Search This Blog

Feb 3, 2012

திருமந்திரம்> பாயிரம் பாடல்கள்:11-20/39 பகுதி-02


பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம்

விநாயகர் வணக்கம் ..................................... பாடல்கள்: 01 
பாயிரம் : பதிக வரலாறு: .............................பாடல்கள்: 39 ... 40
பொழிப்புரை, குறிப்புரை: முனைவர் சி.அருணைவடிவேல் முதலியார்.
பாயிரம்: பாடல்கள் 39 (முதல் பகுதி: 1- 10/39 )



பாடல் எண் : 11
எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்மின் என் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.

பொழிப்புரை :  தன்னைவிட்டு இமையளவும் பிரிய விரும்பாத நந்திகள் நால்வர்க்கும் சிவபெருமான் எதிர்ப்படத்தோன்றி, உலகம் அழிகின்ற ஊழிக் காலத்திலும் நீங்கள் நம்மை வழிபட்டிருப்பீராக என்று அருள்புரிந்தான்.
****************************************************
பாடல் எண் : 12
நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
புத்தியி னுள்ளே புகப்பெய்து போற்றிசெய்
நந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.

பொழிப்புரை : என் ஆசிரியராகிய நந்தி பெருமானது இரு திருவடிகளையும் என் சென்னியிலும், சிந்தையிலும் கொண்டு, வாயினாலும் துதித்து, அவ்வாற்றானே சிவபெருமானது திருவருட் பெருமையை இடைவிடாது சிந்தித்து உணர்ந்து, அங்ஙனம் உணர்ந்த வாற்றால், சிவாகமப் பொருளைக் கூறத்தொடங்கினேன்.
****************************************************
பாடல் எண் : 13
செப்பும் சிவாகமம் என்னுமப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில்ஒரு கோடி யுகமிருந் தேனே.

பொழிப்புரை : உயர்த்துச் சொல்லப்படுகின்ற `சிவாகமம் என்னும் பெயரையுடைய நூலைப் பெற்றபின்பும், அவற்றின் பொருளை உள்ளவாறு உணர்த்துகின்ற நந்திபெருமானது ஆணை வழி, அழிவில்லாத தில்லையம்பலத்தை அடைந்து அங்குச் சிவபெருமான் செய்யும் ஒப்பற்ற நடனத்தைக் கண்டு மீண்டபின், உடம்போடிருக்க உடன்படாத நிலையிலே பலகாலம் உடம்போடு இருந்தேன்.
****************************************************
பாடல் எண் : 14
இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.

பொழிப்புரை :  இந்திரனே, உடன்பாடின்றியும் நான் அவ்வாறு நெடுநாள் உடம்போடிருந்த காரணத்தைக் கூறுகின்றேன்; கேள். எல்லா உலகங்கட்கும் தலைவியாம் அருந்தவமாகிய செல்வியை அடியேன் அன்பினால் விரும்பி உடன் நின்று பணிந்துவந்தேன்.
****************************************************
பாடல் எண் : 15
சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேன்நின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுட னேஉணர்ந் தோமால்.

பொழிப்புரை : இறப்புத் தோன்றாதவனாய் இருந்து வாழ்ந்த அக் காலம் முழுதும் உலகத்தில் விருப்பம் தோன்றாது மனஒடுக்கம் உடையவனாயே இருந்தேன். அவ்வாறிருக்கும் பொழுது, சிவபெரு மானது ஐந்தொழில்நிலை, பொருட்பெற்றி, தமிழ்மொழி, வேதம் என்னும் இவைகளைப் புறக்கணியாது விருப்பத்துடன் கற்று உணர்ந்தேன்.
****************************************************
பாடல் எண் : 16
மாலாங்க னேஇங் கியான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.  

பொழிப்புரை :  மாலாங்கனே, திருக்கயிலையை விட்டு இத்தமிழ்நாட்டிற்கு நான் வந்தகாரணம் கேள். சிவபெருமான் முதற்கண் உமை அம்மைக்கு முதல் நூலாகச் சொல்லிய சிவாகமத்தின் பொருளைச் சொல்லுதற்காகவே வந்தேன்.
****************************************************
பாடல் எண் : 17
நேரிழை யாவாள் நிரதி சயானந்தப்
பேருடை யாள்என் பிறப்பறுத் தாண்டவள்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.

பொழிப்புரை : `உமையம்மை` என்று சொல்லப்படுபவள் வரம்பில் இன்பமாகின்ற பெருமையை உடையவள். அவள் எனது பிறப்பை அறுத்து வீடு தந்து என்னை ஆட்கொண்டவள்; மிக்க புகழை உடையவள்; சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவாவடுதுறை யாகிய இச் சிறந்த திருத்தலத்தைத் தனதாக உடையவள். அவள் திருவடி நிழலில் இதுபொழுது இருக்கின்றேன்.
****************************************************
பாடல் எண் : 18
சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.

