Search This Blog

Aug 9, 2011

சித்தர் சிவ வாக்கியர் சரிதம்-பாகம்-1


சித்தர்  சிவவாக்கியர் 

திருமழிசையாழ்வார்.

ஆதியே துணைஓம் நமசிவய சிவாய நம ஓம்
சிவ வாக்கியர் :
இவ்வுலகில் பிறக்கும் குழந்தைகள் யாவும் ""குவா,குவா" என்று உ, , என்ற எட்டிரண்டு மந்திரத்தையே, முதன்முதலாக ஒலித்து அழும்.  ஆனால் இவர் பிறக்கும் போது"சிவா, சிவா" என அழுகுரலோடு அலறியதால், சிவவாக்கியர்எனப்புகழப் பெற்றார். . பிறந்ததிலிருந்தே சிவ நாமம் உச்சரித்து, சிவ சிந்தையோடு வாழ்ந்து சித்தராகவே வளர்ந்தவர்.. எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவராயினும் ஜனித்த போதே சித்தராக உருவாகியதால், இயற்கையாகவே இறைவழிபாடுகள் செய்து அவரின் கடமைகளை ஈசனிடம் விட்டு விட்டு, ஆன்மீக தேடுதல் நாட்டம் கொண்டு அலைந்தார்.இவ்விதம் ஏற்பட்ட இறை நாட்டத்தினால் நான்கு வேதங்கள், சாஸ்திரங்கள், இதிகாசங்கள், புராண,ங்கள் மற்றும் பல நன்னூல்கள் யாவையும் கசடற கற்றறிந்தார். ஆதலால் ஞானதாகம் ஏற்பட்டு பற்பல இடங்களுக்கு அலைந்து ஞான குருவைத் தேடினார். இவரின் இயல்பான கேள்வி ஞானத்திற்கு தக்க பதிலைக் கூறும் மெய் குருவைத் தேடிக் கொண்டே இருந்தார். இவரின் ஞானக் கேள்விகளுக்கு பதில் சொல்ல எந்த குருக்களாலும் இயலவில்லை. ஆதலால் மெய்ஞான குருவை அடைவதே இலட்சியமாகக் கொண்டு, ஊர் ஊராக, கோயில் கோயிலாக, காடு, மலைகளில் எல்லாம் அலைந்து திரிந்து கொண்டிருந்தார்.

இப்படியே ஞானிகளும், யோகிகளும், முனிவர்களும், சித்தர்களும், பக்தர்களும் கூடும் புனித பூமியான காசி மாநகருக்கு வந்தார். அங்கே காசி விஸ்வநாதரையும், அன்னை அண்ணபூரணியையும் தரிசித்து வணங்கி, காசி மாநகரின் அழகையும், வற்றாத கங்கை பெருவெள்ளத்தையும் கண்டார். ஆதியிலிருந்தே புனிதத் தலமாக வழிபடும் காசியில் பூ மணக்காது, பிணம் நாறாது, பல்லி கௌளி சொல்லாது, காக்கை கரையாது, கருடன் வட்டமிடாது போன்ற விபரங்களை நேரில் கண்டார். ஆரூர் பிறக்க முக்தி! அண்ணாமலை நினைக்க முக்தி! காசி இறக்க முக்தி! என சைவர்கள் போற்றும், காசி நகரம் இவ்வுலகின் மத்திய பாகத்தில் அமைந்துள்ளதையும், பூமியின் ஆணி வேராக இத்தலம் அமையப் பெற்ற காரணத்தையும் கண்டு, உணர்ந்து அறிந்தார். அங்கு சாமியாராகவும், குருவாகவும் திகழ்பவர்களிடம் சென்று தனது மெய்ஞானக் கேள்விகளைத் தொடுத்து திக்கு முக்காடச் செய்தார். .அவரின் சந்தேகங்கள்யாவையும் தீர்த்து வைக்கவும், அவருக்கு உபதேசம் வழங்கி தீட்ச்சை  கொடுத்து தெளிய வைக்கவும், அவரது பிறவியை அறிந்த ஸ்ரீமன் நாராயணனே மெய்குருவாக வந்தார். .குருவாக வந்தவர்அங்கு ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியாக, ராமன் என்ற பெயரில், சிவவாக்கியரின் பார்வையில் படும் வண்ணம் அமர்ந்து தன வேலையைச் செய்து கொண்டிருந்தார்.

