Search This Blog

Mar 25, 2012

திருமந்திரம்>-தந்திரம்04-பதிகம்:07/2. பூரண சத்தி (பாடல்கள்:16-30/30)பகுதி-II






பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 

நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ...........................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம்....பாடல்கள்: 089
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை.....................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:04: நவகுண்டம்....................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:05: சத்தி பேதம்....................பாடல்கள்: 030

நான்காம் தந்திரம்:பதிக எண்:06: வயிரவி மந்திரம்...........பாடல்கள்: 050 நான்காம் தந்திரம்:பதிக எண்:07: பூரண சத்தி....................பாடல்கள்: 030
======================================================(241+030=271)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:07. பூரண சத்தி
 (பாடல்கள்:16-30/30) பகுதி-II

பாடல் எண் : 16
தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
கலைபல ஏன்றிடும் கன்னி என் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.

பொழிப்புரை :    `வழிபாடுகளின் தலைவி` என மேற்கூறப்பட்ட திரிபுரை கொங்கைகள் விம்ம நிற்பவள்; அழிவில்லாத தவத்தைச் செய்யும் தூய நெறியை உடையவள்; நூல்கள் பலவற்றையும் தன்னுள் அடக்கி நிற்பவள் ; என்றும் கன்னியாய் இருப்பவள். அவள் இவ்வுலகில் என் உள்ளத்திலே நீங்காது நிறைந்து நிற்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 17
நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந் தேழுல கும்தொழ
மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி
ஒன்றொனொ டொன்றிநின் றொத்தடைந் தாள.

பொழிப்புரை :   மேற்கூறியவாறு எனது உள்ளத்திலே நிறைந்து நிற்பவளாகிய திரிபுரை, மனத்துக்கு மேலே உள்ளவளாயும், அழியாத மங்கலத்தை யுடையவளாயும் இருப்பவள். தனது பல வகைப்பட்ட நிலைகளுடனும் என் உள்ளத்தில் பொருந்தியும், உலகமெல்லாம் வணங்கும்படி அம்பலத்தில் நின்றும் அவளையே பற்றி நிற்கின்ற என்னிடத்தில் வேறற நிற்க இசைந்து, அங்ஙனமே வந்து நின்றாள்.
==============================================
பாடல் எண் : 18
ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி
சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.

பொழிப்புரை :   அன்பர்களிடத்தில் ஒன்றியிருக்க இசைந்து, அவர்களது உள்ளத் தாமரையிலே அடங்கி நிற்கின்றவளும், அத்தன்மையை உடைய உயர்ந்த பெரிய தலைவனாகிய சிவனிடத்தில் நிறைந்து நிற்பவளும், மனோன்மனியும், நித்திய சுமங்கலியும் ஆகிய திரிபுரை பலவகைச் சித்துக்களையும் உயிர்களிடத்தில் புரிந்து நிற்கின்ற முறையை உலகர் ஆராய்ந்து அறிகின்றார்களில்லை.
==============================================
பாடல் எண் : 19
உணர்ந்துட னேநிற்கும் உள்ளொளி யாகி
மணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும்
புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்
கணிந்தெழு வார்க்குக் கதிஅளிப் பாளே.

பொழிப்புரை :   உண்மையை உணர்ந்தவழி விரைய விளங்கும் உள் ளொளியாகிய சிவன் எவ்விடத்தும் சத்தியும், தானுமாய், இயைந்தே நிற்பான். அங்ஙனம் நிற்குங்கால் தம்மை எண்ணுகின்ற வர்கட்கே திரிபுரை நற்கதி வழங்குவாள்.
==============================================
பாடல் எண் : 20
அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு புன்பழம் போல்உள்ளே நோக்கித்
தெளியுறு வித்துச் சிவகதி காட்டி
ஒளியுற வைத்தென்னை உய்யஉண் டாளே.