பொழிப்புரை :  சீருடையாள் பதம் சேர்ந்தமையால் அவளை ஒருபாகத்தில் உடைய சிவனையும் சேர்ந்திருக்கின்றேன். இத் திருவா வடுதுறை அவளுடையது மட்டுமன்று; அவனுடையதுந்தான். இங்குச் சிவஞானத் திருவின்கீழ் அவனது திருப்பெயர் பலவற்றையும் ஓதித் துதித்துக் கொண்டிருக் கின்றேன்.
****************************************************
பாடல் எண் : 19
இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன்என் நந்தி இணையடிக் கீழே.

பொழிப்புரை :  இங்கும் இவ்வுடம்பிலே பல்லாண்டுகள் இருந்தேன். அங்ஙனம் இருந்த காலம் முழுவதும் சிவஞானப் பேரொளியில்தான் இருந்தேன். அது தேவராலும் வணங்கப்படும் எங்கள் நந்தி பெருமானது திருவடி நிழலேயன்றி வேறில்லை.
****************************************************
பாடல் எண் : 20
பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.

பொழிப்புரை :  முற்பிறப்பில் நன்கு முயல்கின்ற தவத்தைச் செய்யாதவர், பின்னை நற்பிறவியைப் பெறுதல் எவ்வாறு கூடும்! கூடாது. ஆகவே நான்செய்த தவம் காரணமாக இறைவன் என்னைத் தன்னைத் தமிழ்மொழியால் நன்றாகப் பாடும் வண்ணம் செவ்விய முறையால் படைத்தான்.
***************************************************

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா...

திருமந்திரம்> பாயிரம்(பாடல்கள்:01-10/39)பகுதி-01:


பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம்
விநாயகர் வணக்கம் ..................................... பாடல்கள்: 01
பாயிரம் : பதிக வரலாறு: .............................பாடல்கள்:
39 ... 40
பத்தாம் திருமுறை : திருமூலர் - திருமந்திரம் :  237 பதிகங்கள், 3000 பாடல்கள் : பொழிப்புரை, குறிப்புரை: முனைவர் சி.அருணைவடிவேல் முதலியார்.
பாயிரம்: பாடல்கள் 39 (முதல் பகுதி: 1- 10 )

பாயிரம்
பாடல் எண் : 1
கடவுள் வாழ்த்து

ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.

பொழிப்புரை :  ஒருபொருளாய் உள்ளவன் முதற்கடவுளே; வேறில்லை. அவனது அருள், `அறக்கருணை, மறக்கருணை` என இரண்டாய் இருக்கும். அவ் அருள்காரணமாக அவன், `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலைகளில் நிற்பான். நின்று, `அறம், பொருள், இன்பம், வீடு` என்னும் உறுதிப் பொருள் நான் கனையும் தானே உணர்ந்து உலகிற்கு உணர்த்தினான். செவிமுதலிய ஐம்பொறிகளின் வழி நுகரப்படும் ஓசை முதலிய ஐம்புலன்களின் மேல் எழுகின்ற ஐந்து அவாவினையும் வென்றான். `மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை` என்னும் ஆறு அத்துவாக்களாக விரிந்தான். `பிரம லோகம், விட்டு ணுலோகம், உருத்திர லோகம், மகேசுர லோகம், சதாசிவ லோகம், சத்தி லோகம், சிவ லோகம்` என்னும் ஏழுலகங்களுக்கும் மேற்சென்று தானேயாய் இருந்தான். அவனை, நெஞ்சே, நீ அறிந்து அடை.
****************************************************
பாடல் எண் : 2
நுதலிய பொருள்

போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.

பொழிப்புரை :  மலமாசகன்ற தூய உயிரிடத்து நிலைபெற்று விளங்கும் தூயவனும், உலகம் முழுவதற்கும் நலந் தருபவளாகிய அம்மைக்குக் கணவனும், தென்திசைக்குத் தலைவனாம் கூற்றுவனை உதைத்தவனும் ஆகிய சிவபெருமானது பெருமையை யான் துதிமுறையால் கூறுவேன்!
****************************************************
பாடல் எண் : 3
நூற் சிறப்பு

ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கன்என் றேத்திடும் நம்பனை நாள்தொறும்
பக்கம்நின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின் றுன்னியான் போற்றுகின் றேனே.

