Search This Blog

Dec 3, 2011

சிவவாக்கியம் (226-230) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (226-230)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -226
வெந்த நீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர்
சிந்தையுள் நினைந்துமே தினம் செபிக்கும் மந்திரம்
முந்த மந்திரத்திலோ மூல மந்திரத்திலோ
எந்த மந்திரத்திலோ ஈசன் வந்து இயங்குமே
வேகா தலை சாகாக்கால் போகப் புனலாக இருக்கும் திருநீரை அறியாது வெந்த விபூதியை நீராக்கி உடம்பு முழுவதும் பூசி வேடம் போடுகிறீர். நீராக நின்ற மந்திரத்தில் நெருப்பாக ஈசன் இயங்குவதை அறிந்து அதையே சிந்தையுள் வைத்து சிவனை நினைந்து 'சிவயநம' என தினமும் செபித்து தியானம் செய்யுங்கள். அதுவே அனைத்துக்கும் முந்தி தோன்றிய மந்திரம். மூல மந்திரம், பஞ்சாட்சரத்தில்தான் ஈசன் இருந்து இயங்குகின்றான்.

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -227 

அகார காரணத்திலே அனேகனேக ரூபமாய்
உகார காரணத்திலே உருத்தரித்து நின்றனன்
மகார காரணத்திலே மயங்குகின்ற வையகம்
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே!

ஓங்காரமே அனைத்தும் தோன்றுவதற்கு காரணம், அதில் அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்றும் அடங்கியுள்ளது. இதில் யாவிலும் சிகரமாக இருப்பதுவே சிகாரம். அகாரமே உடம்பாகி அனேகனேக ரூப
ங்களாவதற்கு   காரணமாய் ஆனது. உகாரமே உயிராகி உருத்தரித்து நிற்பதற்கு காரணமாய் ஆனது. மகாரமே மணமாகி இந்த வையகம் முழுதும் மயங்குவதற்கு காரணமாய் ஆனது. இவை யாவிற்கும் ஆதியாக சிகாரமே காரணம் என்பதை அறிந்து சிவமே பொருளாய் இருப்பதை தெளிந்து உணர்ந்து கொண்டு தியானியுங்கள்.
 
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -228
அவ்வெழுத்தில் உவ்வு வந்து அகாரமும் சனித்ததோ
உவ்வெழுத்து மவ்வெழுத்தும் ஒன்றை ஒன்றி நின்றதோ
செவ்வை ஒத்து நின்றலோ சிவபதங்கள் சேரினும்
மிவ்வையொத்த ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே.
.  
'ஓம்' என்ற ஓங்காரத்தில் அ, உ, ம் என்ற மந்திரங்கள் மூன்றேழுத்தாக இருக்கின்றது. இதனை சித்தர்கள் அவ், உவ், மவ் என்றும் அம், உம், இம் என்றும் சொல்கிறார்கள்.
அவ்வும் உவ்வும் ஆகிய நாத விந்து சேர்ந்தே அகாரமாகிய உடம்பு பிறந்தது. உவ்வும் மவ்வும் ஆகிய உயிரும் மனமும் ஒன்றாகி ஒன்றி நிற்கின்றது. இப்படி ஓங்காரம் உடலுயிராய் நிற்பதை உணர்ந்து அது செம்மையான பொருளாய் இருப்பதை அறிந்து மின்னலைப் போன்ற சோதியில் கலந்து தியானத்தால் சிவத்தின் திருவடியில் சேரலாம். வ்விதமாக செய்து வரும் நற்குணம் நிறைந்த ஞானிகள் விரிவாக உபதேசிக்க வேணும். 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் - 229
ஆதியான அஞ்சிலும் அநாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொருபம் அற்ற ரெண்டிலும்
நீதியான தொன்றிலே நிறைந்து நின்ற வஸ்துவை
ஆதியான தோன்றுமே அற்றதஞ் செழுத்துமே.
 .
ஆதியாக உள்ள பஞ்சபூதங்கள் மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய அஞ்சிலும், அனாதியாக உள்ள அந்தக் கர
ங்கள் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கிலும் சோதியான ஓங்காரத்தில் அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்றிலும், சொரூபம் அற்ற உயிர் உகாரத்தில் சூரிய சந்திர கலையில் இரண்டிலும் எல்லோர்க்கும் பொது நீதியாக விளங்கும் ஒன்றிலே நிறைந்து நின்ற வஸ்துவான மெய்ப்பொருளை அறிந்துகொள்ளுங்கள். இதுவே ஆதியான ஒன்றாக இருப்பதை உணர்ந்து அதிலேயே ஒன்றி அஞ்செழுத்தால் ஓதி தியானியுங்கள்.
     

