Search This Blog

Dec 4, 2011

சிவவாக்கியம் (236-240) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (236-240)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -236
உருவ நீர் உறுப்பு கொண்டு உருத்தரித்து வைத்திடும் 
பெரியபாதை பேசுமோ பிசாசை ஒத்த மூடரே
கரிய மாலும் அயனுமாக கா
ணொணாத கடவுளை
உரிமையாக உம்முளே உணர்ந்துணர்ந்து கொள்ளுமே.  

உருவாக வந்த நாத விந்து நீர் கை கால் கண் காத்து மூக்கு வாய் என்ற உறுப்புக்களாக வளர்ந்து உடம்பு வெளிவருகின்றது. பற்பல வழிக்களிலும் சென்று இறைவனுடன் பேசுவதாகக் கூறும் பிசாசைப் போல் அங்கும் இங்கும் அலைந்து திரியும் மூடர்களே! மாலு
ம் பிரமனும் தேடிக் காண முடியாத கடவுள் ஈசனை உனக்குள்ளேயே கண்டு உனக்கு உரிமையானாக உள்ளதை உணர்ந்து நினைந்து நினைந்து தியானம் செய்யுங்கள்.
    
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -237 

பண்ணி வைத்த கல்லையும் பழம் பொருள் அதென்று நீர்
எண்ண முற்றும் என்ன பேர் உரைக்கிறீர்கள் எழைகாள்
பண்ணவும் 
படைக்கவும் படைத்து வைத்து அளிக்கவும்
ஒண்ணுமாகி உலகளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே.

மனிதனால் களை நுட்பத்தோடு செய்து வைத்துள்ள சிலைகளுக்கு பற்பல பெயர்களை வைத்து, அதுவே பழமையான மெய்ப்பொருள் என்ற எண்ணம் வைத்துப் பேசிவரும் ஏழைகளே! எதனையும் செய்யவும் உண்டாக்கிப் படைக்கவும், காத்து அளிக்கவும், எதற்கும் ஈடு சொல்ல ஒண்ணாத, இந்த உலகைப் படைத்து காத்து அழிக்கும் ஒன்றாகிய மெய்ப்பொருள் ஆன ஈசனை உங்கள் உள்ளத்திலே நிறுத்தி நினைத்து நிலையாக நின்று தியானியுங்கள்.

 
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -238
நாலதான யோனியுள் நவின்ற விந்தும் ஒன்றதாய்
ஆலதான வித்துளே அமர்ந்தொடுங்கி மாறு போல்
சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம்
மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே! 
 
.  
ஊர்வன, பறப்பன, விலங்கின, மனித என்கின்ற நான்கு வகைப்பட்ட யோனிகளில் இருந்து வருக்கின்ற உயிர் ஒரே விந்தினால்தான் ஆகி நிற்கின்றது. ஒரு சிறிய ஆல விதைக்குள்தான் மிகப் பெரிய விருட்சமான ஆலமரம் ஒடுங்கி அமர்ந்திருந்தது. அவ்வாறே நாத விந்தால் ஆன உயிரே ஒரேழுத்து மந்திரமாக தாயின் கருவில் உற்பனம் ஆகி, உடம்பாக வருகிறது. இதனை அறிந்து வைத்துள்ள மேன்மையான ஞானிகள், குருக்கள் தம் சீடர்களுக்கு விரிவாக விளக்கமாகச் சொல்லித்தர வேண்டும்.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் - 239
அருவமாய் இருந்த போது உன்னை அங்கு அறிந்திலை
உருவமாய் இருந்தபோது உன்னை நான் அறிந்தனன்
குருவினால் தெளிந்துகொண்டு கோதிலாத ஞானமாய்
பருவமான போதலோ பரப்பிரம்மம் ஆனதே.

 .
ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய 'சிவய' என்ற அட்சரத்தில் ஆன்மா அருவமாய் இருந்தபோது அங்கு அன்னையால் கூட உன்னை அறியமுடியவில்லை. நீர், மண் ஆகிய 'நம' என்றதில் சேர்ந்து உருவாக்கி ஐந்தும் சேர்ந்த உடலாகி இருந்தபோது உன்னை நான் அறிந்து கொண்டேன். குரு தொட்டுக்காட்டி சொல்லித்தந்த குறையில்லாத ஞானம் என்னைத் தெளிய வைத்தது. அதை உண்மையாய் உறுதியுடன் கடைப்பிடித்து யோக ஞான சாதகங்களை செய்து வந்ததால்
உரிய கால நேரத்தில் ஈசன் கருனையினால் பரப்பிரம்மம்மான சோதியில் கலந்து நானும் அதுவாக ஆனேன். 
     

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 240
பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறைந்ததைத் தெளிந்ததும்
துறப்பதும் தொடுப்பதும் சுகித்து வாரி உண்பதும்
பிறப்பதும் இறப்பதும் பிறந்த வீடு அடங்குமே.
 
மண்ணில் பிறப்பதும் பின் இறப்பதும் மீண்டும் பிறந்திடாது இறைநிலை அடைந்து இருப்பதும் ஈசன் செயல். தன்னை மறந்தும் நினைந்தும் இருந்ததும், என்னில் மறைந்திருந்த அவனை அறிந்து தெளிந்து யாவையும் துறந்து அவனையே எண்ணித் தவம் புரிந்ததும் அதனால் மெய் ஆனந்தம் கிடைத்து அமிர்தம் வாரி உண்பதும் எல்லாம் பிறக்கவும் இறக்குமாக இருக்கும் பிறந்த வீடாக விளங்கும் உள்ளத்தில் உள்ள மெய்ப்பொருளில் அடங்கியுள்ளது.
 

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!