பொழிப்புரை :  எண்ணில்லாத தேவர்களில் ஒருவனாய் அவர் களோடொப்ப நிற்பவனும், அவ்வாறு நிற்பினும் அவர் அனை வராலும் என்றும் வணங்கப்படுபவனும், தன்னை அடைந்தவர் களாலும் தன் தன்மை முழுதும் அறியப்படாத மேலானவனும், ஆகிய சிவபெருமானது பெருமையை யான் அவனுள் அடங்கிநின்று உணர்ந்து துதிக்கின்றேன்.
****************************************************
பாடல் எண் : 4
அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத் தென்மெய்யைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.

பொழிப்புரை :  மண்ணுலகத்தவராகிய மக்கட்கும், விண்ணுலகத் தவராகிய தேவர்கட்கும் முதலாய் நிற்பவனும், வந்த இடத்திலே எனது உடம்பை விழச்செய்தவனும் ஆகிய சிவபெருமானை நான் பகலும், இரவும் வணங்கியும், துதித்தும் மயக்கத்தைச் செய்யும் இவ்வுலகத் திற்றானே மயக்கமின்றி இருக்கின்றேன்.
****************************************************
பாடல் எண் : 5

பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்
தற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே.
 
பொழிப்புரை :  எங்கள் நந்தி பெருமான், ஆனேறு, மான், மழு என்ப வற்றை விடாது கொண்டுள்ள சீகண்ட பரமேசுரனது உபதேசப் பொரு ளாகிய பொருட் பெற்றியாம் மறைபொருளையும் எனக்கு விளக்கி, தமது ஞானத்தைத் தரும் திருவடிகளையும் அடியேனது தலைமேல் சூட்டியருளினார்.
****************************************************
பாடல் எண் : 6

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே.
 
பொழிப்புரை :  நந்திபெருமானது அருளைப்பெற்ற ஆசிரியன்மார் யாவர் என்று ஆராயுமிடத்து, அவரோடு ஒத்த நால்வரும், சிவயோக முனிவரும், தில்லை அம்பலத்தை வணங்கிய பதஞ்சலி, வியாக்கிர பாதரும் என்ற இவர் என்னொடு கூட எண்மருமாவர் என்பதாம்.
****************************************************
பாடல் எண் : 7

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றேன்
நந்தி அருளாலே மூலனை நாடினேன்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நான்இருந் தேனே.
 
பொழிப்புரை :  நந்தி பெருமானது அருளால் நான், ஆசிரியன் எனப் பெயர்பெற்றேன். பின்பு மூலன் உடலைப் பற்றுக்கோடாகக் கொண்டேன். அவரது அருள் இவ்வுலகில், நேரே எதனைச் செய்யும்? ஒன்றையும் செய்யாது. அதனால், அவரது அருள் வழியை உலகிற்கு உணர்த்த நான் இங்கிருக்கின்றேன்.
****************************************************
பாடல் எண் : 8

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ
டிந்த எழுவரும் என்வழி யாமே.

பொழிப்புரை :  எனது நூலாகிய இத்திருமந்திரத்தைப் பெற்று வழி வழியாக உணர்த்த இருப்பவர், மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், தறிபோன்ற உருவத்துடன் யோகத்தில் இருக்கும் காலாக்கினி, கஞ்சமலையன் என்னும் எழுவருமாவர். இவரே என்வழியினர்.
****************************************************
பாடல் எண் : 9

நால்வரும் நாலு திசைக்கொன்றும் நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதரா னார்களே.
 
பொழிப்புரை :  நந்தி பெருமானுக்கு மாணாக்கராகிய எண்மருள், நந்திகள் எனப்பட்ட நால்வரும் எல்லா உலகங்கட்கும் பொருந்திய ஆசிரியர்களாய், அறம் முதலாக நால்வகைப்பட்டுப் பற்பல வகையாக விரிந்த உறுதிப்பொருள் அனைத்தையும் உணர்ந்து, நான் பெற்ற பேற்றினை உலகம் பெறுவதாக என்னும் பேரருள் உடையராய், அதனால் சிவகணத்துள்ளே ஆசிரியராயினர்.
****************************************************
பாடல் எண் : 10

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே.
 
பொழிப்புரை :  பிறப்பு இறப்புகள் இல்லாத பெருமையை உடைய முக்கட் கடவுள் தனது எல்லையில்லாத பெருமையைப் பிறர்க்குக் காட்டமாட்டானாயினும், அதனை அவன் ஆசான்மூர்த்தி வாயிலாகக் காட்டியது மேற்குறித்த நால்வரோடு, சிவயோகமாமுனி முதலிய மூவர்க்குமேயாம்.
****************************************************

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா...