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 230
வானிலாதது ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில்
ஊனிலாதது  ஒன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில்
நாணிலாதது ஒன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில்
தானிலாதது ஒன்றுமே தயங்கி ஆடுகின்றதே 
 
ஆகாயம் இல்லாதது எதுவும் இல்லை. ஒன்றும் இல்லாததே ஆகாயம் என்பதை அறிந்து அதிலேயே நாடி தியானம் செய். உடம்பு
இல்லாத
உயிர் ஒன்றுமில்லை. உடம்பு இல்லை என்ற நிலையில் உடம்பிலேயே யோகம் செய். நான் என்பது என்ன என்பதை உணர்ந்து, நான் என்ற ஆனவமில்லாது நான் நீயாக ஞான சாதகம் செய். நான் என்பதற்று தானாக நின்றது ஒன்றான சிவமே உன் உடம்பில் தங்கி இயங்கி ஆடுகின்றது. அத்திருவடி பற்றி இறவா நிலை அடையுங்கள்.
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

குரு பரம்பரை:- படித்ததில் பிடித்தது. (ஆன்மீக தீப்பொறி)பகுதி-2


குரு பரம்பரை:
நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்று 
சொல்லுகின்றார்களே! எதனால் என்பது இதுவரையிலும் புரியாமல் இருந்தது. ஏனெனில் நம்பத்தகுந்த விதமல்லாது அல்லது ஆச்சரியப்படத்தக்க விதத்தில் காணப்படும் கருத்துக்களை காணும் பொழுது வியப்பாக உள்ளது.  
 
இணைய தளத்தில் உலவும் பொழுது, கடாரத் தமிழ்ப் பேரறிஞர்  டாக்டர் எஸ்.ஜெயபாரதி அவர்களின் வலைத்தளம் பார்க்க நேர்ந்தது. அதில் முனைவர் எஸ். ஜெயபாரதி அவர்கள் பல்வேறு தலைப்புக்களில் பதிவுகளை பகிர்ந்ததை காண முடிந்தது. அனைத்து பதிவுகளும் அறிந்து கொள்ள வேண்டிய தலைப்புக்களை தேர்ந்தெடுத்து சரள நடையில், அனைவருக்கும் எளிதில் புரியும்படியும், தக்க சான்றுகளோடும் பகிர்ந்துள்ளார். 

அதில் ஒன்றுதான் இந்த குருபரம்பரை விளக்கச் சிறுகதை. சித்தம் தெளிய, சித்தி அடைய எவ்விடத்திலிருந்தும் தூண்டுதலோ, விளக்கமோ, வியாக்கியானமோ கிடைக்க வாய்ப்பு உள்ளதனை காணக் கொடுத்துள்ளார். நாமும்தான் அதனை காண்போமே இனிய நட்புக்களே!!!
*********************************************************
இதற்கு முந்தைய  பதிவின் தொடர்ச்சி இது ஆகும். அப்பதிவினைக் கண்டபின் தொடரவும்......
கே எம் தருமா..(KeyemDharmalingam): குரு பரம்பரை:- படித்ததில் பிடித்தது. (ஆன்மீக தீப்பொறி) ....தொடர்க...

ஒருநாள் ஒரு குளக்கரையில் நின்றுகொண்டு கையில் இருந்த குவளையால் தண்ணீரைச் சேந்திக் கொண்டிருந்தேன். அப்போது ஒருநாய்  வந்தது. கடும் தாகம் அதற்கு. வேகமாக வந்த நாய் அந்தக் குளத்தில் குதித்தது. பின்னர் தண்ணீரை ஆசைதீருமட்டும் ஆனந்தமாகக் குடித்தது.

அந்த நாயைப் பார்த்ததும் எனக்குப் பொறிதட்டியது. உடனே கையில் இருந்த குவளையைத் தூர எரிந்தேன். கரையில் இருந்த என் உடமைகளை எடுத்தேன் அவற்றையும் குளத்தில் வீசி எரிந்தேன். எந்த உடமையுமே இல்லாமல் அந்த நாய் இந்த உலகில் வாழவில்லையா?  என்னைப் படைத்த இறைவன் இருக்கிறான்.

பற்றற்றதன்மையையும் சரணாகதித் தத்துவத்தையும் நான் அப்போது உணர்ந்து கொண்டேன். அதை உணர்த்தியது அந்தநாய். அந்த நாய்தான் என்னுடைய முதல்குரு.

