Search This Blog

Dec 19, 2011

சிவவாக்கியம் (301-305) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்



சிவவாக்கியம் (301-305)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -301
அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரட்
சக்கரத்து சிவ்வையுண்டு சம்புளத் திருந்தும்
எள் கரந்த எண்ணெய் போல் எவ்வெழுத்தும் எம்பிரான்  
உள் கரந்து நின்ற நேர்மை யாவர் காண வல்லரே.  
    
.*.
என்ற ஆயுத எழுத்தின் அட்சரத்தில் உள்ளே இருக்கும் ஊமை எழுத்தே வெட்டாத சக்கரமாகி நெருப்பான சிகாரமாய் பேசும் எழுத்தாகி சகத்தின் சகல உயிர்களிலும் இருக்கின்றது. எள்ளுக்குள் எண்ணெய் போல் எந்த எழுத்துக்களிலும் (.) எழுத்தாக எம்பிரான் மறைவாகவே இருக்கின்றான். இந்த ஓரெழுத்து இலிங்கமாகி உள்ளே கரந்த நின்ற உண்மையையும் அதுவே சோதியான நேர்மையையும் அறிந்துணர்ந்து யாவர காண வல்லவர்கள்.

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -302
ஆகமத்தின் உட்பொருள் அகண்டமூலம் ஆதலால்
தாக போகம் அன்றியே தரித்த தற்பரமும் நீ
ஏகபாதம் வைத்தனை உணர்த்தும் அஞ்
செழுத்துளே
ஏகபோகம் ஆகியே இருந்ததே சிவாயமே.   .

ஆகமங்கள் கூறும் உட்பொருளும் அகண்டங்களின் மூலமாக உள்ள பரம்பொருளும் ஒன்றேயான ஈசன்தான் விரகதாகமோ சிற்றின்ப போகமா ஏதும் இன்றியே எனக்குள் தானாக தரித்த தற்பரமான சதாசிவன் நீயே. உன்னையே உள்ளில் நினைந்து தியானிக்க உன் ஏகபாத திருவடியை என் தலைமேல் வைத்ததையும் அது அஞ்செழுத்துக்குள்ளே இருப்பதையும் உணர்ந்து கொண்டேன். அந்த ஏக பாதத்தையே உற்றிருந்து தவம்புரிய அதிலேயே சக்தி சிவனும் ஏகபோகமாக இருந்ததையும் அதுவே சிவம் என்பதையும் அறிந்து கொண்டேன்.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் -303
மூல வாசல் மீதுளே முச்சதுரம் ஆகியே
நாலு வாசல் எண் விரல் நாடு உதித்த மந்திரம்
கோலம் ஒன்றும் அஞ்சுமாகும் இங்கலைந்து நின்ற நீ
வேறு வேறு கண்டிலேன் விளைந்ததே சிவாயமே. 

  
மூல வாசலாகிய பத்தாம் வாசலில் உயிரிலிருந்து வெளியேறும் பண்ணிரெண்டங்குலம் பாயும் பிராணன் நாலு வாசல் எனும் இமைகளை கடந்து விரல் அங்குஷ்டம் நடுவே உதிக்கும் சிகாரத்தில் எட்டங்குலம் மீளும். இதனை அறிந்து உயிரிலிருந்து கழிந்த நான்கு அங்குல பிராணனை மீண்டும் உயிரிலே சேர்த்து உயிர் வளர்க்கும் கலையான வாசியால் அஞ்செழுத்தை தியானிக்க வேண்டும். அங்கு ஈசன் நின்ற கோலமாய் ஐவண்ணமாய் ஐந்தெழுத்தாகவும் உள்ளதை உணர்ந்து அங்கெ அலைந்து நின்ற இறைவனே அனைத்துமாகவும் விளைந்து உலகமெங்கும் இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அந்த பஞ்சாட்சரமே நான் வேறு அது வேறு என்று இல்லாமல் இருப்பதை அறிந்து எல்லாமே சிவமயமே தவிர வேறு இல்லை என்பதை உணர்ந்து தியானியுங்கள்.         

****************************************************

சித்தர் சிவவாக்கியம் - 304
சுக்கிலத் தடியுளே சுழித்ததோர் எழுத்துளே
அக்கரத் தடியுளே அமர்ந்த ஆதி சோதி நீ
உக்கரத் தடியுளே உணர்ந்த அஞ்
செழுத்துளே
அக்கரம் அதாகியே அமர்ந்ததே சிவாயமே.     
 
      .
விந்து சக்தியால் உருவாகும் உயிர் சுழித்த ஒ
ரெழுத்தாகி அகாரமான உடம்பில் ஆதியாக அமர்ந்து மெய்ப் பொருளான சோதியாக இருப்பவன் இறைவன். அவனை உகாரமான உயிரில் உணர்ந்து அன்செழுத்துக்குள்ளே அவனே ஒரெழுத்தாகி அதுவாக அமர்ந்து இருப்பது சிவம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.         
 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 305

குண்டலத்துளே யுளே குறித்தகத்து நாயகன்
கண்டவந்த மண்டலம் கருத்தழித்த கூத்தனை
விண்டலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப் பொருள்
கண்டு கொண்ட மண்டலம் சிவாயம் அல்லது இல்லையே.     
     
  . 
காதில் குண்டலங்கள் தொங்கி ஆடுவதைப் போல, குண்டலத்தின் உள்ளே ஆடிக் கொண்டிருக்கும் ஈசனை குறித்தறிந்து கொண்டு அவனே நம் அகத்தில் இருக்கும் நாயகனாக விளங்குவதை உணர்ந்து கொண்டு தியானியுங்கள். கண்ட அந்த மண்டலத்திலே அஞ்ஞானக் கருத்துக்களை அழித்து நமக்குள் நடனமிடும் நடராஜனைக் கண்டு கொள்ளுங்கள். ஆகாயத்தைப் போல் விரிந்த அப்பேரறிவாக விளங்குகின்ற மெய்ப்பொருளைக் காணும் இடத்தில் கண்டுகொண்ட மண்டலத்தில் சிவத்தைத் தவிர மற்றேதும் இல்லையே. பார்பதையே பார்த்து ஒரே மனதோடு சிவயநம என செபித்து தியானியுங்கள்.

***************************************************

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!