பொழிப்புரை :   அன்பர்களது உள்ளத் தாமரையை வண்டுபோல விரும்பி உறைகின்றவளும், ஆனந்தமே உருவாய் அழகொடு நிற்பவளும் ஆகிய திரிபுரை, எனது உள்ளம் புளிய மரத்தில் பொருந்திய பழுத்த பழம்போல ஆகும்படி அருள் நோக்கம் செய்து பக்குவப்படுத்திச் சிவஞானத்தைத் தந்து சிவத்தைப் பெறுவித்து, யான் உய்யும் வண்ணம் என்னைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டாள்.
==============================================
பாடல் எண் : 21
உண்டில்லை என்ன உருச்செய்து நின்றது
வண்டில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தன்னொடும்
மண்டிலம் மூன்றுற மன்னிநின் றாளே.

பொழிப்புரை :    காரணங்கட்கெல்லாம் காரணமாய் உள்ள திரிபுரை, சிவத்தோடு மூன்றுலகங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்கின்றாள்; அதனையும், அவளே சமய வாதிகள் `உண்டு` என்றும், `இல்லை` என்றும் தம்முள் மாறுபட்டு வழக்கிட மறைந்து நிற்றலையும், அடியார் கட்கு உருவொடு தோன்றிக் காட்சியளித்தலையும், வளவிய தில்லையின் அம்பலத்துள் நிலைபெற்று நிற்றலையும் உலகர் அறிந்திலர்.
==============================================
பாடல் எண் : 22
நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுட் புகுந்துணர் வாகியே
என்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.

பொழிப்புரை :   சிவனது செயல்களிலெல்லாம் உடன் சேர்ந்தே நிற்கின்ற மேலான சத்தியாகிய திரிபுரை, அச்சிவனோடு உடலும் உயிரும்போலப் பிரிப்பின்றி வாளாதும் இருப்பாள்; செயற்பட்டும் நடப்பாள். மேன்மை பொருந்திய ஞானமே யாகின்ற அவள், முதலில் புத்தகம் ஏந்திய கையினையுடைய நாமகளாய் நின்று எனக்கு நூலறிவைத் தந்தும், பின்பு எனது உணர்வினுள் உணர்வாய் இன்புறச் செய்தும் என்னைத் தன் அடியவனாக ஏற்றுக்கொண்டாள்.
==============================================
பாடல் எண் : 23
ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் டாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னி வாய்த்தோத்திரங்கள் சொல்லுமே.

பொழிப்புரை :   எங்கள் தலைவியாகிய திருபுரையே புத்தகத்தைக் கையில் ஏந்தி யிருக்கும் நாமகளாகி நிற்பவள். அந்நிலையில் அவளது நிறம் பளிங்கு போல்வது. இருக்கை வெண்டாமரை மலர். கையில் உள்ள புத்தகமும் இசையோடு கூடிய திருப்பாட்டு எழுதப்பட்டது. ஆதலால், அவளைப்பிறள் ஒருத்தியாக நினையாது திரிபுரையாகவே அறிந்து, அவளது பாதமாகிய மலர்களைச் சென்னியில் சூடிக் கொள்ளுங்கள்; வாயால் அவளது புகழ்களைச் சொல்லுங்கள்.
==============================================
பாடல் எண் : 24
தோத்திரம் செய்து தொழுது துணையடி
வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிரும்
பார்த்திடும் அங்குச பாசம் பசுங்கரும்
பார்த்திடும் பூப்பின்னை ஆகுமாம் ஆதிக்கே.

பொழிப்புரை :   காணப்படுகின்ற அங்குச பாசங்கள் ஈரமுடைய கரும்பினாலாகிய வில், அதன்கண் பொருத்தப்படும் பூவாகிய கணைகள், இவை ஆதிசத்தியாகிய திரிபுரைக்கு உரிய அடையாளங்க ளாகும். அவைகளை அறிந்து, அவளது இரண்டு பாதங்களும் உங்கட்குக் கிடைத்தற் பொருட்டு அவளைத் தோத்திரித்தும், வணங்கியும் வழிபடுதற் காகவே உலகில் வாழ்வீராக.
==============================================
பாடல் எண் : 25
ஆதி விதம்மிகுத் தண்டந்த மால்தங்கை
நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பலகாற் பயில்விரேல்
சோதி மிகுத்துமுக் காலமும் தோன்றுமே.