அதன்பின்னர் நான் ஊர் ஊராகச் சுற்றும்போது உடல்நலிவு ஏற்பட்டுவிட்டது. ஒருநாள் மயங்கிப்போய் ஒரு மரத்தடியில் நான் கிடந்தேன். அப்போது அங்கே வந்த ஓர் ஆள் என்னைக் கைத்தாங்கலாகத் தாங்கிச் சென்று தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
வீட்டுக்குள் நுழையப்போகும்போது அவன் சொன்னான். ஐயா சாமியாரே! நான் ஒரு திருடன். என் வீடு இது. உள்ளே வருவதற்கு உங்களுக்கு மனச்    சமாதானம்தானே?    
நான் சற்றுத் தயங்கினேன். அவன் தொடர்ந்தான். நான் ஒரு திருடன் என்பது யாருக்கும் தெரியாது. என்னுடைய  குலத்தொழிலே திருடுவதுதான். அந்தத் தொழிலைத் தவிர வேறெதுவும்  தெரியாது. ஆனால் அக்கிரமமான முறையில் நான் திருடுவதேயில்லை. எனக்கென்று ஒரு தர்மம் வைத்திருக்கிறேன். நிறைய  தானமும்  செய்வேன். இது என்னுடைய வாழ்க்கை முறை".

அப்போதும் தயங்கினேன். நீங்கள் ஒரு துறவி. உங்களைப் பொறுத்தவரைக்கும் எல்லாரும் ஒரே மாதிரிதான். திருடனோ, வேந்தனோ, துறவியோ அனவரும் உங்கள் கண்ணுக்கு ஒன்றாகத்தான் தெரியவேண்டும். யாரையும் நீங்கள் ஒதுக்கமுடியாது. அது உங்கள் தர்மம்.    நான் திருடன். உங்களைப் பாரமாக நினைக்கவில்லை. என் வீட்டுக்கு உங்களை மனப்பூர்வமாக அழைக்கிறேன். நீங்கள் துறவி. என்னைப் புறம்பாக நினையாது நீங்கள் வரவேண்டும்".

நான் உள்ளே நுழைந்தேன். எனக்குச் செய்யவேண்டியவற்¨றை அவன் செவ்வனே செய்தான். பின்னர் அன்றிரவு அவன் வெளியில் புறப்பட்டான். தொழிலைப் பார்க்க நான் செல்கிறேன். பத்திரமாக இருங்கள், என்று சொல்லிவிட்டுச் சென்றான். காலையில் திரும்பினான். இன்று ஒன்றுமே கிடைக்கவில்லை. பரவாயில்லை. இரவு ஏதாவது கிடைக்கும்", என்று சிரித்த முகத்தோடு சொன்னான்.

அன்றிரவும் சென்றான். காலையில் வெறுங்கையோடு திரும்பினான். ஆனால் சிரித்த முகத்தோடு, "அடுத்தமுறை நிச்சயம் கிட்டும்" என்று சொல்லிவிட்டு நிம்மதியாகத் தூங்கச் சென்றான். நான் அவனுடன் ஒரு மாதம் இருந்தேன். அத்தனை நாட்களிலும் அவன் எனக்கு வைத்தியமும் செய்து, உணவும் கொடுத்து, கவனமாக என்னைப் பார்த்துக் கொண்டான்.  அத்தனை நாட்களிலும் அவன் திருடச் சென்றுவிட்டு வெறுங்கையுடனேயே திரும்பினான்.

ஆனாலும் அவனுடைய சிரித்தமுகம் மட்டும் மாறியதே இல்லை.  அடுத்த முறை நிச்சயம் கிட்டும், என்பதை அவன் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தான். பிறகு நான் தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கினேன். தியான யோகத்தில் மிகஆழமாக ஈடுபட்டேன். ஆனால் ரொம்ப நாட்களுக்கு மனம் ஒடுங்கவேயில்லை. பலஎண்ணங்கள் தோன்றி அலைக்கழித்தன. சித்திர வதையாக இருந்தது. பலசமயங்களில் எல்லாவற்றையும் விட்டுவிடுவோம் என்றுதோன்றும்.

