Search This Blog

Dec 3, 2011

சிவவாக்கியம் (221-225) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (221-225)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -221
உயிருந்தது எவ்விடம் உடம்பெடுப்பதின் முனம்
உயிரதாவது ஏதடா உடம்பாவதாவது ஏதடா
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா

இந்த உடம்பை எடுப்பதற்கு முன்னர் உயிர் எங்கு இருந்தது? உயிர் ஆவது எது? உடம்பாக ஆவது எது? உயிரையும் உடம்பையும் ஒன்றாக்குவது எது? உயிரினால் உடம்பெடுத்த ஞானியே உண்மையைக் கூற வேண்டும். உடம்பாக உருவெடுக்கும் முன்பு உயிர் நினைவு என்னும் ஆகாயத்தில் இருந்தது. உயிர் சிவனாகவும் உடம்பு சக்தியாகவும் இருக்கின்றது. உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது சிவம். அச்சிவமே ஞானம். அதுவே மெய்ப்பொருள். அதுவே அநாதியான சோதி. ஆதலின் உடல் தத்துவங்களையும், உயிர் தத்துவங்களையும் நன்கு அறிந்து கொண்டு சிவத்தைச் சேர தியானியுங்கள்.
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -222 

சுழித்தவோர்  எழுத்தையும் சொன்முகத்து இருத்தியே
துன்ப இன்பமுங் கடந்து சொல்லு மூல நாடிகள்
அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே
ஆருப
ங்காயம் கலந்து அப்புறத் தலத்துளே.

சுழித்த ஒரேழுத்தான அகாரத்தை கண்டத்தில் வைத்து சொற்கள் உதிக்கும் முகமான மூலாதாரத்தில் செலுத்தி இருத்தி பின் உகாரத்தால் குண்டலினியை எழுப்பி மேலேற்ற வேண்டும். இதனால் ஏற்படும் இன்ப துன்பங்களைக் கடந்து மூல நாடியான சுழுமுனையில் அழுத்தி சிகாரத்தால் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களிலும் கலந்து வாசியை செலுத்தி அப்புறத்தலமான சகஸ்ராரத்தில் சேர்க்க வேண்டும். இதுவே சித்தர்களின் வாசியோகம்.
 
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -223
உருத்தரி
ப்ற்கு முன் உயிர் புகுந்த நாதமும்
கருத்தரிப்பதற்கு முன் காயம் என்ன சோணிதம்
அருள்தரிப்பதற்கு முன் அறிவு மூலாதாரமாம்
குறித்தறிந்து கொள்ளுவீர் குணங்
கெடும் குருக்களே.  
உடம்பாக உருவாவதற்கு உயிரானது ஆகாயத்தில் நாதமாக புகுந்திருந்தது. கருத்தரிப்பதற்கு முன்பு உடம்பு தாயின் கருவறையில் சுக்கில சுரோணித நீராய் இருந்தது. உயிரும் உடலும் சேர்ந்து வளர்வதற்கு இறையருள் அறிவான சோதியாக மூலாதாரத்தில் இருந்தது. இப்படி வெளிவந்த உடம்பில் உயிர் சூட்சுமமாக இருப்பதை குறித்தறிந்து கொண்டு அதிலே இறைவனே குருவாக உறைவதை உணர்ந்து கொள்ளுங்கள்.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் - 224
எங்கும் உள்ள ஈசனார் எம்முடல் புகுந்த பின்
பங்கு கூறு பேசுவார் பாடு சென்று அணுகிலார்
எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றிரண்டு பேதமோ
உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே.

எங்கும் நீக்கமற நிறைந்துள்ள ஈசன் எனது உடலில் கர்த்தாவாக புகுந்திருந்தான் என்பதை என்னிலேயே உணர்ந்து கொண்டேன். ஒன்றாய் உள்ள இறைவனுக்கு பல பெயரிட்டு பங்கு போட்டு பேசுவோர்கள் அவனை அடைவதற்குரிய உண்மையான வழியை அறிந்து மெய்பாடுபடுவதற்கு அணுகமாட்டார்கள். எங்கள் தெய்வமே பெரிதென்றும் உங்கள் தெய்வம் சிறிது எனவும் பேசி இறைவனை பேதப் படுத்துவார்கள். அது உங்களது அறியாமையால் விளைந்த பேதமேயன்றி இதுவே இறைவனில் பேதம் இல்லை. உண்மையாக உள்ள இறைவன் ஒருவனேயன்றி இரண்டு பேதங்கள் ஏதும் இல்லை. அவன் எங்கும் எப்போதும் எல்லோர்க்கும் பொதுவாக ஒன்றாகவே  விளங்குகின்றான்.  

     

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 225
அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்
பெரியதாகி உலகுதன்னில் நின்ற பாதம் ஒன்றலோ
விரிவதென்று வேறு செய்த வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாரும் இங்கும் அங்கும் எங்கும் ஒன்றதே!

 
விஷ்ணுவாலும் பிரம்மாவாலும் தேடிக்காண முடியாத அடி முடியை, யாவர்க்கும் பெரியவனாக நின்ற ஈசன் ஆண்ட சராசரங்கள் எங்கும் ஒன்றாக விளங்குகின்றான். ஈசன் ஒருவனே அநாதியானவன். இந்த உலகம் யாவும் உள்ள உயிர்கள் எல்லாவற்றிலும் பொருந்தி நின்ற பாதம் ஒன்று அல்லவோ, எல்லாமே அவனுக்குள் அடங்கி யாதும் ஒன்றாக இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். விஷ்ணு பிரம்மா சிவன் என மூவரையும் வேறுபடுத்தி விரிவுரைகள் செய்து வாய் ஜாலத்தால் வேடம் போட்டு திரியும் மூடர்களே! மூவரும் ஒன்றாக உனக்குள்ளேயே இருப்பதை அறிவை அறிவால் அறிந்து உண்மையை உணர்ந்து தெளிந்து பாருங்கள். இங்கும், அங்கும், எங்குமே ஒன்றான மெய்ப்பொருள் சிவமே!!!!  

***************************************************

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!