர் சிவ வாக்கியர்

"ஓம் நமசிவாய நமசிவாய ஓம்"

சித்தர் சிவவாக்கியர் சிந்தனைகள்...021

சங்கிரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால்
மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
சந்கிரன்டையும் தவிர்த்து தாரையூத வல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமே.

நமது மூக்கு ஒன்று, வாசல்கள் இரண்டு. அவைகளில் நம் காற்றானது இடகலை, பிங்கலை, சுழுமுனை எனும் நாடிகளில் சன்னல் பின்னலாக ஓடி நடந்துக் கொண்டிருக்கிறது. இப்படியாக ஒவ்வொரு சுவாசத்திலும் பிராணனில் இருந்து நாலு அங்குலம் நஷ்டமடைகிறது. அதனால் பிணி மூப்பு ஏற்பட்டு ஆயுளும் மங்கி, மாண்டு போகும் மனிதர்கள் கோடானு கோடி. இப்படியாக ஓடிக் கொண்டிருக்கும் மூச்சை சந்திரகலை, சூரியக்கலை, வழியாக கட்டுப்படுத்தி பிரனாயமத்தினால் பிராண வாயுவைப் பெருக்கி ரேசகம், பூரகம், கும்பகம், செய்து உடம்பையும், உயிரையும் வளர்க்கவேண்டும். இதனை நன்கு அப்பியாசித்து இடபிங்களைகளை ஒழுங்குபடுத்தி சுழுமுனை எனும் வாசலைத் திறந்தது வாசியினால் தாரை ஊதுவதைப் போல் ஊதி மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை மேலேற்றி அனலுடன் கூட்டி சோதியில் சேர்க்க வல்லவர்கள் ஆனால் அழகில் சிறந்த அம்மையை இடபாகம் கொண்ட ஈசருடன் கூடி வாழலாம்.
******************************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனைகள்...022    
தங்கம் ஒன்று ரூபன் வேறு தன்மையான வாறு போல்  
செங்கன் மாலும் ஈசனும் சிறந்திருந்ததும்முளே                                                                                                              விங்களங்கள் பேசுவோர் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற நாமம் இந்த நாமமே.     

தங்கம் என்ற ஒரு பொருளில் இருந்தே கம்மல், வளையல், மோதிரம், தாலி, மூக்குத்தி போன்ற நகைகள் பல வகைகளில் உருவாகி வெவ்வேறு தன்மைகளில் விளங்குகின்றது. அதுபோலவே ஒன்றான பிரமத்தில் இருந்தே திருமாலும், ஈசனும் சிறந்த மெய்ப்பொருளில் அமர்ந்திருந்து நமக்குள்ளே இருக்கின்றார்கள். இதனை அறியாமல் விஷ்ணு பெரியது, சிவன் பெரியது என்று வியாக்கியானங்கள் பேசி வாழ்பவர்கள் வாழ்வு விளங்காது. நமக்குள் இருந்த பரம்பொருளே இப்பிரபஞ்சம் முழுவதும் நின்றிப்பதை அறிந்து சிவனும்  ஈசனும் ஒன்றாகவே விளங்கும் ஓரெழுத்தை உணர்ந்து தியானியுங்கள்.
******************************************************
சிவவாக்கியரின் சிந்தனைகள்:023
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து கூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.

 

 ஐந்து பூதங்களால் பிறந்து அந்த ஐந்து பூதங்களின் தன்மைகளால் வளர்ந்து அஞ்செழுத்தில் உண்மைகளை உணராது அதனை பஞ்சாட்சரமாக வெறும் வாயால் மட்டும் அஞ்செழுத்து மந்திரமாக ஓதி வரும் பஞ்சபூதங்களால் ஆன பாவிகளே பஞ்சபூதங்களும் நமக்குள்ளே பஞ்சாட்சரமாக இயங்கி வருகிறது என்ற உண்மையை உணர்ந்து, அறிந்து அதனை அஞ்செழுத்தால் அதற்குறிய இடத்தில் வைத்து ஓதி தியானியுங்கள். நமசிவய என்ற அஞ்செழுத்தில் ஒரேழுத்து என்ன என்பதை அறிந்து அதிலேயே நினைவால் நிறுத்தி செபித்து தியானிக்க வல்லவர்களானால் அந்த அஞ்செழுத்தும் ஒரேழுத்தாகி நிற்கும் அம்பலமான கோயிலில் ஈசன் அஞ்சல் அஞ்சல் என்று நடராஜனாக ஆடி நிற்பான். 
*******************************************

சிவவாக்கியரின் சிந்தனைகள் :024
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே  அனாதியான தஞ்சுமே
பிஞ்சு பிஞ்சதல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்
நெஞ்சிலஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல்
அஞ்சுமில்லை யாருமில்லை அனாதியாகத் தோன்றுமே


அஞ்செழுத்தே ஐந்து பூதங்களாகவும், ஐந்து புலன்கலாகவும் நமது உடம்பில் இருந்து இயங்கி அனாதியான பஞ்சாட்சரமாக இருக்கின்றது. அதுவே சீவனாகி என்றும் அன்னதியாக உள்ள சிவனால் ஜீவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. அதுவே பின்ஜெழுத்தான வாலையாக ஒரேழுத்தாகி உள்ளது. இதனை அறியாமல் பித்தர்களைப் போல் வெறும் வாயால் மட்டுமே பிதற்றுவதால் பயன் ஏது? அந்த அஞ்செழுத்தாக
ஆகியிருப்பது இன்னது என்பதை அறிந்துகொண்டு நெஞ்சமாகிய கோவிலிலே அஞ்செழுத்து ஓதி உள்ளம் உருகி கண்ணீர் கசிந்து அங்கேயே நினைவை நிறுத்தி அதிலேயே நின்று தியானிக்க வல்லவர்க்கு அஞ்செழுத்தும் இல்லை ஆறாதாரங்களும் இல்லை. அஞ்செழுத்தும், ஆறு ஆதாரங்களில் உள்ள தெய்வ சக்திகளும் ஒன்றான சிவமாகி அனாதியாகத் தோன்றும்.
*******************************************************

சித்தர் சிவவாக்கியர் சிந்தனை பாடல்:025

நீளவீடு கட்டுநீர் நெடுங்கதவு சாத்துறீர்
வாழ வேணு மேன்றல்லோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலன் ஓலை வந்த போது கையன்கன்று நிற்பிரே
ஆலமுண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே 


தான் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்பதற்காக நீளமாக பெரிய வீட்டைக் கட்டி வேறு எவரும் உள்ளே நுழையாவண்ணம்  பெரிய நிலைக்கதவுடன் அமைத்து வைத்திருக்கும் மனிதர்களே!! எத்தனை கதவுகள் அமைத்து சாத்தி வைத்தாலும் எமனின் ஓலையில் எழுதியபடி உயிர் போகும் தருணத்தில் எதைக் கொண்டும் தடுக்க இயலாமல் நம்மால் எதுவும் ஆகாது என கைவிரித்து நிற்பார்கள். ஆலகால விஷத்தை உண்டு அகிலம் முழுமையும் காத்த நீலகண்டராகிய ஈசன் பாதமும் அம்மை சக்தியின் பாதமும் நம்மிடம் உள்ளதை உணர்ந்து அத்திருவடிகளைப் பற்றி தியானியுங்கள். அத்திருவடி சத்தியமாய் நம்மை கரை சேர்க்கும். இது உண்மையே!!!!  

*******************************************************



http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சிவவாக்கியத்தினை தொடர்ந்து.. 

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!