Search This Blog

Dec 8, 2011

சிவவாக்கியம் (256-260) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (256-260)


சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -256
ஆதி கூடு நாடி ஓடி காலை மாலை நீரிலே
சோதி மூலமான நாடி சொல்லிறந்த தூவெளி
ஆதிகூடி நெறியறிந்த அகாரமாதி ஆகமம்
பேத பேதம் ஆகியே பிறந்துடல் இறந்ததே.  
 

ஆதியானதே நம் உடல் உயிரில் தச நாடிகளாகவும், தச வாயுக்களாகவும் ஓடி இரவு பகலாக இயங்கி நீராக நிற்கின்றது. சோதியான ஈசன் மூலமான சுழுமுனை நாடியில் சொல்லிறந்த மவுனமாக சுத்த வெளியான ஆகாயத்தில் உறைகின்றான். ஆதியான ஒரேழுத்தே கூடி அகாரம் என்ற முதல் எழுத்தாகி வேதம் ஆகமம் ஆகிய அனைத்தும் பல நெறிகளும் தோன்றியது. பரம்பொருளாகிய சிவசக்தியின் திருவிளையாடல்களாலேயே பல்வேறு பேதங்களுடன் கூடிய உயிர்கள் யாவும் தோன்றி பிறந்து வளர்ந்து பின் உடம்பு இறக்கின்றது. ஆதலால் மீண்டும் பிறவாதிருந்திடவும் உடலைவிட்டு உயிர் பிரியாதிருந்து இறைவனைச் சேர்ந்திடவும் தியானம் செய்யுங்கள்.   
    
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -257 
பாங்கினோடு இருந்து கொண்டு பரமன் அஞ்செழுத்துளே
ஓங்கி நாடி மேல் இருந்து உச்சரித்த மந்திரம்
மூங்கில் வெட்டி நார் உரித்து மூச்சில் செய் விதத்தினில்
ஆய்ந்த நூலில் தோன்றுமே அறிந்துணர்ந்து கொள்ளுமே.  


ஈசன் பஞ்சாட்சரத்தினுள்ளே பாங்காக இருந்து கொண்டிருக்கின்றான். ஓங்காரத்தினுள்ளும் ஈசனை உணர்ந்து சுழுமுனையின் மேலிருந்து அவனை அடைய நாடி 'ஓம் நமசிவய' என்ற அஞ்செழுத்து மந்திரத்தை ஓதி தியானியுங்கள். ஒரே வகையான மூங்கில் மரங்களை வெட்டி எடுத்து வந்து அதிலிருந்தே நார் உரித்து முறம், கூடை, தட்டு போன்றவைகள் செய்யப்படுவதைப்போலவே ஒரே பிரம்மத்திலிருந்தே அனைத்து உயிர் உடல்களும் அமைந்துள்ளதை உணருங்கள். இதனை தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருக்குறள், திருப்புகழ், திருவருட்பா போன்ற சிறந்த நூல்களிலும், சித்தர்கள் ஆராய்ந்து அனுபவித்துரைத்த நூல்களிலும் சொல்லியுள்ளபடி அறிவை அறிந்து உணர்ந்து கொண்டு பின்பற்றுங்கள்.
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -258
புண்டரீக மத்தியில் உதித்தெழுந்த சோதியை
மண்டலங்கள் மூன்றினோடு மண்ணுகின்ற மாயனை
அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லிரேல்
கண்ட கோயில் தெய்வம் என்று கைஎடுப்பது இல்லையே.
 

புண்டரீகம் - இருதயத் தாமரை;
இருதயத் தாமரையாக விளங்கும் ஆன்மாவின் நடுவில் உதித்து எழுந்து நிற்கும் சோதியே ஈசன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவன் சந்திர, சூரிய, அக்னி என்ற மூன்று மண்டலங்களிலும் பின்னிப் பிணைந்து மாயையால் மறைந்து நின்று கொண்டிருக்கின்றான் . அண்டத்தில் உள்ளவை யாவும் தன் பிண்டத்திலும் உள்ளதை உணர்ந்து அச்சோதியை சார்ந்து மெய்ப்பாடுடன் தியான தவம் செய்பவர்கள் கண்டதே கோயில் என்பதயும், உள்ளே நடுவாக இருக்கும் சோதியே தெய்வம் என்பதையும், தெள்ளத் தெளிவாக தெரிந்து கொண்டு பிறவற்றை கையெடுத்து வணங்கமாட்டார்கள்.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் - 259
அம்பலங்கள் சந்தியில் ஆடுகின்ற வம்பனே
அன்பனுக்குள் அன்பனாய் நிற்பன் ஆதி வீரனே
அன்பருக்குள் அன்பராய் நின்ற ஆதி நாயனே
உண்பருக்கு உண்மையாய் நின்ற உண்மை உண்மையே.
 .
திருச்சிற்றம்பலத்திலும், பொன்னம்பலத்திலும், எப்போதும் எனக்குள் ஆடிக்கொண்டிருக்கும் நடராஜன் நீயே. உன்னை அன்பால் நினைக்கும் அன்பனுக்குள், ஆன்மாவில் அன்பனாய் நிற்கும் ஆதியும் நீ, வீரனும் நீ, அன்பர்கள் எனும் அடியார்கள் யாவரிலும் அன்பே சிவமாய் நின்ற மெய் பொருளான நாயகன் நீ. உன் மெய் பக்தர்களுக்கு நீ உண்மையாக கட்சி தந்து ஆட்கொண்டது யாவும் உண்மையே. அந்த உண்மையே உண்மை என்பதை உணர்ந்து தியானியுங்கள்.
 
     
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 260
ண்லாவது ஏதடா அறிந்துரைத்த மந்திரம்
ண்லாக வந்தவன் சகல புராணம் கற்றவன்
கண்ணனாக வந்தவன் காரணத் துதித்தவன்
ண்ணதாவது ஏதடா உண்மையான மந்திரம்.
 

அண்ணலாக வருவது குருவே. அவர் அறிந்து உபதேசித்த மந்திரம் மெய்ப்பொருளாகிய பஞ்சாட்சரம். அதுவே தானாக தணலாக வந்தது. ஆகவே சகல புராங்களையும் தத்துவங்களையும் உள்ளடக்கி கற்றது அதுவே. கண்ணனாக வந்தது. அதுவே யாவிற்கும் காரணமாய் உதித்தது. யாவருக்கும் ஒரெழுத்தாகி ஒன்றாக உள்ளது எதுவோ அதுவே உண்மையான மந்திரம் என்பதை அறிந்து, அது ஊமை எழுத்தாக இருப்பதை உணர்ந்து, அந்த ஒன்றையே பற்றி தியானியுங்கள்.
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!