Search This Blog

Dec 3, 2011

சிவவாக்கியம் (226-230) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (226-230)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -226
வெந்த நீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர்
சிந்தையுள் நினைந்துமே தினம் செபிக்கும் மந்திரம்
முந்த மந்திரத்திலோ மூல மந்திரத்திலோ
எந்த மந்திரத்திலோ ஈசன் வந்து இயங்குமே
வேகா தலை சாகாக்கால் போகப் புனலாக இருக்கும் திருநீரை அறியாது வெந்த விபூதியை நீராக்கி உடம்பு முழுவதும் பூசி வேடம் போடுகிறீர். நீராக நின்ற மந்திரத்தில் நெருப்பாக ஈசன் இயங்குவதை அறிந்து அதையே சிந்தையுள் வைத்து சிவனை நினைந்து 'சிவயநம' என தினமும் செபித்து தியானம் செய்யுங்கள். அதுவே அனைத்துக்கும் முந்தி தோன்றிய மந்திரம். மூல மந்திரம், பஞ்சாட்சரத்தில்தான் ஈசன் இருந்து இயங்குகின்றான்.

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -227 

அகார காரணத்திலே அனேகனேக ரூபமாய்
உகார காரணத்திலே உருத்தரித்து நின்றனன்
மகார காரணத்திலே மயங்குகின்ற வையகம்
சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே!

ஓங்காரமே அனைத்தும் தோன்றுவதற்கு காரணம், அதில் அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்றும் அடங்கியுள்ளது. இதில் யாவிலும் சிகரமாக இருப்பதுவே சிகாரம். அகாரமே உடம்பாகி அனேகனேக ரூப
ங்களாவதற்கு   காரணமாய் ஆனது. உகாரமே உயிராகி உருத்தரித்து நிற்பதற்கு காரணமாய் ஆனது. மகாரமே மணமாகி இந்த வையகம் முழுதும் மயங்குவதற்கு காரணமாய் ஆனது. இவை யாவிற்கும் ஆதியாக சிகாரமே காரணம் என்பதை அறிந்து சிவமே பொருளாய் இருப்பதை தெளிந்து உணர்ந்து கொண்டு தியானியுங்கள்.
 
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -228
அவ்வெழுத்தில் உவ்வு வந்து அகாரமும் சனித்ததோ
உவ்வெழுத்து மவ்வெழுத்தும் ஒன்றை ஒன்றி நின்றதோ
செவ்வை ஒத்து நின்றலோ சிவபதங்கள் சேரினும்
மிவ்வையொத்த ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே.
.  
'ஓம்' என்ற ஓங்காரத்தில் அ, உ, ம் என்ற மந்திரங்கள் மூன்றேழுத்தாக இருக்கின்றது. இதனை சித்தர்கள் அவ், உவ், மவ் என்றும் அம், உம், இம் என்றும் சொல்கிறார்கள்.
அவ்வும் உவ்வும் ஆகிய நாத விந்து சேர்ந்தே அகாரமாகிய உடம்பு பிறந்தது. உவ்வும் மவ்வும் ஆகிய உயிரும் மனமும் ஒன்றாகி ஒன்றி நிற்கின்றது. இப்படி ஓங்காரம் உடலுயிராய் நிற்பதை உணர்ந்து அது செம்மையான பொருளாய் இருப்பதை அறிந்து மின்னலைப் போன்ற சோதியில் கலந்து தியானத்தால் சிவத்தின் திருவடியில் சேரலாம். வ்விதமாக செய்து வரும் நற்குணம் நிறைந்த ஞானிகள் விரிவாக உபதேசிக்க வேணும். 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் - 229
ஆதியான அஞ்சிலும் அநாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொருபம் அற்ற ரெண்டிலும்
நீதியான தொன்றிலே நிறைந்து நின்ற வஸ்துவை
ஆதியான தோன்றுமே அற்றதஞ் செழுத்துமே.
 .
ஆதியாக உள்ள பஞ்சபூதங்கள் மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய அஞ்சிலும், அனாதியாக உள்ள அந்தக் கர
ங்கள் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கிலும் சோதியான ஓங்காரத்தில் அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்றிலும், சொரூபம் அற்ற உயிர் உகாரத்தில் சூரிய சந்திர கலையில் இரண்டிலும் எல்லோர்க்கும் பொது நீதியாக விளங்கும் ஒன்றிலே நிறைந்து நின்ற வஸ்துவான மெய்ப்பொருளை அறிந்துகொள்ளுங்கள். இதுவே ஆதியான ஒன்றாக இருப்பதை உணர்ந்து அதிலேயே ஒன்றி அஞ்செழுத்தால் ஓதி தியானியுங்கள்.
     

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 230
வானிலாதது ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில்
ஊனிலாதது  ஒன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில்
நாணிலாதது ஒன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில்
தானிலாதது ஒன்றுமே தயங்கி ஆடுகின்றதே 
 
ஆகாயம் இல்லாதது எதுவும் இல்லை. ஒன்றும் இல்லாததே ஆகாயம் என்பதை அறிந்து அதிலேயே நாடி தியானம் செய். உடம்பு
இல்லாத
உயிர் ஒன்றுமில்லை. உடம்பு இல்லை என்ற நிலையில் உடம்பிலேயே யோகம் செய். நான் என்பது என்ன என்பதை உணர்ந்து, நான் என்ற ஆனவமில்லாது நான் நீயாக ஞான சாதகம் செய். நான் என்பதற்று தானாக நின்றது ஒன்றான சிவமே உன் உடம்பில் தங்கி இயங்கி ஆடுகின்றது. அத்திருவடி பற்றி இறவா நிலை அடையுங்கள்.
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!