Search This Blog

Dec 6, 2011

சிவவாக்கியம் (241-245) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (241-245)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -241
கண்ணிலே இருப்பவனே கருங்கடல் கடைந்த மால்
விண்ணிலே இருப்பவன் மேவி அங்கு நிற்பனே
தன்னுளே இருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே இருப்பளே எங்குமாகி நிற்பனே.

மூன்றாவது அகக் கண்ணில்தான் கருமையான இருளை அகற்றி பாற்கடலை கடைந்த பெருமாள் பள்ளி கொண்டுள்ளான். விண்ணாக விளங்கும் மனத்தை மேவி அங்கு நிற்பான் கண்ணன். தனக்குள்ளே இருப்பான் இந்த தராதலம் படைத்த பிரம்மன். பரம்பொருளான ஈசன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இப்படி நமக்குள்ளே இருக்கும் தெய்வசக்திகளை உணர்ந்து கொண்டு மூவரையும் மெய்ப் பொருளில்  ஒன்றாக்கி தியானியுங்கள்.

    
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -242 

ஆடு மாடு தேடினும் ஆணை சேனை தேடினும்
கோடி வாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ
ஓடியிட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரை போல் தர்மம் வந்து நிற்குமே.


ஆடு மாடுகள் என்றும் யானை சேனை சேவகர்கள் என்றும் கோடிக்கணக்கான செல்வங்களைத் தேடித்தேடி சேர்த்து வைத்தாலும் மரணம் நேரும் பொது இவையாவும் குறுக்கே வந்து நின்று தடுக்க முடியுமா? இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் நீங்கள் ஓடி ஓடிச் செய்த உதவிகளும் மனம் உவந்து செய்த அன்னதானம் போன்ற தர்மங்களும் ஆபத்துக் காலங்களில் சாட்டையால் சாடி விட்ட குதிரையைப் போல் விரைவாக வந்து தலைக் காத்து நிற்கும். தர்மம் தலைகாக்கும் என்பதனை உணர்ந்து உங்கள் பிறவியை ஈடேற்ற தர்ம காரியங்களில் ஈடுபடுங்கள்.  

 
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -243
எள் இரும்பு கம்பளி இடும் பருத்தி வெண்கலம்
அள்ளி உண்ட நாதனுக்கொர் ஆடைமாடை வஸ்திரம்
உள்ளிருக்கும் வேதியர் உற்ற தானம் ஈதிரால்
மெல்ல வந்து நோய் அனைத்தும் மீண்டிரும் சிவாயமே
 
சாதுக்களுக்கும், சந்நியாசிகளுக்கும் அவர்கள் பசியாற்றி தானியங்கள், தட்சிணைகள், கம்பளிப் போர்வை, பருத்தி ஆடை வஸ்திராணம், வெண்கலப் பாத்திரங்கள் போன்றவைகளை இருப்பதை தானமாக கொடுத்து உபசரித்து தர்மங்கள் செய்து வாழ வேண்டும். முதுமையினால் உடல் நலிந்து வீட்டுக்குள்ளிருக்கும் அந்தணர்களுக்கு தேவையான உதவிகளை தேடிச் சென்று
தானம் கொடுக்க வேண்டும். இப்படியாக தான தர்மங்கள் செய்பவர்களுக்கு வினையால் வந்த நோய்களும், வரும் நோய்களும் அநேக பாவங்களும் அவர்களை விட்டு மெல்ல விலகும். தான தர்மம் செய்வது ஈசனை சேர்ந்து பிறவிப்பிணியைப் போக்கும்.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் - 244
ஊரிலுள்ள மனிதர்காள் ஒரு மனதாய்க் கூடியே
தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதி சித்த நாதரை
பேதையான மனிதர் பண்ணும் புரளி பாருமே பாருமே.
 .
கோயில் தேர் திருவிழாக்களில் ஊரில் உள்ள மனிதர்கள் எல்லாம் ஒருமனதாய் ஒன்றாகக்கூடி தேரின் வடக்கயிற்றைக்கட்டி செம்பினால் ஆன சிலைகளை வைத்து இழுக்கிறார்கள். யாரினானும் அறிய முடியாத ஆதிசித்த நாதனான ஈசனை, தனக்குள் தேகமே தேராகவும் வாசியே கயிறாகவும், உயிரில் சோதியாகவும் இறைவன் இருப்பதை உணராத பேதை மனிதர்கள், பண்ணுகிற புரளியைப் பாருங்கள். அதன் உட்கருத்தை உண்மையாய் உனக்குள் பார்த்து வாசியை இழுத்து ஆறு ஆதாரங்களையும் கடந்து அதற்கப்பால் சித்தத்தில் ஆதியாக விளங்கும் சோதியில் கலந்து  தியானம் செய்யுங்கள்.
 
     

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 245
மருள் புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே
குருக் கொடுத்த மந்திரம் கொண்டு நீந்த வல்லிரேல்
குருக் கொடுத்த தொண்டரும் குகனொடிந்த பிள்ளையும்
பருத்தி பட்ட பன்னிரண்டு பாடுதான் படுவரே. 
 
அருள் இருந்த சிந்தையில் மருள் புகுந்து மாயையில் சிக்கி மயங்குகின்ற மாந்தர்களே தேடுங்கள், தெளிந்தறியுங்கள், சிந்தையில் சிவம் இருப்பதை உணருங்கள். குருவானவர் தொட்டுக் காட்டி உபதேசித்த ஓம் நமசிவய என்ற மந்திரத்தைக் கொண்டு யோக ஞான சாதனைகள் செய்து தியானம் செய்யுங்கள். பருத்தி ஆடை ஆவதற்கு முன் பஞ்சானது பன்னிரண்டு பாடுபட்டே உடையாக மாறுகிறது. அதுபோல்குருவிடம் சீடர் பன்னிரண்டு ஆண்டுகள் பாடுபட்டு மெய்நிலை அடைந்து என்றும் மாறா இளமையுடன் இருக்கும் ஈசனின் பிள்ளை முருகனை போல் நீங்களும் ஆகுங்கள். உங்களுக்குள்ளே குகையில் வீற்றிருக்கும் மெய்ப்பொருளை உணர்ந்து தவம் செய்யுங்கள்.
 

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!