குருவைக் கண்டு தெளிதல்:
அந்த செருப்பு தைக்கும் ராமனைக் கண்டவுடன் சிவவாக்கியரின் உள்ளுணர்வு உணர்த்தப் பெற்று, இவர்தான் தாம் தேடிவந்த மெய்குரு என்பதைக் கண்டுகொண்டார். . இருப்பினும் அவர் உருவைக் கண்டு எள்ளாமல், அவரையே கண்காணித்தவாறு, அவர் திருவடி நிழலைச் சேரும் நாளை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தார். ஆனால் அந்த ராமனோ, இவரைக் கவனியாததுபோல, தன செருப்பு தைக்கும் தொழிலை மட்டும் மும்முரமாக செய்து கொண்டிருந்தார். .தினசரிஅவருக்கு கிடைக்கும் உணவை ஒரு பிடி கூட உண்ணாமல், அங்கிருக்கும் பறவை இனங்களுக்கும், நாய்களுக்கும் அளித்து வந்ததை தொடர்ந்து பார்த்து வந்த சிவவாக்கியர், ஒரு நாள் அவரிடம் சென்று பணிந்து நின்றார். ராமன் இவரைப் பார்த்து என்ன வேண்டும் எனக் கேட்டார்.சிவவாக்கியர் அவரை பணிவுடன்வணங்கிய படியே,"ஐயா அடியேன் தினமும் உங்களை கவனித்து வருகிறேன்.  தாங்கள் உணவு உண்டு நான் கண்டதில்லை. பின் எவ்வாறு உயிர் வாழ்ந்து, உழைகின்றீர்கள்" எனக் கேட்டார். ராமனும் சிரித்தபடியே நான் காற்றையே உணவாக்கிக் கொள்கிறேன், வாசியினால் பிராண சக்தியை சேமித்து என் உயிரையும் உடலையும் பாதுகாத்து வளர்த்து வருகின்றேன். ஆதலால் எனக்கு வேறு உணவு தேவைப்படுவதில்லை என்றார்.

இப்பதில் கேட்ட சிவவாக்கியர் இவரே தன சற்குரு என்பதை உணர்ந்து, தெளிந்து, அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, அவர் பாதம் பற்றிய வண்ணம் சரணாகதி அடைந்து, தானும் மெய்நிலை பெறுவதற்கும், மோட்சம் அடைவதற்கும் வழிகாட்டி உபதேசிக்க வேண்டினார். அவரோ தம்பி "கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானமேறி வைகுந்தம் போவானா?" என்று கேள்விகள் பல கேட்கும் சிவ வாக்கியரிடமே கேள்வியைக் கேட்க, பதிலேதும் சொல்லத் தெரியாத சிவ வாக்கியரிடம், மகனே, வீட்டிற்கு கூரை இருப்பது போல மனிதனின் எண்சான் உடம்பாகிய வீட்டிற்கு கூரையாக இருப்பது சிரசாகிய தலையேயாகும். .அங்கே உயிராகிய கோழி உலாவிக் கொண்டிருக்கின்றது. . அந்த உயிரை அறிந்து கொண்டு ஆறு ஆதாரங்களையும் யோகா ஞான சாதகத்தால் ஏறி பிடித்தால் உயிரில் ஒளிந்திருக்கும் இறைவனை சிக்கெனப் பிடிக்கலாம். அவ்வாறே தியானம், தவம் இருந்து ஆகாயத்தலத்தில் ஏறி மோட்சமாகிய வைகுந்தம் சேரலாம் என்பதையே இவ்வாறு பழமொழியாகக் கூறியுள்ளார்கள். ஆதலினால் நீயும் உன் சிரசில் இருக்கும் இறைவனைத் தியானத்தினால் பிடித்தால், அவனருளால் இம்மாதிரி பல சித்திகளைப் பெற்று மோட்சமடையலாம் என்று விளக்கினார். பார்ப்போரை எல்லாம் கேள்விக் கணைகளால் திணற, பிரமிக்க வைத்த சிவ வாக்கியர் மறு கேள்வியின்றி குகுவின் கருணை கிட்டி, உபதேச தீட்ச்சை பெற வேண்டி மவுனமாக மண்டியிட்டு நின்றார்.

குரு உருவில் வந்த ராமன் சிவ வாக்கியரை மேலும் சோதிக்க எண்ணி அவரிடம் மகனே, நான் இந்நாள் வரை செருப்பு தைத்து வந்த வருவாயை சேர்த்து வைத்துள்ளேன். . இந்த காசுகளை உன்னிடம் தருகின்றேன். அதை நீ என் தங்கையாகிய கங்கையிடம் கொடுத்துவிட்டு வந்து சேர் என்றார். மேலும் அவரிடம் ஒரு பேய்ச் சுரக்காயைக் கொடுத்து இதன் கசப்பு போக கங்கையில் கழுவிக் கொண்டு வா என்று கூறினார். . சிவவாக்கியர் கேள்விகள் ஏதும் இல்லாமல், மறுப்பேதும் சொல்லாமலே அக்காசையும், பேய்ச் சுரக்காயையும் பெற்றுக் கொண்டு குருநாதரின் ஆணைப்படியே கங்கையை நோக்கி புறப்பட்டார்.  குருநாதர் எதைச் சொன்னாலும் அதைச் செய்ய வேண்டும் என்ற ஒரே நினைவோடு கங்கையை அடைந்து தாயே, இதோ எனது குருநாதர் கொடுத்தனுப்பிய காசுகளைப் பெற்றுக்கொள் எனச் சொல்லி கங்கை நீரில் போடப் போன பொழுது வளையல் அணிந்த அழகிய கைகள் நீருக்குள் இருந்து வெளிப்பட்டு சிவ வாக்கியர் கொடுத்த காசுகளைப் பெற்றுக் கொண்டு நீரில் மறைந்தது. சிவ வாக்கியர் அதனை பிரமிப்புடன் பார்த்துவிட்டு பேய்ச்சுரைக்காயை கங்கை நீரில் கசப்பு போக கழுவி எடுத்துக்கொண்டு குருபிரானிடம் திரும்பினார். 