 
எப்போது மனது ஒடுங்கும். எப்போது சமாதிநிலை கைகூடும்? எப்போது நம் ஆன்மீகப் பயணத்தில் ஒரு நிறைவெய்துவோம்?' இந்த வேட்கைச் சுட்டெரித்தது. பேசாமல் எல்லா வற்றையும் தூக்கியெறிந்துவிட்டு உலக வாழ்க்கைக்கே திரும்பி விடுவோமா என்றும் தோன்றும். அப்போதெல்லாம்  அந்தத் திருடனின் மலர்ந்த முகமே தோன்றும். "அடுத்தமுறை கிட்டும்" என்னும் அவனுடைய சொற்கள் என் காதுகளில் ஒலிக்கும். ஆகவே விடாப்பிடியாக ஆத்மசாதனையில் ஈடுபட்டேன்.  ஒருநாள் சமாதிநிலையை எய்தினேன். அதனுடன் சேர்ந்து கிட்டும் ஆற்றல்களும் தலைப்பட்டன".

அந்தத் திருடன், 'துறவி' என்னும் என்னுடைய சுயதர்மத்தை எனக்கு போதித்தான். விடாமுயற்சியுடன் ஆத்மசாதனையைப் புரியதூண்டலாக விளங்கினான். என்னுடைய வழியைக் காட்டினான். அந்தத் திருடன்தான் என்னுடைய இரண்டாவது குரு".

பல ஆண்டுகள் கழிந்தன. யோக சாதனைகளைப் புரிந்தும் என்னுடைய சாதனையில்என்னுடைய அறிவில் ஏதோ குறையிருப்பதாகவே தோன்றியது. ஒரு திருப்தியில்லை. என்ன குறையென்று சரிவரப் புரியவுமில்லை. ஒருநாள் இரவு. மண்டபத்தில் இருந்த விளக்கை ஒரு சிறுவன் அணைத்தான். நான் அவனிடம் விளையாட்டாகக் கேட்டேன்:  "அந்த வெளிச்சம், சுடர் எங்கே போயிற்று?" அவன் சொன்னான்: "இது தெரியாதா? அது எங்கிருந்து வந்ததோ, அங்கு போய்விட்டது". அப்போதுதான் இந்த உலகம், பிரபஞ்சம், தோற்றம், என் பிறவி - அனைத்தின் ரகசியமும் புரிந்தது. அதையும் உணர்ந்துதான் கொண்டேன். சொல்லில் வடிக்க இயலாது.

அத்துடன் என் தேடலும் முடிந்தது. என் வேட்கையிம் தீர்ந்தது. தாபமும் மறைந்தது. அதுவரை இல்லாத பரிபூரண திருப்தி என் மனதை ஆட்கொண்டது. திருப்தி வந்தவுடன் ஒரு சாந்தி குடிகொண்டது. சாந்தத்துடன் ஒரு பூரணத்துவமும் ஏற்பட்டுவிட்டது. இப்போது நானும் எங்கிருந்து வந்தேனோ அங்கு போகப்போகிறேன். இதற்கு வழி காட்டியவன் அந்தச் சிறுவன்தான்.  அவன்தான் என்னுடைய மூன்றாவது குரு".

இதனைச் சொல்லியவாறு, துறவி கண்களை மூடினார். ஆழமாக மூச்சை இழுத்துக் கொண்டார். மீண்டும் வெளியில் விடவேயில்லை.
******************************************************************
இனிய நண்பார்களே எப்பொழுது, யாரால் நமது ஆன்மீக ஊற்றுக்கண் திறக்கப்படும் என்று நம்மால் தீர்மானிக்க முடியாத பொழுது அயர்ச்சியும், தளர்ச்சியும் கொண்டு நமது முயற்சியைக் கைவிடக் கூடாது என்பதற்கு இக்கதை ஒரு விளக்கமாக அமைந்து என்னைத் தெளிய வைத்துள்ளது. இனிய நட்புக்கள் தங்களின் கருத்துப் பின்னூட்டமிட அன்புடன் வேண்டுகின்றேன்.. கே எம் தர்மா...  

சிவவாக்கியம் (221-225) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (221-225)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -221
உயிருந்தது எவ்விடம் உடம்பெடுப்பதின் முனம்
உயிரதாவது ஏதடா உடம்பாவதாவது ஏதடா
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா

இந்த உடம்பை எடுப்பதற்கு முன்னர் உயிர் எங்கு இருந்தது? உயிர் ஆவது எது? உடம்பாக ஆவது எது? உயிரையும் உடம்பையும் ஒன்றாக்குவது எது? உயிரினால் உடம்பெடுத்த ஞானியே உண்மையைக் கூற வேண்டும். உடம்பாக உருவெடுக்கும் முன்பு உயிர் நினைவு என்னும் ஆகாயத்தில் இருந்தது. உயிர் சிவனாகவும் உடம்பு சக்தியாகவும் இருக்கின்றது. உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது சிவம். அச்சிவமே ஞானம். அதுவே மெய்ப்பொருள். அதுவே அநாதியான சோதி. ஆதலின் உடல் தத்துவங்களையும், உயிர் தத்துவங்களையும் நன்கு அறிந்து கொண்டு சிவத்தைச் சேர தியானியுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -222 

சுழித்தவோர்  எழுத்தையும் சொன்முகத்து இருத்தியே
துன்ப இன்பமுங் கடந்து சொல்லு மூல நாடிகள்
அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே
ஆருப
ங்காயம் கலந்து அப்புறத் தலத்துளே.

