குருஜியின் அருளாசியுடன்..
5,000 வருடங்களுக்கு முன்பு பாரசீகத்தில் தோன்றிய ஸ்ராஸ்திய மதத்திலிருந்து யூதர் ஹீபுரு மதம் தோன்றி அதிலிருந்து கிறிஸ்துவ மதம் தோன்றி கிறிஸ்துவத்தின் பெருவாரியான கொள்கைகளை சித்தாந்தங்களை உள்ளடக்கி இஸ்லாம் மதம் உருவாகி இன்று 1500 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இம்மதங்களுக்கு முன்னரே நமது இந்து மதம் தோன்றிவிட்டது. அதாவது ஸ்ராஸ்திய மதம் தோன்றுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மதம் உருவாகிவிட்டது என்று சொல்லலாம். பொதுவாக இந்து மதத்தின் தோற்றத்தை வேத காலத்திலிருந்து ஆரம்பிப்பதுதான் நம்முடைய வழக்கமான மரபு. ஆனால் இந்து மதம் உண்மையில் வேதகாலத்தில் தான் தோன்றியதா அல்லது அதற்கு முன்னரே தோன்றிவிட்டதா என்று நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் சிந்திப்பது இல்லை.
காரணம் நமக்கு வேதகாலம் என்பதே எத்தனை வருடங்களுக்கு முற்பட்டது என்பது சரிவர தெரியாத போது அதற்கு முன்பே உள்ள காலத்தை எப்படி கணித்து பார்க்க முடியும். அப்படி முடியாது என்பதினால் காலங்களை அறிந்து கொள்ளும் நமது ஆர்வத்தையும் முயற்சிகளையும் கைவிட்டு விடமுடியுமா எனவே வேத காலத்திற்கு முற்பட்ட காலத்தை அறிந்து கொள்ள நம்மால் முடிந்தவரை முயற்சி செய்து பார்ப்போம். அப்படி பார்த்தால் தான் இந்து மதத்தின் தொன்மையை நாம் உணர முடியும்.
புவியியல் அறிஞர்கள் உலகத்தில் மனித இனம் தோன்றியது தென்னிந்தியாவில் தான் என்று சொல்கிறார்கள். இவர்களின் இந்த கூற்றுக்கு சில யூகங்கள் மட்டுமே ஆதாரமாக இருக்கிறதே தவிர அறிவியல் சார்ந்த அசைக்க முடியாத சான்றுகள் எதுவும் இது வரை கிடைக்கவில்லை இருந்தாலும் கூட நமது இந்திய நாட்டை பொறுத்த வரையில் மனித இனம் தோன்றியது தெற்கில் தான் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் நமக்கு கிடைத்து உள்ளன.

பல கோடி ஆண்டுகள் வயதுடைய முதுமையான கற்பாறை படிவுகள் தென் இந்தியாவில் காணப்படுகிறது. அப்பாறை படிவுகள் இருக்கும் பகுதிகள் காடுகளும் மலைகளும் சார்ந்த பகுதிகளாக இருப்பதினால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனித சமூகம் வாழ்ந்திருக்க வேண்டும். எப்படியென்றால் இங்குதான் அதிக சிரமப்படாமல் மனிதர்கள் வேட்டையாடி மிருகங்களை உணவாக்கிக் கொள்ளவும் காய் கனிகளை பெற்றுக் கொள்ளவும் வாய்பிருந்திருக்கிறது. மேலும் விந்திய மலை தொடருக்கு வடக்கே இன்று பரந்து கிடக்கும் கங்கை சமவெளியும் இமயமலை தொடரும் ஒரு காலத்தில் கடலுக்குள் மூழ்கி கிடந்திருக்கிறது.
இன்று கூட இமயமலை சிகரங்களின் உச்சியில் கடல்வாழ் உயிரனங்களின் படிமங்கள் படிந்து இருப்பதை பார்க்கும் பொழுது இமயம் கடலுக்குள் தான் இருந்திருக்க வேண்டும் என்ற உறுதி ஏற்படுகிறது. வட இந்திய பகுதி கடலுக்குள் மூழ்கி கிடந்த காலத்தில் தென்னிந்தியா தான் உயரமாகவும் காடுகளும் மலைகளும் சூழ்ந்ததாகவும் இருந்திருக்க வேண்டும் அதனால்தான் மனித இனம் இந்தியாவை பொறுத்த வரை தெற்கில் தான் தோன்றியிறுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
புவியியல் கணக்கு படி சுமார் ஐந்துகோடி ஆண்டுகளுக்கு முன்புதான் இமயமும், கங்கை சமவெளியும் கடலுக்குள்ளிருந்து வெளிவந்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஆக ஐந்து கோடி
ஆண்டுகளுக்கு முன்பு கன்யாகுமரியிலிருந்து தெற்கே நெடுந்தொலைவிற்கு நிலப்பரப்பு பரந்து கிடந்ததாகவும் அந்த பகுதிதான் லெமுரியாகண்டம் என்று ஒரு சில வல்லுநர்கள் கூறுகிறார்கள். முதன் முதலில் மக்களினம் லெமுரியா கண்டத்தில் தான் தோன்றியதாகவும் இன்று இலங்கையிலும் மேற்கிந்திய தீவுகளிலும் தென்னிந்தியாவில் வாழக்கூடிய மக்கள் அந்த ஆதிமனிதர்களின் வாரிசுகள் என்று கருதப்படுகிறது.