திருமந்திரம்> : 237 பதிகங்கள், 3000 பாடல்கள்


பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் :: ஒன்று முதல் ஒன்பது தந்திரங்களில் முதல் தந்திரத்தின் 27 பதிகங்களின் விபரங்கள்.:
விநாயகர் வணக்கம் ..................................... பாடல்கள்: 01
பாயிரம் : பதிக வரலாறு: .............................பாடல்கள்: 39 ... 40
முதல் தந்திரம் - 27 பதிகங்கள்:  ..........................................(40+293=333)
பதிகம்: 1. சிவபரத்துவம்.....................:பதிக பாடல்கள்: 56.....96
பதிகம்: 2. வேதச் சிறப்பு........................:பதிக பாடல்கள் 06...102
பதிகம்: 3. ஆகமச் சிறப்பு:.......................பதிக பாடல்கள் 10...112
பதிகம்: 4. உபதேசம்.................................:பதிக பாடல்கள் 30....142
பதிகம்: 5. யாக்கை நிலையாமை.:பதிக பாடல்கள்: 25...167
பதிகம்: 6. செல்வம் நிலையாமை:பதிக பாடல்கள்: 09....176
பதிகம்: 7. இளமை நிலையாமை: பதிக பாடல்கள்: 10....186
பதிகம்: 8. உயிர் நிலையாமை...: பதிக பாடல்கள்: 10........196
பதிகம்: 9. கொல்லாமை................: பதிக பாடல்கள்: 02........198
பதிகம்: 10. புலால் மறுத்தல்.........: பதிக பாடல்கள்: 01........199
பதிகம்: 11. பிறன்மனை நயவாமை: பதிக பாடல்கள்:03..202
பதிகம்: 12. மகளிர் இழிவு...............: பதிக பாடல்கள்: 06........208
பதிகம்: 13. நல்குரவு...............................: பதிக பாடல்கள்: 05....213
பதிகம்: 14. அக்கினி காரியம்............: பதிக பாடல்கள்: 10....223
பதிகம்: 15. அந்தணர் ஒழுக்கம்......: பதிக பாடல்கள்: 14....237
பதிகம்: 16. அரசாட்சி முறை.............: பதிக பாடல்கள்: 10....247
பதிகம்: 17. வானச் சிறப்பு...................: பதிக பாடல்கள்: 02.....249
பதிகம்: 18. தானச் சிறப்பு.....................: பதிக பாடல்கள்: 01....250
பதிகம்: 19. அறஞ்செய்வான் திறம்: பதிக பாடல்கள்: 09...259
பதிகம்: 20. அறஞ்செயான் திறம்....: பதிக பாடல்கள்: 10....269
பதிகம்: 21.அன்புடைமை....................: பதிக பாடல்கள்: 10....279
பதிகம்: 22.அன்பு செய்வாரை அறிவன் சிவன்:பாடல்கள்: 10..289
பதிகம்: 23. கல்வி........................: பதிக பாடல்கள்: 10.................299
பதிகம்: 24. கேள்வி கேட்டமைதல்:பதிக பாடல்கள்:10....309
பதிகம்: 25. கல்லாமை...............///.......: பதிகபாடல்கள்: 10.....319
பதிகம்: 26. நடுவு நிலைமை...............: பதிகபாடல்கள்: 03....322
பதிகம்: 27. கள்ளுண்ணாமை............: பதிகபாடல்கள்: 11 ...333

******************************************************************
பத்தாம் திருமுறை : திருமூலர் - திருமந்திரம் :  237 பதிகங்கள், 3000 பாடல்கள்
பொழிப்புரை, குறிப்புரை: முனைவர் சி.அருணைவடிவேல் முதலியார்.
******************************************************************

விநாயகர் வணக்கம்

பாடல் எண் : 1

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.


விளக்கவுரை :  ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.

குறிப்புரை :  `இந்து` என்பது வடசொல்லாதலின் இன்பெறாது என்று, `இந்து விளம்பிறை` எனப்பாடம் ஓதுவாரும் உளர். `நந்தி` என்பது சிவபெருமானுக்கே பெயராதல் அறிக. திருமூலர் தமது நூலை ``ஒன்றவன்முன்`` எனத் தொடங்கினார் என்பது சேக்கிழார் திருமொழி யாதலின், இது, பிற்காலத்தில் இந்நூலை ஓதுவோர் தாம் முதற்கண் ஓதுதற்குச் செய்து கொண்டது என்க. திருமுறைகளுள் ஒன்றிலும் முதற்கண் விநாயகர் காப்பு இல்லாமையும், சாத்திரங்களிலும் உந்தி, களிறு முதலிய சிலவற்றில் இல்லாமையும் நோக்கத் தக்கன. ``ஒன்றவன்றான் என எடுத்து முன்னிய அப்பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி`` என்பதே சேக்கிழார் திருமொழியாகலின், இந் நூலின் தொடக்கப்பாடல் ``ஒன்றவன்றானே`` என்னும் பாடலே என்பது இனிது விளங்கும்.

======================================================

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா...