Search This Blog

Dec 8, 2011

சிவவாக்கியம் (246-250) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (246-250)


சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -246
அன்னை கர்ப்பஅறை அதற்குள் அங்கியின் பிரகாசமாய்
அந்தறைக்குள் வந்து இருந்து அறிய விந்து ரூபமாய்
தன்னை ஒத்து நின்ற பொது தடையருத்து வெளியதாய்
தங்கநற் பெருமை தந்து தலைவனாய் வளர்ந்ததே.  
 

தாயின் கர்ப்ப அறியினுள் தீயின் பிரகாசத்துடன் வந்த விந்து அங்கிருந்து நாதத்துடன் சேர்ந்து உருவாக்கி உடம்பாக வளர்கிறது. அது பூரணமாக வளர்ச்சியைப் பெற்று தன்னைப் போல் கை, கால், தலை, மெய்யாகவும் ஒத்து தடையாவையும் அறுத்து வெளி வருகிறது. பின் அதுவே இப்பூமியில் தங்கி வளர்ந்து பல பெருமைகளையும் பெற்றுத் தலைவனாகவும் வாழ்கிறது. எல்லாம் விந்து உதித்தபோதே வந்துதித்த சோதியில்தான் என்பதை அறியுங்கள். தாயின் வயிற்றில் சிசு உருவானபோதே எல்லாம் வரையறுக்கப்பட்டு விடுகிறது என்பதனை உணர்ந்து சிந்தித்து இரவா நிலையடைய முயலுங்கள். 
    
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -247 
உன்னையற்ப நேரமும் மறந்திருக்கலாகுமோ
உள்ளமீது உறைந்தேனை மறைப்பிலாத சோதியை
பொன்னை வென்ற பேரொளிப் பொருவிலாத ஈசனே
பொன்னடிப் பிறப்பிலாமை என்று நல்க வேணுமே.


இறைவா! உன்னை ஒரு நொடி நேரம்கூட என்னால் மறந்து இருக்க முடியாது. உள்ளம் எனும் கோயிலிலே உறைந்து மறைப்பில்லாமல் வெட்ட வெளியான சோதியாக என்னுள் விளங்கும் ஈசனே! பொன்னையும் மிஞ்சி சொக்கத் தங்கமான பேரொளியாக பொருந்தி விளங்கும் ஈசனே! உன் பொன்னார் திருவடி என் தலை மேல் வைத்து பிறவா நிலை நான் பெற அருள்புரியவேண்டும். 
 
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -248
பிடித்ததெண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள்
தடித்தகோலம் அத்தைவிட்டு சாதி பேதங் கொண்மினோ
வடித்திருந்ததோர் சிவத்தை வாய்மை கூற வல்லிரேல்
திடுக்கமுற்று ஈசனைச் சென்று கூடலாகுமே.  
 
.  
உமக்குப் பிடித்தமானவைகள் எல்லாம் என்றும் உகக்கு உரியதோ? பிரமமே அனைவரிடமும் தடித்த கோலமாய் இருப்பதை அறியாமல் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற சாதி பேதங்கள் கொள்ளாதீர்கள். உங்களுக்குள்ளேயே ஒரேழுத்தாக வடிவம் கொண்டிருக்கும் மெய்ப் பொருளாகிய சிவத்தின் உண்மைகள் யாவையும் உணர்ந்து தெளிந்து 'ஓம் நமசிவய' என ஓதி தியானம் செய்ய வல்லவர்களானால் முற்றும் அறிந்து தன்னை உணர்ந்து நினைவால் நினைந்து ஈசனிடம் சென்று கூடலாம்.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் - 249
சத்தி நீ தயவும் நீ தயங்கு சங்கின் ஓசை நீ
சித்தி நீ சிவனும் நீ சிவாயமாம் எழுத்து நீ
முத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ
அத்தி பூரம் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.
 .
சக்தியான வாலை நீ, தயாவாகிய கருணை நீ, விஷ்ணுவின் சங்கின் ஓசை நீ, சித்தியாகிய வெற்றி நீ, சீவனில் ஆடும் சிவனும் நீ, சிவாயநம எனும் அஞ்செழுத்தும் நீ, முத்தி தருபவன் நீங, என்னுயிரில் முதலாக விளங்கும் ஆதி நீ, பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் நீ, அத்தீயாக பூரணமாய் என்னுள் இருக்கும் சோதியான ஈசனே! நீ எனக்குள் சிவமாக மெய்ப்பொருளாக இருப்பதை அறிந்து உணர்ந்து கொண்டேன்.
 
     
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 250
சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திரச் சழுக்கரே
பொஸ்தகத்தை மெத்தவைத்து போதமோதும் பொய்யரே 

நிட்டை ஏது ஞானமேது நீரிருத்த அக்ஷரம்
பட்டை ஏது சொல்லிரே பாதகப் படரே

பட்டுச்சட்டை பளபளக்க அணிந்து கொண்டு கழுத்தில் பொன்மணி மாலைகள் மின்ன வலம் வந்து வாய்ஞானம் பேசும் சாத்திரச்சழுக்கரே! புத்தகங்கள் யாவையும் மொத்தமாக நிரம்பப் படித்து அதனால் அறியும் அறிவால் ஞான போதனை செய்யும், மெய்யை அறியா பொய்யர்களே! நிட்டை என்பது எது? ஞானம் என்பது எது? திருநீறாக தெய்வம் இருந்த அட்சரம் எது? பட்டை போடுவது எதற்காக என்பதை எல்லாம் சொல்லத் தெரியாது, பாதகங்களை செய்து உலகில் கபட வேடம் போட்டு திரியாதீர்.உண்மையை நீங்களும் உணர்ந்து உலகிற்கும் போதனை செய்யுங்கள்.
 

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!