Search This Blog

Dec 20, 2011

சிவவாக்கியம் (306-310) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (306-310)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -306
சுற்றும் ஐந்து கூடமொன்று சொல்லிறந்ததோர் வெளி
சக்தியும் சிவனுமாக நின்ற தன்மை ஒர்கிலீர்
சத்தியாவது உம்முடல் தயங்கு சீவன் உட்சிவம்
பித்தர்காள் அறிந்திலீர் பிரான் இருந்த கோலமே.

பஞ்ச பூதங்களின் கூட்டால் சேர்ந்த உடம்பில் சுற்றுகின்ற சிற்றம்பல கூடமாகிய ஒன்றில், சொற்கள் இறந்த மவுனமாகிய வெளியில் உள்ளீர்கள். ஞானத்தினால் தவம் செய்து தன்னை அறிந்து தெரிந்து கொள்ளுங்கள். சத்தியாவது உங்கள் உடலே அதிலே தங்கி இயங்கும் சீவனுக்குள் இருப்பதுவே சிவம். இப்படியாக ஈசன் நம்முள் இருந்த கோலமே மெய்ப்பொருள் என்பதை அறியாமல் இருக்கும் பித்தர்களே! உண்மையை உனக்குள்ளேயே கண்டு உணருங்கள்.

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -307
மூலம் என்ற மந்திரம் முளைத்த அன்செழுத்துலே
நாலு வேதம் நாவுளே நவின்ற ஞான மெய்யுளே
ஆழம் உண்ட கண்டனும் அறி அயனும் ஆதலால்
ஓலம் என்ற மந்திரம் சிவாயம் அல்லது இல்லையே.   
.

மூல மந்திரமான ஒரெழுத்தில் அஞ்சு பூதங்களும்
அஞ்செழுத்தாக முளைத்து எழுந்து தோன்றுகின்றது. அதனுள்ளேதான் நான்கு வேதங்களாலும் நாவாலே சொல்லும் ஞானம் உடம்பினுள்ளே மெய்ப்பொருளாக உள்ளது. அதிலேயே ஆலம் உண்ட சிவனும் விஷ்ணுவும் பிரம்மனும் ஓம் என்ற மந்திரத்தில் அடங்கியுள்ளார்கள். ஆதலால் அது சிவம் அல்லது வேறு இல்லையே.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் -308
தத்துவங்கள் என்று நீர் தமைக்கடிந்து போவீர்காள்
தத்துவம் சிவமதாகில் தற்பரமும் நீரல்லோ
முத்தி சீவனாதமே மூல பாதம் வைத்த பின்
அத்தநாறும் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.  

  
இறை உயிர் உடற் தத்துவங்களை அறியாமல் தன்னையும் உணராமல் தம்மையே கடிந்து நொந்து போவீர்கள். தத்துவங்கள் சிவம் அதுவானால் தற்பரம் ஆனது நீங்களல்லவோ! இந்த உண்மையை உணர்ந்து நீயே அதுவானால் முக்தி என்பது சிவனாகிய உயிரிலும் நாதமான உடம்பிலும் உள்ள மூலபாதமாக வைத்த சோதியில் சேர கிட்டும். எல்லா உயிர்களுக்கும் அம்மையப்பனாய் விளங்கும் ஈசன் உனக்குள்ளே இருப்பதை அறிந்துணர்ந்து அவனையே சிக்கெனப் பிடித்து யோக ஞான தவம் செய்து இறைவனைச் சேருங்கள். 
 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 309

மூன்று முப்பத்து மூன்றையும் மூன்று சொன்ன மூலனே
தோன்று சேர ஞானிகாள் துய்ய பாதம் என் தலை
ஏன்று வைத்த வைத்தபின் இயம்பும் அஞ்செழுத்தையும்
தோன்ற ஓத வல்லிரேல் துய்ய சோதி காணுமே.      
     
  . 
மூன்று முப்பது மூன்று மூன்று ஆக தொண்ணூற்றி ஆறு தத்துவங்களையும் மூவாயிரம் பாடல்களில் ஒன்பது தந்திரங்களாக திருமந்திரம் சொன்ன திருமூலன் வர்க்கத்தில் தோன்றிய ஞானிகள் பற்றிய துய்ய பாதத்தை நானும் என் தலையாக வைத்து தலையில் வைத்து தியானித்தேன். பின் அப்பாதமே பஞ்சாட்சரமாக இருப்பதை உணர்ந்து அங்கேயே 'சிவயநம' எனும் அஞ்
செழுத்தையும் தோன்ற ஓத வல்லவர்கலானால் சுத்த சோதியான ஈசனின் காட்சி கிடைக்கும்.    .

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 310
உம்பர் வானகத்திலும் உலகபாரம் ஏழினும்
நம்பர் நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும்
செம்பொன் மாடம் மல்குதில்லை அம்பலத்துள் ஆடுவான்
எம்பிரான் அலாது தெய்வம் இல்லை இல்லை இல்லையே.     
        . 
எங்கும் நிறைந்த ஆகாயத்திலும் ஈரேழு உலகங்களிலும் நாம் வாழும் நாட்டிலும் நாவலந்தீவு என்ற தீவிலும் இப்படி எங்கு பார்த்தாலும் இறைவனாகிய ஈசன் ஒருவனே. அவன் நம் உடம்பில் செம்பொன் மாடமாகிய தில்லை பொன்னம்பலத்தில் பொன்னார் மேனியனாக, நடராஜனாக நடனம் ஆடிக்கொ
ண்டுள்ளான் அவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை இல்லை இல்லையே.

***************************************************

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!