Search This Blog

Aug 15, 2011

சிவவாக்கியம் (011-015) - சித்தர் சிவ வாக்கியர்.


சித்தர் சிவ வாக்கியர்

"ஓம் நமசிவாய நமசிவாய ஓம்"
 
 சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் பாடல்: 011
 
 அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சாந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம்
எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே.

அதிகாலை, மதியம், மாலை என்று மூன்று நேரங்களிலும் நீராடி குளித்து விட்டு இயம நியமங்களுடன் இருந்து சந்தியா வந்தனம் தர்ப்பணங்கள் போன்றவைகளை செய்வதும், பெறற்கரிய தவங்கள் புரிந்து காயத்ரி செபம் செய்வதும், இதனால் வரும் பலன்களால் சிந்தையில் எப்போதும் ஞானம் ஒன்றையே வைத்து தியானம் செய்வதினால் வரும் பலன்களும் எந்தையாகிய ஸ்ரீ இராமனின் ராம மந்திர செபத்தை செய்வதனாலே கிடைக்கும். ஆதலால் என் குருநாதரின் இராம நாமத்தை தினமும் செபித்து தியானித்திருங்கள். 
***************************************************************

சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் பாடல்: 012
 
 கதாவு பஞ்ச பாதகங்களைத் துறந்த மந்திரம்
இதாம் இதாம் இதல்ல என்று வைத்துழலும் ஏழைகாள்
சதா விடாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம்
இதாம் இதாம் இராம ராம ராம என்னும் நாமமே.

செய்த பாவங்கள் யாவும் அகலவும், பஞ்சமா பாதகங்களை செய்யா வண்ணம் காப்பதற்கும் ஒதுவதற்குரிய அறிய மந்திரம் இதுவாக இருக்குமோ அல்லது அதுவாக  இருக்குமோ என்று பற்பல மந்திரங்களை ஓதி உச்சரித்து வையகத்தில் வாழ்ந்து  உழன்று வரும் ஏழை பக்தர்களே! இதோ சர்வ நேரந்த்திலும் சர்வ காலங்களிலும் உச்சரித்து ஒதுவ்த்ர்குரிய அறிய நல்ல மந்திரம் இதுதான் என்பதனை உணர்ந்து எப்போதும் இராம ராம ராம என்னும் நாமத்தை என்றும் மறவாது ஓதி உயர்வடையுங்கள். 
****************************************************************

சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் பாடல்: 013
 
நானா தேது? நீய தேது? நடுவில் நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேத்று? ராம ராம ராம என்ற நாமமே

நான் என்று ஆனது எது? நீ என்பது எது? ஞாமாகி நமக்குள் நடுவாக நின்றது என்ன? கோனாகி இவ்வுடலை ஆட்சி செய்வது எது? குருவாக அமைந்திருப்பது எது? அது என்பதை எதுவென்று கூறிடுங்கள் எமக்குள மக்களே! ஆதியாக ஆனது எது? அது நம் உடம்பில் அழியாத பொருளாய் நின்றது எது? அது நம் உடம்பிலேயே அப்புரத்துக்கும் அப்புறமாய் வெளியாக நின்று உடல் அழிந்த பிறகும் கூட வருவது எது என்பதை நன்கு சிந்தித்து அறிந்து கூறுங்கள். இவை யாவும் ஒன்றே என அறிவை அறியவைத்து நம் பிறவியை ஈடேற்ற சரியானது இராம நாமமே என்பதை உணர்ந்து இராம மந்திரத்தை ஓதுங்கள். 
***************************************************************

சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் பாடல்: 014
 
 சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாதப் பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ
மாத்திரைப் போதும்முளே யறிந்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது சத்திமித்தி சித்தியே.

சாஸ்திரங்கள் வேத பாராயணங்கள் போன்றவைகளை தினமும் ஓதுகின்ற சட்டநாதப்பட்டரே!  உங்களுக்கு நோய்வேர்த் வந்து மாரடைப்பு ஏற்பட்டு வேர்த்து இறைத்து உயிர் ஊசலாடும் போது நீங்கள் சொல்லி வந்த வேதம் அந்நேரம் வந்து உதவுமோ? உதவாது. ஆதலால் ஒரு நொடி நேரமாவது உங்களுக்குள்ளே உள்ள மைப்போருளை அறிந்து வாசியோகம் செய்து அதையே தொக்கியிருந்து தியானம் செய்து வந்தீர்களானால் சோற்றுப் பையான இவ்வுடம்பிற்கு நோய் என்பது வராது. மரண காலத்திலும் ஈசன் கருணையினால் சக்தியும், முத்தியும், சித்தியும் கிடைக்க மெய்பொருளை அறிந்து தியானியுங்கள். தினம் தினம் தாங்கள் சொல்லி வந்த வேத சாச்திரங்களுக்கும் அதனால் சக்தி கிட்டி முக்தி பெற்று சித்தி அடைவீர்கள்.  
*********************************************************

சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் பாடல்: 015
 
 தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த அப்பராபரம்
ஊரு நாடு காடு தேடி உழன்று தேடும் ஊமைகள்
நேரதாக உம்முள்ளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.

இறைவன் வெகு தூரத்தில் இருக்கின்றான் என்றும் அவனை ஆன்மீக நாட்டம் கொண்டு  அடையும் வழி வெகுதூரம் என்றும் சொல்லுபவர்கள் சோம்பேறிகள். அவன் பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்து மண்ணாகவும், வின்னாகவும் எங்கும் பறந்து இருக்கின்றான். அவனை பல ஊர்களிலும், பல தேசங்களிலும் பற்பல காடுகளிலும் மலைகளிலும் உழன்று அலைந்து தேடும் ஊமைகளே! அவ்வீசன் உனக்குள் உள்ளதை உணர்ந்து முதுதண்டு வளையாமல் நேராக பத்மாசனத்தில் அமர்ந்து தியானித்து அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். 
******************************************************************

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.
இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்
 


மேலும் பயணிப்போம் சிவவாக்கியத்துடன்... அன்புடன் கே எம் தர்மா...

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!