பொழிப்புரை :   ஆதி சத்தியின் பேதங்கள் அனைத்துமாய் உலகத்தைச் சார்ந்து நிற்கின்றவளும், `திருமாலின் தங்கை` எனப்படுபவளும், நீதியாளர்களது நெஞ்சத் தாமரையில் விளங்குபவளும் ஆகிய திரிபுரையது மந்திரத்தை, நெஞ்சில் இருத்திப் பலமுறை கணிப்பீர்களாயின், அறிவு விரிவுற்று, முக்கால நிகழ்ச்சிகளும் ஒரு காலத்திதே உங்கட்கு விளங்குவனவாகும்.
==============================================
பாடல் எண் : 26
மேதாதி ஈரெட்டு மாகிய மெல்லியல்
வேதாதி நூலின் விளங்கும் பராபரை
ஆதார மாகியே ஆய்ந்த பரப்பினள்
நாதாதி நாதத்து நல்லரு ளாளே.

பொழிப்புரை :   திரிபுரை, மேதை முதலிய பிராசாத கலைகள் பதினாறுமானவள்; வேதம் முதலிய நூல்களின் பொருளாய் விளங்குபவள்; `இலயம், போகம்` என்னும் மேல் நிலையிலும் `அதிகாரம்` என்னும் கீழ் நிலையிலும் இருப்பவள்; எல்லாப் பொருள் கட்கும் நிலைக்களமாய் நுணுகிப் பரந்த வியாபகத்தை உடையவள்; நாதத்திற்கு முதலாகிய பரநாதத்தில் நிற்கும் அருள் வடிவானவள்.
==============================================
பாடல் எண் : 27
அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர்
பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவன் யானே.

பொழிப்புரை :   மனிதர்களே, நான் மயக்கம் பொருந்திய என் மனத்தை மாற்றி உண்மையை உணரப் பெற்ற அதன்கண், புவனங்கள் அனைத்துமாய் நிற்றல் பற்றி, `புவனை` எனப்படுகின்ற திரிபுரைக்குத் தலைவனாகிய சிவனது, அரிய பொருளாய்ப் பொருந்திய செம்மையான திருவடிகளையே போற்றுவேன்; உங்களில் அருள் பெற்றவரா யுள்ளோர் என்னுடன் வாருங்கள்; அனைவரும் ஒருங்கு கூடிப் போற்றுவோம்.
==============================================
பாடல் எண் : 28
ஆன வராக முகத்தி பதத்தினில்
ஈனவ ராகம் இடிக்கும் முசலத்தோ
டேனை எழுபடை ஏந்திய வெண்ணகை
ஊனம் அறஉணர்ந் தார்உளத் தோங்குமே.

பொழிப்புரை :   திரிபுரை, ஒறுப்பிற்கு ஏற்ற வராக முகத்தை உடையவள்; இழிகுணம் படைத்த தீயோரது உடலங்களைக் காலத்தில் அழிப்பாள்; உலக்கையோடு மற்றும் ஏழு ஆயுதங்களை ஏந்தி இருப்பாள்; சிரித்த முகத்தையுடையவள். தங்கள் துன்பங்களை நீக்க வேண்டித் தியானிப்பவர்களது உள்ளத்தில் அவள் இவ்வாறு விளங்குவாள்.
==============================================
பாடல் எண் : 29
ஓங்காரி என்பாள் அவள்ஒரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
இரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே.