சுழித்த ஒரேழுத்தான அகாரத்தை கண்டத்தில் வைத்து சொற்கள் உதிக்கும் முகமான மூலாதாரத்தில் செலுத்தி இருத்தி பின் உகாரத்தால் குண்டலினியை எழுப்பி மேலேற்ற வேண்டும். இதனால் ஏற்படும் இன்ப துன்பங்களைக் கடந்து மூல நாடியான சுழுமுனையில் அழுத்தி சிகாரத்தால் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களிலும் கலந்து வாசியை செலுத்தி அப்புறத்தலமான சகஸ்ராரத்தில் சேர்க்க வேண்டும். இதுவே சித்தர்களின் வாசியோகம்.
 
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -223
உருத்தரி
ப்ற்கு முன் உயிர் புகுந்த நாதமும்
கருத்தரிப்பதற்கு முன் காயம் என்ன சோணிதம்
அருள்தரிப்பதற்கு முன் அறிவு மூலாதாரமாம்
குறித்தறிந்து கொள்ளுவீர் குணங்
கெடும் குருக்களே.  
உடம்பாக உருவாவதற்கு உயிரானது ஆகாயத்தில் நாதமாக புகுந்திருந்தது. கருத்தரிப்பதற்கு முன்பு உடம்பு தாயின் கருவறையில் சுக்கில சுரோணித நீராய் இருந்தது. உயிரும் உடலும் சேர்ந்து வளர்வதற்கு இறையருள் அறிவான சோதியாக மூலாதாரத்தில் இருந்தது. இப்படி வெளிவந்த உடம்பில் உயிர் சூட்சுமமாக இருப்பதை குறித்தறிந்து கொண்டு அதிலே இறைவனே குருவாக உறைவதை உணர்ந்து கொள்ளுங்கள்.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் - 224
எங்கும் உள்ள ஈசனார் எம்முடல் புகுந்த பின்
பங்கு கூறு பேசுவார் பாடு சென்று அணுகிலார்
எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றிரண்டு பேதமோ
உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே.

எங்கும் நீக்கமற நிறைந்துள்ள ஈசன் எனது உடலில் கர்த்தாவாக புகுந்திருந்தான் என்பதை என்னிலேயே உணர்ந்து கொண்டேன். ஒன்றாய் உள்ள இறைவனுக்கு பல பெயரிட்டு பங்கு போட்டு பேசுவோர்கள் அவனை அடைவதற்குரிய உண்மையான வழியை அறிந்து மெய்பாடுபடுவதற்கு அணுகமாட்டார்கள். எங்கள் தெய்வமே பெரிதென்றும் உங்கள் தெய்வம் சிறிது எனவும் பேசி இறைவனை பேதப் படுத்துவார்கள். அது உங்களது அறியாமையால் விளைந்த பேதமேயன்றி இதுவே இறைவனில் பேதம் இல்லை. உண்மையாக உள்ள இறைவன் ஒருவனேயன்றி இரண்டு பேதங்கள் ஏதும் இல்லை. அவன் எங்கும் எப்போதும் எல்லோர்க்கும் பொதுவாக ஒன்றாகவே  விளங்குகின்றான்.  

     

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 225
அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்
பெரியதாகி உலகுதன்னில் நின்ற பாதம் ஒன்றலோ
விரிவதென்று வேறு செய்த வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாரும் இங்கும் அங்கும் எங்கும் ஒன்றதே!

 
விஷ்ணுவாலும் பிரம்மாவாலும் தேடிக்காண முடியாத அடி முடியை, யாவர்க்கும் பெரியவனாக நின்ற ஈசன் ஆண்ட சராசரங்கள் எங்கும் ஒன்றாக விளங்குகின்றான். ஈசன் ஒருவனே அநாதியானவன். இந்த உலகம் யாவும் உள்ள உயிர்கள் எல்லாவற்றிலும் பொருந்தி நின்ற பாதம் ஒன்று அல்லவோ, எல்லாமே அவனுக்குள் அடங்கி யாதும் ஒன்றாக இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். விஷ்ணு பிரம்மா சிவன் என மூவரையும் வேறுபடுத்தி விரிவுரைகள் செய்து வாய் ஜாலத்தால் வேடம் போட்டு திரியும் மூடர்களே! மூவரும் ஒன்றாக உனக்குள்ளேயே இருப்பதை அறிவை அறிவால் அறிந்து உண்மையை உணர்ந்து தெளிந்து பாருங்கள். இங்கும், அங்கும், எங்குமே ஒன்றான மெய்ப்பொருள் சிவமே!!!!  

