Search This Blog

Dec 15, 2011

நாலடியார் : பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.

பதினெண் கீழ்கணக்கு:
தமிழகத்தில் சங்கம் மருவிய காலகட்டத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.  பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில்தான் அகம், புறம் தவிர அறநூல்களும் உள்ளது. இவ்வகை அறநூல்கள் எந்த காலத்திலும் ஏற்புடைய தாகும். இணைய வெளிகளில் சில தளங்களில் இந்த நூல்களைப் படிக்கலாம் என்றபோதும் பரவலாக மக்கள் மத்தியில் சேர்வதில்லை.

நூல்வகைகள்: பதினெண் கீழ்கணக்கு நூல்கள் குறித்த வெண்பா: 
"நாலடி,நான்மணி,நா நாற்பது,ஐந்திணை,முப்
பால்,கடுகம், கோவை,பழமொழி, மா மூலம்,
ன்னிலைந் காஞ்சியோடு,ஏலாதி என்பவே
கைந்நிலைய   வாம்கீழ்க்கனக்கு".

 
இத்தொகுதியில் அடங்கிய நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினோரு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று மட்டும் புறத்திணை நூல். இந்நூல்கள் அணைந்ததும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.
 
நீதி நூல்கள்: திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவைநாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக்காஞ்சி,
ஆகிய பதினோரு நூல்கள்.
அகத்திணை நூல்கள்: ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது ஆகிய ஆறு நூல்கள்.
புறத்திணை நூல்கள்: களவழி நாற்பது - ஒரு நூல் மட்டுமே.

************************************************************************
நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவூம் பெயர் பெறும். பல சந்தர்ப்பங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது. வாழ்க்கையின் எளிமையான விடயங்களை உவமானங்களாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது.

கீழ்க்கணக்கு நூல்கள்: அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களையும் குறைந்த அடிகளில் சிறப்புற (நான்குஅடிகளுக்கு மிகாமல்) உரைப்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் இயல்பாகும். சங்ககாலச் சான்றோர்களின் அனுபவ உண்மைகளையே பிற்காலப் புலவர்கள் நீதிக் கருத்துக்களாகப் போற்றினர். நீதி நூல்களில் இலக்கியச் சுவையும் கற்பனையும் குன்றித் தோன்றினாலும் அவை மக்களின் வாழ்வைச் செம்மைப் படுத்தும் சீரிய தொண்டினைச் செய்கின்றன.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்கிற பதினொரு நூல்களும் நீதிநூல்களாகும்.

திருக்குறளும் நாலடியாரும்: நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது. திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது.திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும்.நாலடியாரைத் தொகுத்தவர் பதுமனார். இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலம் (கி.பி.250 ஐ ஒட்டிய காலம்).

"ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி', 'சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது', 'பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்' என்கிற கூற்றுகள் இதன் பெருமையை திருக்குறளுக்கு இணையாக எடுத்தியம்புவன.

நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை கடவுள் வாழ்த்து : 1 அறத்துப்பால்  : 130 பாடல்கள் (13 அதிகாரங்கள்) பொருட்பால்  : 260 பாடல்கள் (26 அதிகாரஙள்) காமத்துப்பால்  : 10 பாடல்கள் (1 அதிகாரம்) மொத்தம்  : 400 பாடல்கள் (40 அதிகாரங்கள்)

எடுத்துக்காட்டு பாடல்கள்:
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு. (2. பொருட்பால், 2.14 கல்வி, 131)
******************************************
உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரின் புணருமாம் இன்பம் - புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்.  (2.25 அறிவுடைமை, 247)

மொழிபெயர்ப்பு: ஆங்கிலத்தில் போப்பையரால் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை உடைத்து இந்நூல். நாலடியார் விக்கிபுத்தகம்:இந்நூலில் உள்ள அனைத்துப் பாடல்களையும் விக்கிநூல்கள்:நாலடியார் விக்கிப்புத்தகத்தில் காணலாம்.
 
மேலும் பயணிப்போம் இனிய நண்பர்களே!!! தமிழ் சங்க இலக்கியங்களைத் தேடி. அடுத்து நாம் காணப் போவது நான்மணிக்கடிகை... அன்புடன் கே எம் தர்மா...

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!