பொழிப்புரை :   பரவிந்துவாய் நிற்கின்ற சிவசத்தியே `ஒரு கன்னிகை` எனச் சொல்லவும், பச்சை நிறத்தையுடைய திருமேனியளாக எண்ணவும் படுகின்றது. ஏனெனில், அஃது எழுச்சிபெற்றுப் பரநாத வடிவினனாகிய இறைவனோடு கூடிச் சதாசிவன் முதலிய ஐவரைக் கால்வழியினராகத் தோற்றுவித்து, `ஹ்ரீம்` என்னும் வித்தெழுத்தை இடமாகக்கொண்டு நன்கு பயனளித்து நிற்றலால்.
==============================================
பாடல் எண் : 30
தானே தலைவி எனநின்ற தற்பரை
தானே உயர்வித்துத் தந்த பதினாலும்
மானோர் தலமும் மனமும்நற் புத்தியும்
தானே சிவகதித் தன்மையு மாமே.

பொழிப்புரை :   :  உயிர்களால் பொதுப்பட `அது` எனக் கூறப்பட்ட தலைவியாய், அவ்வுயிர்கட்கு மேலே இருப்பவளும், ஐந்தொழிற்கும் முதல்வியும், சுத்த மாயை அசுத்த மாயைகளின் காரியங்கள் பதினான்கும், பிரகிருதியும், அதன் காரியங்களாகிய அந்தக்கரணம் முதலியனவுமாய் நின்று உயிர்களைப் பந்திப்பவளும், பின் அவற்றினின்றும் நீக்கி வீட்டை எய்துவிப்பவளும் எல்லாம் திரிபுரையே ஆவள்.
==============================================
மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

Mar 21, 2012

திருமந்திரம்-தந்திரம்04: பதிகம்:07/1. பூரண சத்தி (பாடல்கள்:01-15/30)பகுதி-I






 



பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 

நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ............................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம்...பாடல்கள்: 089
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை.....................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:04: நவகுண்டம்....................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:05: சத்தி பேதம்....................பாடல்கள்: 030

நான்காம் தந்திரம்:பதிக எண்:06: வயிரவி மந்திரம்..........பாடல்கள்: 050
நான்காம் தந்திரம்:பதிக எண்:07: பூரண சத்தி....................பாடல்கள்: 030
======================================================(241+030=271)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:07. பூரண சத்தி
(பாடல்கள்:01-15/30) பகுதி-I
பாடல் எண் : 1
அளந்தேன் அகலிடத் தந்தமுன் ஈறும்
அளந்தேன் அகலிடத் தாதிப் பிரானை
அளந்தேன் அகலிடத் தாணொடு பெண்ணும்
அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே.

பொழிப்புரை :   சத்தியது அருட் பெருமையை நான் சிந்தித்து தெளிந்தேன். அதனானே, உலகத்திற்கு ஆதியும், அந்தமும் ஆன பொருளினையும், உலகத்தார் பலபடக் கூறுகின்ற முதற்கடவுளையும், உலகில் உள்ள உயிர்களின் இயல்பையும் என் அறிவின் கண் அகப்படும்படி நன்கு உணர்ந்தேன்.
==============================================
பாடல் எண் : 2
உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே.

பொழிப்புரை :   பல ஊழிகளையும் ஆக்குபவளாகிய சத்தியை உணர்தலே `பேரறிவு` எனப்படும் முற்றுணர்வாகும். இதனை உணராதவர் சிவனையும் உணராதவரே. தன்னை அடைகின்ற புண்ணியம் உடையவர்களைத் தனது அருள்வடிவாகச் செய்கின்ற சத்தி, அங்ஙனம் பலரைப் புண்ணியராகச் செய்தற்கு ஆக்கியுள்ள வழி பிராணனைக் கும்பிப்பதே.
==============================================
பாடல் எண் : 3
கும்பக் களிறைந்தும் கோலொடு பாகனும்
வம்பில் திகழும் மணிமுடி வள்ளலும்
இன்பக் கலவி இனிதுறை தையலும்
இன்பக் கலவியுள் இன்பமுற் றாரே.