***************************************************

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

Dec 2, 2011

சிவவாக்கியம் (216-220) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (216-220)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!

சித்தர் சிவவாக்கியம் - 216
அணுத் திரண்ட கண்டமாய் அனைத்து பல் யோனியாய்
மனுப் பிறந்து ஓதி வைத்த நூலிலே மயங்கு
றீர்
சனிப்பது ஏது சாவது ஏது தாபரத்தின் ஊடு போய்
நினைப்பது ஏது நிற்பது ஏது நீர் நினைந்து பாருமே!

அணுக்களால் திரண்டு உருவானது உடம்பு, அது இவ்வுலகில் அனைத்தும் பலவிதமான உயிரி
ங்களாக விளங்குகின்றது. நாள் வகை யோனிகளால்  வெளிவரும் உயிரில்தான் மனிதன் பிறக்கின்றான். இப்படி வந்த மனிதர்களின் அறிவில் உதித்த மனுதர்மம், சாஸ்திரங்கள் போன்ற நூல்களைப் படித்து உண்மையை உணராது மயங்குகின்றீர்கள். ஆத்மா பிறப்பதோ இறப்பதோ இல்லை. ஒன்று மற்றொன்றாக மாறி வருகின்றது. இவை யாவும் நன்குணர்ந்து தன்னை அறிந்து தற்பரமாய் இருக்கும் பரம்பொருளை பற்றி நினைவாக நினைப்பது எது? என்றும் நிலையாக நிற்பது எது என்பதையும் அது நீராக இருப்பதுவே என்பதையும் உணர்ந்து அவ்விடத்திலேயே தியானியுங்கள். நினைவுதனை நினைவு கொண்டு நினைந்து பாருங்கள். 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -217 

ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்தும் அப்புறம்
சோதியாகி நின்றிலங்கு சுருதி நாத சோமனை
போதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகள்
சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே!!!

ஆதியாக அண்டங்கள் யாவிலும் தோன்றி அப்பாலுக்கப்பாலாய் நின்று சோதியாக இயங்கும் ஈசனை சுருதியுடன் கூடிய இசையோடும் நாதலயமாகவும் தனக்குள் யாரும் போதிக்காமல் ஓதாதுணர்ந்த மெய் ஞானிகள் சோமசுந்தரனையே தியானித்திருப்பார்கள். அவர்கள் எல்லோருக்குள்ளும் இறைவன் இருப்பதை உணர்ந்
தால் சாதி பேதம் என்பதை எங்கும் எப்போதும் யாரிடமும் பார்க்கமாட்டார்கள். சற்றும் பேதம் இல்லாது விளங்கும் பரம்பொருளையே அனைவரிடமும் பார்ப்பார்கள்.
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -218
ஆக்கை முப்பது இல்லையே ஆதி காரணத்திலே
நாக்கை மூக்கையுள் மடித்து நாத
நாடி யூடு போய்
எக்கறுத்தி  ரெட்டையும் இ
றுக்கழுத்த வல்லிரே
பார்க்க பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுதே!! 

ஆக்கை என்ற வாழ்வில் ஆதியான ஆன்மாவிற்கு மூப்பு என்பதில்லை. ஆன்மா ஆதியாக இருப்பதால் உடம்பு மூப்பு அடைந்தாலும் அது என்றும் இளமையோடே இருக்கின்றது. நாக்கை உள் மடித்து உண்ணாக்கில் வாசியை வைத்து ஊதி நாதத்தை உண்டு பண்ணி நடு நாடியான சுழுமுனை  வாசலைத் திறக்கவேண்டும். இடகலை பிங்கலையாக ஓடும் மூச்சுக் காற்றை எக்கி எட்டு ரெண்டு அட்சரத்தால் இறுக்கி சுழுமுனையில் வாசியை அழுத்தி தியானிக்க வல்லவர்கள் ஆனால் தவம் கூடி மெய்ப்பொருளில் சேர்ந்து பார்க்கும் திசைகளில் எல்லாம் பரப்பிரம்மம் காட்சி தரும் நீயே அதுவாக ஆவாய்.
  
