Search This Blog

Dec 12, 2011

சிவவாக்கியம் (281-285) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (281-285)


சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -281
ஆடுகின்ற அண்டர் கூடும் அப்புற மதிப்புறம்
தேடு நாலு வேதமும் தேவரான மூவரும்
நீடு வாழி பூதமும் நின்ற தோர் நிலைகளும்
ஆடுவாழின் ஒழியலா தனைத்தும் இல்லை இல்லையே.
 

உடலாகிய கூட்டுக்குள் அண்டமாக ஆடிக் கொண்டிருக்கும் இறைவன் அப்பாலுக்கப்பாலாய் பேரறிவாய் திகழ்கின்றான். அவனையே நான்கு வேதங்களும் தேடி அடையச் சொல்கின்றது. அவ்வண்டக் கூட்டுக்குள்ளேயே அரன், அரி, அயன் ஆகிய மூவரும் ஓங்காரமாகவும் என்றும் உள்ள பஞ்ச பூதங்கள் பஞ்சாட்சரமாகவும் நம் ஆன்மாவில் ஒன்றான மெய்ப்பொருளாக நிலையாக நின்று கொண்டுள்ளது. அதனை அறிந்து ஆடுகின்ற அவன் திருவடியைப் பற்றி அந்த ஒன்றையே தியானித்திருங்கள். அந்த மெய்ப் பொருளின் ஒளியான சோதியினால் தான் அனைத்துமே நடக்கின்றது. நித்தியமாக நிலையாக என்றும் எங்கும் இருப்பது பரம்பொருள் ஒன்றைத் தவிர வேறெதுவும் இல்லை.  
     
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -282
ஆவதும் பரத்துளே அழிவதும் பரத்துளே
போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே
தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே
யாவரும் பரத்துளே யானும் அப் பரத்துளே.
.
எல்லாம் ஆவதும், அழிவதும் பிறப்பதும், இறப்பதும் மூவரான தேவரும் எட்டுத் திசைகளும் இவ்வுலகில் உள்ள யாவரும் நான் என்ற யானும், யாவும் பரமாகிய பொருளுக்கு
ள்தான்  அமைந்து இருக்கிறது. அம்மெய்ப்பொருள் ஒன்றிலிருந்தே அனைத்தும் தோன்றி, அதினாலேயே வாழ்ந்து அதிலேயே மறைகின்றது என்ற உண்மையை தெளிந்துர்ந்து, அப்பரம் பொருளை அறிந்து யோக ஞான சாதகம் செய்து அதையே தியானித்து உய்யுங்கள்.  

****************************************************
சித்தர் சிவவாக்கியம் -283
ஏழுபார் எழுகடல் இபங்கள் எட்டு வெற்புடன்
குழுவான் கிரி கடந்து சொல்லும் ஏழுலகமும்
ஆழிமால் விசும்பு கொள் பிர்மா
ண்ரண்ட அண்டமும்
ஊழியான் ஒளிக்குளே உதித்துடன் அடங்குமே.
 
  அதள, விதள, சுதள, தளாதள, சுரதள, பாதாள  என்ற கீழ் ஏழு உலகங்களும், எழுகின்ற கடல்களும், எட்டுத் திக்குகளும் வெப்பமும், உடம்பில் உள்ள உயிர் வான், மலை கடந்து நிற்பதாக சொல்லும் பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் ஆகிய ஏழு மேல் உலகங்களும், ஆழ்கடலில் பள்ளி கொண்ட விஷ்ணுவும் இன்னம் ஆகாயத்தில் உள்ள பிர்மா
ண்ரண்ட அண்டங்கள் யாவுமே ஊழிக் காலத்தில் ஒளியாகி சோதிக்குள்தான் ஒடுங்குவதும் பின் உதிப்பதும். இப்படி அனைத்தும் பெருஞ் சோதியாகிய ஒளியில் இருந்தே உதிக்கின்றன. அந்த ஒளிக்குள்தான் ஒடுங்குகின்றன என்பதனை அறிந்துணர்ந்து அப்பெரோளியாக ஈசன் உனக்குள்ளும் சோதியாக இருப்பதை தெளிந்து தியானியுங்கள்.   

****************************************************

சித்தர் சிவவாக்கியம் - 284
கயத்து நீர் இறைக்குறீர் கைகள் சோர்ந்து நிற்பதேன்
மனத்துள் ஈரம் ஒன்றில்லாத மதி இலாத மாந்தர்காள்
அகத்துள் ஈரம் கொண்டு நீர் அழுக்கறுக்க வல்லிரேல்
நினைத்திருந்த சோதியும் நீயும் நானும் ஒன்றலோ.  

 .
மனதில் ஈவு இறக்கம் ஏதுமில்லாத அறிவில்லா மனிதர்களே!
கிணற்றில் உள்ள தண்ணீரை வெறுங் கயிற்றால் மட்டும் இறைத்தால் உங்கள் கைகளில்தான் வலி ஏற்பட்டு சோர்ந்து நிர்ப்பீரேயன்றி அந்நீரை வெளிக் கொணர்ந்து இறைக்க முடியாது. உங்கள் அகத்திற்குள்ளேயே அன்பு எனும் நீரை ஊற்றி பிறப்பதற்கு முன்பும் பிறந்த பின்னும் செய்த பாவங்கள் என்னும் அழுக்கை அறுத்து தியானிக்க வல்லவர்களானால் நீங்கள் நினைவால் நினைத்திருக்கும் சோதியும், நீயானதும் நான் ஆனதும் ஒரே பிரம்மமே என்ற உண்மை விளங்கும். 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 285
நீரிலே பிறந்திருந்து நீர் சடங்கு செய்கிறீர்
ஆரை உன்னி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்தெழும்
சீரை உன்ன வல்லிரேல் சிவ பதம் அடைவிரே.

நீரிலே உருவாகியதே இவ்வுடம்பு என்பதை அறிந்து கொள்ளாமல் நீரிலே இறங்கி நின்று நீரை அள்ளிவிட்டு சடங்குகள் செய்து இறையை உணராமல் வீணாக காலத்தை கழிக்கிறீர்கள். இவ்வுடலில் நீரே வேறாகவும், உயிராகவும் இருப்பதை அறிந்து அதில் வித்தாக உள்ள மெய்ப்பொருளை உணர்ந்து அந்த வித்திலே முளைத்தெழுந்த சோதியில் சிகாரத்தினால் சீராக மனதை நிறுத்தி திளைத்து தியானித்து தவம் புரிய வல்லவ்ர்களானால் சிவபதமாகிய ஈசன் திருவடியை சேர்ந்து ஆனந்தம் அடைவார்கள்.  
       
 
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!