பொழிப்புரை :   மத்தகத்தையுடைய களிற்றியானைகளாகிய ஐந்து புலன்களும், அவற்றை மனமாகிய கோலால் செலுத்துகின்ற பாகனாகிய உயிரும், அவ்யானைகட்கும், பாகனுக்கும் தலைவனும், அரசனாகிய சிவனும், அச்சிவனோடு இன்பக் கலவி செய்து இனிதே உறையும் அரசியாகிய சத்தியும் இனிதாகிய கூட்டத்தில் இன்ப முற்றிருக்கின்றனர்.
==============================================
பாடல் எண் : 4
இன்பக் கலவியில் இட்டெழு கின்றதோர்
அன்பிற் புகவல்ல னாம் எங்கள் அப்பனும்
துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள்
என்பிற் பராசத்தி என்னம்மை தானே.

பொழிப்புரை :   எங்கள் தந்தையாகிய சிவன் ஆணும், பெண்ணு மாய உயிர்களைக் காமக் கூட்டத்தில் செலுத்தி, அதுகாரணமாக எழுகின்ற அன்பினையே வாயிலாகக்கொண்டு அவ்வுயிர்களின் உள்ளத்தில் புகுந்து நலம்செய்யும் தன்மையை உடையவன். என் தாயாகிய சத்தி, உயிர்கள் துன்ப மயமாகிய கருப்பைக் குழம்பில் அகப்பட்டுத் துன்புறுகின்ற அவ்வுடம்பில் தானே அவற்றின் சுழுமுனை நாடியிற் பொருந்தி நலம் புரிகின்றவளாவள்.
==============================================
பாடல் எண் : 5
என் அம்மை என் அப்பன் என்னும் செருக்கற்று
உன் அம்மை ஊழித் தலைவன் அங்குளன்
மன் அம்மை யாகி மருவி உரைசெய்யும்
பின் அம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே.

பொழிப்புரை :   உடல்வழிப்பட்டு, `என் தாய், என் தந்தை` எனக் கூறி உலகியலில் மயங்குகின்ற மயக்கத்தை விடுத்து நினைத்தவழி, உண்மைத் தாயாய் ஊழிக் காலத்தும் அழியாத உயிர்த் தலைவன் அவ்விடத்தே உளனாவன். இனி, `அத்தலைவனாவான் யாவன்` எனின், முதலிலே திரோதான சத்தியாய்ப் பொருந்தி, உண்மையை மறைத்து நின்று, பின் அருட் சத்தியாகிய உண்மையை விளக்குகின்ற சிவனேயாம்.
==============================================
பாடல் எண் : 6
தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன்
பார்மேல் இருப்ப தொருநூறு தானுள
பூமேல் உறைகின்ற போதகி வந்தனள்
நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே.

பொழிப்புரை :   காரணக் கடவுளர்களது வரிசையில் முதற்கண் பிருதிவி அண்டத்தின் மேல் இருக்கின்ற பிரமன் அவ்வாறிருப்பது நூற்றிதழ்த் தாமரை மலரின் மேலேயாம். அவனுக்குத் துணைவியாய் வெண்டாமரைமேல் வாணி அமர்ந்திருக்கின்றாள். இவையெல்லாம் வாகீசுவரியாய் நிற்கின்ற திரோதான சத்தியது ஆணையாலேயாம்.
==============================================
பாடல் எண் : 7
ஆணைய மாய்வருந் தாதுள் இருந்தவர்
மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின்
பாணைய மாய பரத்தை அறிந்தபின்
தாணைய மாய தனாதனன் தானே.

பொழிப்புரை :   திரோதான சத்தியின் வசமாய் வருந்தாது பற்றற்றுத் திருவருளில் இருப்பவர். அதன் மேலும், எப்பொழுதும் பெரிய ஐயத்தையே கொண்டு அலைவதாகிய மனத்தை அவ்வாறு அலையாமல் ஒருவழிப்படுத்தி எல்லாம் அற்ற இடத்தில் விளங்குவ தாகிய பரம் பொருளை உணர்வார்களாயின், அப்பொருளாகிய சிவன் அப்பொழுது தனது அருட்சத்தியாகிய இயற்கை ஆசனத்தில் விளங்கி நின்று அருள் புரிவான்.
==============================================
பாடல் எண் : 8
தானே எழுந்தஇத் தத்துவ நாயகி
வானேர் எழுந்து மதியை விளக்கினள்
தேனேர் எழுகின்ற தீபத் தொளியுடன்
மானே நடமுடை மன்றறி யீரே.