****************************************************
சித்தர் சிவவாக்கியம் - 219
அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அல்லல் செய்து நிற்பதும்
அஞ்சும் அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும்
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லிரேல்
அஞ்சும் அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே!

மானுட உடம்பில் ஐந்து பூதங்களும் ஐந்து புலன்களும் ஐந்து கோஷங்களும் ஐந்து அவஸ்தைக
ளாகவும் இருந்து அல்லல் செய்து நிற்கிறது. அஞ்செழுத்தே நமசிய என்ற பஞ்சாட்சரமாக அமர்ந்து நமக்குள் இருக்கின்றது. ஐந்து பூதங்களாகவும் ஐந்து புலன்களில் இயங்கும் அஞ்செழுத்தை நமசிவய என்று உச்சரித்து செபித்து தியானிக்க வேண்டும். அஞ்செழுத்தின் உட்பொருள் யாவையும் நன்கு உணர்ந்து உடலையும் உயிரையும் பாதுகாத்து அஞ்செழுத்தை ஓதி வருபவர்க்கு அஞ்செழுத்தும் ஐந்து வண்ணங்களாக இருந்து உனக்குள்ளேயே உகாரமாக அமர்ந்திருப்பது மெய்ப் பொருளாக விளங்கும் சிவமே என்பதை அறிந்து அஞ்செழுத்தால் தியானம் செய்யுங்கள்.
     

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 220
அஞ்செழுத்தின் அனாதியாய் அமர்ந்து நின்றது ஏதடா
நெஞ்செழுத்தி நின்று கொண்டு நீ செபிப்பது ஏதடா
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா
பி
ஞ்செழுத்தின் நேர்மைதான் பிரிந்துரைக்க வேண்டுமே!!!
 
அஞ்செழுத்தில் ஓர் எழுத்தாய்  அனாதியாய் அமர்ந்து நின்றது சிகாரமே. அதை நெஞ்சமாகிய அனாகத சக்கரத்தில் நின்று சிவயநம என செபிக்க வேண்டும். இது பஞ்சாட்சரமாக பிஞ்செழுத்து எனும் ஊமைஎழுத்தாக இருப்பதை உணர்ந்து அங்கேயே மனதை நிறுத்தி நினைவால் நமசிவய, சிவயநம, யநமசிவ, மசிவய
, வயநமசி, என ஐம்பத்தோர் அட்சரங்களாக பிரித்து செபித்து தியானிக்க வேண்டும்.

***************************************************

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

குரு பரம்பரை:- படித்ததில் பிடித்தது. (ஆன்மீக தீப்பொறி)


 
குரு பரம்பரை:
நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்று 
சொல்லுகின்றார்களே! எதனால் என்பது இதுவரையிலும் புரியாமல் இருந்தது. ஏனெனில் நம்பத்தகுந்த விதமல்லாது அல்லது ஆச்சரியப்படத்தக்க விதத்தில் காணப்படும் கருத்துக்களை காணும் பொழுது வியப்பாக உள்ளது.  
 
இணைய தளத்தில் உலவும் பொழுது, கடாரத் தமிழ்ப் பேரறிஞர்  டாக்டர் எஸ்.ஜெயபாரதி அவர்களின் வலைத்தளம் பார்க்க நேர்ந்தது. அதில் முனைவர் எஸ். ஜெயபாரதி அவர்கள் பல்வேறு தலைப்புக்களில் பதிவுகளை பகிர்ந்ததை காண முடிந்தது. அனைத்து பதிவுகளும் அறிந்து கொள்ள வேண்டிய தலைப்புக்களை தேர்ந்தெடுத்து சரள நடையில், அனைவருக்கும் எளிதில் புரியும்படியும், தக்க சான்றுகளோடும் பகிர்ந்துள்ளார். 

அதில் ஒன்றுதான் இந்த குருபரம்பரை விளக்கச் சிறுகதை. சித்தம் தெளிய, சித்தி அடைய எவ்விடத்திலிருந்தும் தூண்டுதலோ, விளக்கமோ, வியாக்கியானமோ கிடைக்க வாய்ப்பு உள்ளதனை காணக் கொடுத்துள்ளார். நாமும்தான் அதனை காண்போமே இனிய நட்புக்களே!!! 
***************************************************************

பெரிய துறவி ஒருவர் மகாசமாதி அடையும் நிலையில் இருந்தார். உண்மையிலேயே பற்றற்ற நிலையில் வாழ்ந்துவந்தவர். அவருக்கு யார் குரு, அவருடைய பூர்வாசிரமம் என்ன, துறவியான பின்னர் எங்கெல்லாம் சென்றார், என்னவெல்லாம் படித்திருக்கிறார் என்ற விபரமெல்லாம் யாருக்கும் தெரியாது. அவருக்கென்று எதுவுமே வைத்துக் கொண்டதில்லை. ஒரு பிச்சைப்பாத்திரம், ஓடுபோல் எதுவுமே கிடையாது. ஒரு கோயில்மண்டபம், அதில் இருப்பார். அல்லது அதன் அருகில் உள்ள அரசமரத்தின் மேடை.
   