மறுநாள் குரு தன்னுடனேயே  இருக்கும் சிவ வாக்கியரை அழைத்து நேற்று என் தங்கை, கங்கையிடம் கொடுத்த காசுகளை, இப்போது தேவைப் படுவதால், அவைகளைத் திரும்ப வாங்கி வா என்றார். சீடரும் உடனே கங்கையை நோக்கி புறப்பட, குரு அவரை நிறுத்தி, தான் செருப்பு தைக்க தோல் பையில் வைத்திருக்கும் தண்ணீரைக் காட்டி இதுவும் கங்கை நீர்தான், இங்கேயே கேட்டு வாங்கித்தா என்றார். சிவ வாக்கியரும் குரு வார்த்தையை மீறாமல் அத்தோல் பையில் இருந்த கங்கை நீரைப் பார்த்து, நேற்று நான் உன்னிடம் கொடுத்த என் குருநாதரின் காசுகளை திரும்பவும் தா என வேண்டினார். அடுத்த கணமே அத்தோல் பையிலிருந்து அதே வளைகரங்கள் தோன்றி, அக்காசுகளை மாறாமல் கொடுத்து விட்டு மறைந்ததுஎவ்வித வியப்போ, திகிலோ, பயமோ இன்றி எந்த உணர்ச்சிகளுக்கும் ஆட்படாது தன கடன் குரு பணியே என்று அதனை குருவிடம் ஒப்படைத்தார்.குரு சிவவாக்கியரைப் பார்த்து வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருக்கின்றனவா எனக் கேட்க, சிவ வாக்கியர் குருவின் தாள் பற்றி எந்த சந்தேகங்களும் இப்போது இல்லை குருநாதா, நான் கேள்விகள் கேட்டுப் பெறமுடியாத மெய்ப்பொருளை அருளி உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றார். சந்தேகங்கள் யாவும் தீர்ந்து தெளிந்தவனே உண்மையான சீடன், நீ உபதேசம் பெற தகுதியுள்ளவனாய் மாறிவிட்டாய். ஆகவே உனக்கு சித்தர்களின் மணிமந்திர ஒளஷத  தீட்ச்சைகளை வழங்குகின்றேன் என ஆசி கூறி உபதேசம் செய்தார் குருவாக வந்த ராமன்.
  
குரு கொடுத்த ஒவ்வொரு தீட்சைகளையும் முறையாக பயிற்சி செய்து பழுதறப் பயின்று வந்தார் .   ஒருநாள் குருவானவர் தன சீடரிடம் சிவ வாக்கியா, நீ எல்லா சித்திகளையும் உன் வைராக்கிய தவ முயற்சியினால் பெற்று சித்தனகிவிட்டாய். இருப்பினும் நீ இல்லற தர்மத்தை முடிக்க வேண்டி இருப்பதால் அதனையும் கடக்க உனக்கு நல்ல மனைவி  அமைய வேண்டும். . உன் தவத்தையும் தொடர்ந்து செய்து கொண்டு உலக அனுபவங்களைப் பெற்று சித்தராக வாழ்ந்து வ. சித்தர்களில் சிறந்த பேரு பெற்று பரம்பொருளை அடைவாய் என அருளாசி வழங்கி, சிவ வாக்கியரிடம் ஆழாக்கு மணலையும் ஒரு பேய்ச் சுரைக்காயையும் கொடுத்து இதனை சமைத்து உனக்கு உணவு படைப்பவளே உன் மனைவியாவாள். .அவளைக் கண்டு மணம் முடித்து, இல்லறம் நடத்தி, அக்கர்மாவை முடித்து தவம் புரிந்து வா.  தக்க தருணத்தில் யாம் வந்து ஆட்கொள்ளுவோம் எனக் கூறி மறைந்து  போனார் ராமனாக வந்த ஸ்ரீ ஹரி நாராயணர்.  

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!