பொழிப்புரை :   உயிர்களின் முயற்சியாலன்றித் தானே விளங்கி நின்றவளாகிய அருட்சத்தி, இன்ப மழையைப் பொழிகின்ற மேகமாய் நின்று, ஞானத்தை விளங்கச் செய்தாள். இனி, இனிமையைத் தருவதாகிய தேன்போல விளங்கிய அந்த ஞான ஒளியுடனே கூத்தப் பெருமான் செய்கின்ற ஆனந்த நடனத்தைக் கண்டு இன்புற வேண்டுவதுதான் உங்கட்குக் கடமை.
==============================================
பாடல் எண் : 9
அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத்
தறிவான மங்கை அருளது சேரின்
பிறியா அறிவறி வாருளம் பேணும்
நெறியாய சித்தம் நினைந்திருந் தாளே.

பொழிப்புரை :   அருள்வழி நிற்கும் அறிவேயன்றி, மாயா கருவிகளின் வழி நிற்கும் அறிவும்தான் ஐம்புலன்களை நுகர்கின்ற பொழுது அறிவே வடிவான அருட் சத்தியோடு கூடியிருக்கப் பெறு மாயின், உயிர்க்குயிராய் உள்ள சிவத்தையே நினைக்கின்றவருடைய உள்ளத்தையே விரும்பியிருக்கும் தனது முறைமையை அவர்கள் இடத்தும் அருட்சத்தி கொண்டிருப்பாள்.
==============================================
பாடல் எண் : 10
இரவும் பகலும் இலாத இடத்தே
குரவஞ்செய் கின்ற குழலியை நாடி
அரவஞ்செய் யாமல் அவளுடன் தூங்கப்
பருவஞ்செய் யாததோர் பாலனும் ஆமே.

பொழிப்புரை :   `இரவு, பகல்` என்னும் வேறுபாடுகள் இல்லாத ஓர் அதிசய இடத்திலே சென்று அங்கே உள்ளவளாகிய அருட் சத்தியையே நினைந்து, பிறிதொன்றும் செய்யாமல் அவளது அருளுடனே கூடித் தன்னை மறந்திருப்பவன், என்றும் இளையவனாய் இருக்கும் அவள்தன் மகனாய் விளங்குவான்.
==============================================
பாடல் எண் : 11
பாலனு மாகும் பராசத்தி தன்னொடு
மேலணு காவிந்து நாதங்கள் விட்டிட
மூலம தாம்எனும் முத்திக்கு நேர்படச்
சாலவு மாய்நின்ற தற்பரத் தாளே.

பொழிப்புரை :   `முத்திக்கு மூலம்` என்றும், எல்லாவற்றிற்கும் மேலான பொருள்` என்றும் சொல்லப்படுகின்ற அருட்சத்தி, சிவ புண்ணிய மிகுதியால் தனக்குக் கிடைக்க அவளோடு கூடி நின்றவன். அதன் பயனாக மாயா காரியங்கள் பலவும் தன்னை அணுகமாட்டாது நீங்க, இதுகாறும் மாயையின் மகனாய் நின்ற நிலைநீங்கி, அவ்வருட் சத்தியின் மகனாகின்ற பேற்றைப் பெற்று விளங்குவான்.
==============================================
பாடல் எண் : 12
நின்ற பராசத்தி நீள்பரன் றன்னொடு
நின்றறி ஞானமும் இச்சையு மாய்நிற்கும்
நன்றறி யுங்கிரி யாசத்தி நண்ணவே
மன்றன் அவற்றுள் மருவிநின் றானே.