அப்படி கருதுவதற்கு காரணமும் இருக்கிறது. இந்த பகுதிகளின் நில அமைப்பு வாழும் மக்களின் உடலமைப்பு தோலின் நிறம் ஆகியவைகள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக காணப்படுகிறது. இதுமட்டுமல்ல நியுஜிலாந்தில் வாழும் மேவா என்ற ஆதிமக்களின் மொழியமைப்பில் தமிழ்சொற்கள் பல இருக்கின்றன. மேலும் மேற்கிந்திய தீவு மக்களின் சில பழக்க வழக்கங்களும் வழிபாட்டு முறைகளும் சின்னங்களும் சற்றேரக்குறைய தமிழ் மரபோடு ஒத்து அமைந்திருக்கிறது.
போர்னியாவில் உள்ள ஆதி குடிமக்களான டயாப்புகளும் நமது ஆனைமலை பகுதியில் வாழும் காடர்கள் என்ற மலை சாதியினரும் ஒரே மாதிரியான வகையில் மரம் ஏறும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இது தவிர தென்னாப்பிரிக்காவில் உள்ள நீக்ரோக்களுக்கும் தமிழ்நாட்டு வனவாசிகளுக்கும் உருவத்திலும் நடை உடை பாவனையிலும் சமயச் சடங்குகளிலும் ஒற்றுமையிருப்பதை இன்றும் காணலாம். இலங்கை தமிழ் மக்களுக்கும் நமக்கும் உள்ள ஒருமைப் பாட்டை சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இவைகளையெல்லாம் வைத்துப்பார்க்கும் பொழுது விந்திய மலைத் தொடங்கி ஆப்ரிக்கா வரையில் ஒரே நிலப்பரப்பாக இருந்திருக்க வேண்டும் என்பதை நம்பாமல் இருக்க முடியாது.




மேலும் அந்நகர சுவடுகளில் கிடைக்கும் எல்லாவகையான சமயச்சார்புடைய ஆதாரங்களை திரட்டி பார்க்கும் பொழுது சிந்துவெளி மக்களின் சமய வாழ்க்கைகும் வேதங்களில் குறிப்பிடப்படும் சமய வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதாக கருதமுடியாது. ஒன்று அந்த மக்கள் வேதம் சாராத வழிபாட்டை கொண்டவர்களாக இருக்க வேண்டும் அல்லது வேதகாலத்திற்கு முற்பட்ட சமயநெறியை கொண்ட வர்களாக இருக்க வேண்டும்.
ஆரியர்கள் இந்தியாவிற்குள் குடியேறி வந்ததாக ஒரு சாராரும் இல்லை அவர்களும் இந்நாட்டின் பூர்வ குடிகள் தான் என்று ஒரு சாராரும் முடிவே இல்லாமல் வாதாடி வருகிறார்கள். இன்னொரு சாரார் திராவிடர்கள் கூட இந்தியாவில் குடியேறியவர்களே தவிர பூர்வ குடிகள் அல்ல என்று கூறுகிறார்கள் எல்லோருமே தங்களது வாதங்களுக்கு வலுசேர்க்கும் ஆதாரங்களை தருகிறார்கள். அவற்றில் எது சரி எது தவறு என்ற முடிவிற்கு நம்மால் வரமுடியவில்லை காரணம் அனைவரின் தரப்பிலும் கொஞ்சமாவது உண்மை யிருப்பதை நம்மால் உணரமுடிகிறது.
ஆனால் இந்த வாதபிரதி வாதங்களில் இந்த மதத்தை பொறுத்த வரையில் அசைக்க முடியாத ஒரு உண்மையை நாம் பெற முடிகிறது. அந்த உண்மை என்ன வென்றால் வேதங்களுக்கு முன்பே இந்து மதம் இந்த நாட்டின் தாய் மதமாக இருந்திருக்கிறது. என்பது தான் அது. எதைவைத்து இந்த முடிவை நான் சொல்கிறேனென்றால் சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய கடவுள் உருவங்களில் பல வேதங்களில் குறிப்பிடப் படாதவைகள் இருக்கின்றன. அது மட்டுமல்லாது அந்த மக்களின் வழிபாட்டு முறைகள் பல வேதக்கருத்துகளுக்கு மாறுபாடுடையதாக இருந்திருக்கின்றது. அதற்கு பல ஆதாரங்களை நம்மால் கூறஇயலும்.
............மேலும் பயணிப்போம்-4 ஆம் பாகத்தில்-அன்புடன் கே எம் தர்மா.
No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!