உடுக்கக் கவிக்கக் குளிர்காற்று வெய்யில்,ஒடுங்கி வந்தால்
தடுக்கப் பழைய வொரு வேட்டியுண்டு; சகமுழுதும்
படுக்கப் புறந்திண்ணை எங்கெங்கும் உண்டு: பசித்துவந்தால்
கொடுக்கச் சிவனுண்டு; நெஞ்சே நமக்குக் குறைவில்லையே!

என்று பட்டினத்தார் சொன்னது போல் வாழ்ந்து வந்தார். இன்னும் சொல்லப் போனால் அந்த வேட்டியையும்கூட அவர் மற்றவர்களுக்காகத்தான் கட்டியிருந்தார். பசிக்கும் போது ஏதாவது ஒரு வீட்டின் முன்னால் நிற்பார்.                  
அந்த வீட்டுக்காரர் உணவு கொண்டுவந்து நீட்டும் போது இருகைகளையும் ஒன்றாகச் சேர்த்து ஏந்துவார். அது கொள்ளுமளவுக்கு பிச்சையைப் போடுவார்கள். அப்படியே அதனைக் கையில் வைத்துக்கொண்டே உண்பார். அதன் பின் நீரருந்துவார். பிறகு போய் விடுவார். அம்மா பிச்சை,  என்றெல்லாம் கேட்பதில்லை. அவர்களாகவே போட்டால்தான் உண்டு. சிலர் அவர் இருப்பிடத்துக்கு வந்து உணவை வைத்துவிட்டுப் போவார்கள். பசித்தால் உண்பார்.

அவருடைய அறிவையும் ஆற்றலையும் பற்றி வியந்து பேசிக் கொள்வார்கள். அவராகக் கூட்டமேதும் திரட்டாமலேயே அவருக்குச் சீடர் கூட்டமொன்று இருந்தது. அவர்கள் தாம் தம்மைத்தாமே அவருடைய சீடர்களாகக் கூறிக்கொள்வார்கள். அவர் ஏதும் கண்டு  கொள்வதில்லை.

ஓர் இளைஞன் அவரிடம் மிகுந்த பக்தியும் பிடிப்பும் வைத்திருந்தான்.  துறவி மகாசமாதி அடையும்தருவாயில் அந்த இளைஞன் அவரிடம் வந்தான். அவருடைய குரு பரம்பரையைப் பற்றி அறிந்துகொள்ள அவனுக்கு ஆசை.  ஆகவே உபநிஷத்தில் உத்தாலக ஆருணி முனிவரிடம் சுவேதகேது கேள்வி கேட்டதுபோல் கேட்டான். சுவாமி! இப்போதாவது சொல்லுங்கள். உங்களுடைய குரு யார்? உங்கள் குரு பரம்பரை என்ன? என்று.

லேசாகக் கண்களைத் திறந்துபார்த்துவிட்டு, அவனை மிக அருகில் வைத்துக்கொண்டு சொல்லலானார்: "என்னுடைய வாழ்க்கையில் மூன்று பேர் என்னுடைய குருமார்களாக விளங்கினார்கள்".நான் துறவியாகிய ஆரம்பகாலத்தில், நானும் ஏனைய பல சாமியார்களைப் போலவே ஆசார நுஷ்டானங்களைக் கடைப் பிடித்து வந்தேன். ஆனால் என்னுள் ஒரு வெட்கை - ஓர் ஆன்மதாபம் - இருந்து கொண்டே யிருந்தது. ஒரு தேடல். அதனைத் தீர்ப்பது எப்படி என்பதுதான் தெரியவில்லை. என்னுடைய உடமைகளை மூட்டையாகக் கட்டிக்கொண்டு ஊர், ஊரூராகத் திரிந்தேன்".

மேலும் பயணிப்போம் இனிய நண்பர்களே... இரண்டாம் பாகத்தில். 
பதிவுசெய்த கடாரத் தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் எஸ்.ஜெயபாரதி அவர்களைப் பின்தொடர்ந்து.
நன்றியுடன் மீள் பதிவு செய்த அன்பன் கே எம் தர்மா...