பொழிப்புரை :   `முத்திக்கு மூலமாய் உயிர்களிடத்தில் நிற்பாள்`` என மேற்கூறப்பட்ட அந்த அருட் சத்தியே முன்பு, உயிர்களை உய்விக்க விரும்பும் சிவனுடனே அந்த விருப்ப ஆற்றலாயும், பின், உயிர்களை உய்விக்கும் வழிகளை அறிகின்ற அறிவாற்றலாயும் நிற்பாள். (அப்பொழுதெல்லாம் சிவன் விரும்பியும், அறிந்து நிற்பதன்றிச் செயலில் ஈடுபடுதல் இல்லை.) பின்பு, அவள் நல்லவளாக அறியப்படுகின்ற கிரியா சத்தியாய் நின்ற பொழுதே, சிவன் அம் மூன்று சத்திகளோடும் கூடிநின்று எல்லாச் செயலையும் செய்கின்றவனாவான்.
==============================================
பாடல் எண் : 13
மருவொத்த மங்கையும் தானும் உடனே
உருவொத்து நின்றமை ஒன்றும் உணரார்
கருவொத்து நின்று கலக்கின்ற போது
திருவொத்த சிந்தைவைத் தெந்தைநின் றானே.

பொழிப்புரை :   சத்தியும் சிவனும் மலரும், மணமும் போலக் குண குணித்தன்மையால் இயைந்து, பொருள் ஒன்றேயாய் நிற்கும் உண்மையைச் சிலர் சிறிதும் உணர்வதில்லை. (அதனால், இரு வரையும் வேறு வேறுள்ளவர்களாகக் கருதி, அவர்களிடையே தார தம்மியம் கற்பித்து வாதிடுவர் என்றவாறு) சிவசத்திகள் பற்றிய இவ் வுண்மையை ஒத்துணர்ந்து அவர்களிடத்தில் உணர்வு செல்ல நிற்கும் பொழுதுதான் சிவன் அவ்வுணர்வை அருட்சத்திக்கு ஏற்புடையதாகச் செய்து, அச்சத்தியோடு தானும் அதன்கண் விளங்கிநிற்பான்.
==============================================
பாடல் எண் : 14
சிந்தையி னுள்ளே திரியும் சிவசத்தி
விந்துவும் நாதமும் மாயே விரிந்தனள்
சந்திர பூமி சடாதரி சாத்தவி
அந்தமும் ஆதியும் ஆம்வன்னத் தாளே.

பொழிப்புரை :   மேற்கூறிய பண்பமைந்த உள்ளத்திலே நீங்காது விளங்குபவளாகிய அருட் சத்தியே, மேற்கூறியவாறு ஆதி சத்தியாய் நின்று, நாதம், விந்து முதலிய மாயா காரியங்கள் அனைத்தையும் தோற்றுவித்து, அவைகளில் வியாபித்து நிற்பாள்; பிண்டத்தில் சந்திர மண்டலத்தில் விளங்குவாள்; சடைமுடி தரித்துத் தவக் கோலத்துடனும் காணப்படுவாள். சாத்தேய மதத்திலும் நின்று, அவர்களது தகுதிக்கு ஏற்ப அருள் செய்வாள். அகாரம் முதல் க்ஷகாரம் ஈறாக உள்ள மூல எழுத்துக்களாயும் நிற்பாள்.
==============================================
பாடல் எண் : 15
ஆறி யிருந்த அமுத பயோதரி
மாறி யிருந்த வழிஅறி வார்இல்லை
தேறி யிருந்துநல் தீபத் தொளியுடன்
ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே.

பொழிப்புரை :   தோன்றாது அடங்கியிருந்த, ஞான உருவினளாகிய அருட் சத்தி, அந்நிலைமாறி வெளிப்பட்டுநின்ற நிலையை அறிபவர் உலகருள் ஒருவரும் இல்லை, ஆயினும் புறநோக்கத்தை விடுத்து அகநோக்கத்தைக் கொண்டுள்ளவர்களுக்கு அவள் வெளிப்பட்டு, அவர்களைத் தன் அடியார்களாக ஏற்றுக்கொண்டு ஞான ஒளியின்வழிப் பேரின்பப் பெருக்காய்ச் சுரந்து நிற்கின்றாள்.
==============================================
மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.