by Keyem Dharmalingam on Wednesday, June 29, 2011 at 9:24am
இந்த உலகத்திலேயே சிறந்த பண்பாடு இந்திய பண்பாடு தான் என்ற பெருமிதம் எனக்கு எப்போதுமே உண்டு. இது நான் இந்தியனாக பிறந்ததனாலோ இந்துவாக வாழ்வதினாலோ உருவானது அல்ல. என் பண்பாட்டை அறிவு பூர்வமாக வாழ்க்கையின் அனுபவபூர்வமாக அறிந்து ஆராய்ந்து தெளிந்த பிறகு ஏற்பட்ட ஞானமாகும்
மனிதன் தன் வாழ்க்கையில் தாங்க முடியாத துயரம் வரும் போது மட்டுமே அடக்க முடியாமல் அழுகிறான். நெஞ்சிக்குள் அடைத்து கொண்டிருக்கும் துக்கம் பீரிட்டு கிளம்பும் போது பக்க சூழலை எண்ணி பார்க்காது நம்மை வீரனாக நினைத்த மகன் அருகில் இருக்கலாம் அறிஞனாக நினைத்த மாணவன் பக்கத்தில் இருக்கலாம் அவற்றை எதையுமே கவனிக்காமல் பொருட்படுத்தாமல் குதித்து வரும் துயரம் நம்மை குலுங்க குலுங்க அழ வைத்து விடும்.
அப்படி அழுகின்ற போது கூட அதற்கென்று ஒரு நெறியை இலக்கணத்தை வகுத்து கொண்டவன் இந்து. தலையில் அடித்து கொண்டு அழுகிறான் என்றால் தான் செய்த தவறால் ஏற்றப்பட்ட துயரத்துக்காக என்று அர்த்தம் . நெஞ்சில் அறைந்து கொண்டு கதறுகின்றான் என்றால் நெஞ்சோடு வளர்ந்த பாச உறவை பறிகொடுத்து விட்டான் என்று அர்த்தம். வயிற்றில் அடித்து கொண்டு அழுது புரளுகிறான் என்றால் வயிற்ருக்குள் இருந்து வெளிவந்த வாரிசுக்கு ஏற்றப்பட்ட துயரத்திற்கு என்று அர்த்தம்
இப்படி அழுகைக்குள்ளேயே ஆயிரம் தத்துவங்களை புதைத்து வைத்த இந்தியன் தனது வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் அமைதியான மன நிலையை தக்க வைத்து கொள்ளவே சில சடங்குகளை உருவாக்கி இருக்கிறான் என்பதை அறியும்போது இவ்வளவு பெரிய மேதாவிகளின் வாரிசுகளா நாம் என்ற வியப்பு ஏற்படுகிறது. சூரியன் மறைய துவங்கும் மாலை நேரம் வந்தவுடன் வாசலை பெருக்கு தண்ணீர் தெளி கோலம் போடு வீட்டு ஜன்னல் கதவுகளை வாசல்களை திறந்து வை என்றான். அப்படி செய்தால் நிரந்தரமாக மகாலட்சுமி உனது வீட்டில் வாசம் செய்வாள் என்றான். இதற்கு என்ன அர்த்தம்
மாலை நேரத்தில் வீசுகின்ற காற்று தேற்கு திசையில் இருந்து வரும். அதனால் தான் அதற்கு தென்றல் காற்று என்று பெயர் வடக்கே இருந்து வீசினால் அது வாடை காற்று. வாடை காற்று உடம்புக்கு ஆகாது சீதளத்தை ஏற்படுத்தும் . தென்றல் காற்று அப்படியல்ல உடலில் பட்டவுடன் சரிரத்தை சிலிர்ப்படைய செய்யும். கொந்தளிக்கும் மனதை நிதான படுத்தி சாந்தம் ஆக்கும். ரத்த கொதிப்பை பட படப்பை மயக்கத்தை தெளிவிக்கும் ஆரோக்கியம் தரும். அந்த தென்றல் காற்று மாலை நேரத்தில் வீடு முழுவதும் வீசினால் இரவு நேர உறக்கம் நிம்மதியாக இருக்கும். பல நோய்களுக்கு மருந்தே உறக்கம் அல்லவா?
உடம்பு ஆரோக்கியமாக இருந்தால் உழைப்பதற்கு சலிப்பு ஏற்படாது சலிப்பில்லாத உழைப்பு வீட்டில் செல்வத்தை குவிக்காமல் வேறன்ன செய்யும்? வாசல் கதவை திறந்து வைப்பதற்கே இத்தனை அறிவியல் காரணங்கள் உண்டென கண்டறிந்த என் இந்திய முப்பாட்டன் ஆயிரம் நோபல் பரிசு வாங்க தகுதி வாய்ந்தவன். காலையில் கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றால் கைகளை தட்டி சத்தம் செய்த பிறகு நீரெடு என என் பாட்டி சொல்வாள். காரணம் ஏன் என கேட்டால் வருண பகவான் உறங்கும் பொழுது நீர் இறைத்தால் அது திருட்டுக்கு சமம் என விளக்கம் சொல்வாள். அப்படி செய்வது திருடு மட்டும் அல்ல கொலையாகவும் முடியும் என்பது ஆராய்ந்தால் புரியும்.
இரவு நேரம் உலகம் மட்டும் அல்ல நீரும் அமைதியாக இருக்கும். தண்ணீர்ல் வாழும் தவளைகள் நீர் பாம்புகள் மீன்கள் இறைத்தேட நீருக்கு மேல் மேய்ந்து கொண்டு இருக்கலாம். அந்த நேரம் நீர் எடுக்க வாளியை கிணற்றுக்குள் போட்டால் அவைகளுக்கு இடைஞ்சல் ஏற்படும் சில நேரம் அவைகள் காயம் பட்டு இறக்கவும் செய்யலாம். அதை தவிர்க்கவே பாட்டி கைகளை தட்டி தண்ணீர் எடு என சொல்லியிருக்கிறாள்
இப்படி எத்தனையோ விஷயங்களுக்குள் ஆழமான உண்மைகள் மறைந்து கிடக்கின்றன அவைகளை தெரிந்தோ தெரியாமலோ கடைப்பிடித்து நேற்றுவரை நன்றாக வாழ்ந்தோம். இன்றோ அவைகளை நாகரிகம் என்ற பெயரில் ஐரோப்பிய பண்பாட்டிற்கு பலி கொடுத்து விட்டு வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தவிக்கிறோம்